அமைச்சர் பௌசி தான் இலங்கையின் அடுத்த பிரதமரா?
அடுத்த பிரதமர் பதவியை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்குத் தந்தால் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளத் தயார் என்று தெரிவித்துள்ளார் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி.
‘பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்வதற்கு 55 ஆண்டு கால அரசியல் அனுபவம் இருக்கிறது. அவ்வாறு பிரதமர் பதவி அளிக்கப்பட்டால், மூப்புக்கு மரியாதை அளிக்கப்படுவதாகவும், இலங்கையில் சிறுபான்மையினருக்கு நீதி வழங்கப்படுவதாகவும் உலகத்துக்கு ஒரு செய்தி சொல்லப்படும்.
சிறுபான்மையினரால் பெரிதும் கவரப்பட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எனக்குப் பிரதமர் பதவியை அளிப்பதன் மூலம், நல்லதொரு முன்னுதாரணத்தை ஏற்படுத்த வேண்டும்” என்றும் அவர் கூறியிருக்கிறார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றாலும் மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிக்கப் போவதில்லை என்றும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் அவரைவிட அந்தப் பதவிக்குப் பொருத்தமான மூத்தவர்கள் இருப்பதாகவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதன் பின்னணியிலேயே அமைச்சர் பௌசியின் இந்தக் கருத்து வெளிவந்திருக்கிறது.