மைத்திரியை தலைவராக ஏற்கோம்! ஐ.ம.சு.மு.வின் தலைவர்கள் ஆவேசம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை நடுநிலை வாதியாக காட்டிக்கொண்டு பக்கச்சார்பாக நடந்து கொள்கின்றார். எமது கட்சியின் தலைவர் எதிர்க் கட்சியை பாதுகாக்க நினைப்பதால் அவரை தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி இரண்டு முகங்களை வெளிப்படுத்துகின்றார். அவர் எதிர் த்தாலும் மஹிந்தவை பிரதமராக்குவோம் எனவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் நேற்று எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின் போதே முன்னணியின் பிரதிநிதிகள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவிக்கையில்;
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விசேட உரை இன்று கட்சிக் குள் இரு வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினதும் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சிக்காக துணை இருக்காது கட்சியை வீழ்த்தி பழிவாங்கவே நினைக்கின்றார். இவரின் கருத்தினால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் எவரும் நிம்மதியாக இல்லை. குறிப்பாக நான் இரண்டு நாட்களாக எனது தூக்கத்தை இழந்துள்ளேன்.
என்னால் ஒருபோதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது. என்னால் மட்டும் அல்ல என்னைப்போல் மனமுடைந்துள்ள எவராலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தலைவராக நினைக்க முடியாது. அவ்வாறான அழுத்தத்தில் நாம் இன்று உள்ளோம். ஜனாதிபதியின் உரையில் முக்கியமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குற்றவாளி என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
அதாவது மத்திய வங்கி நிதி மோசடி குற்றச்சாட்டில் மத்திய வங்கி ஆளுனரை பதவி நீக்கக் கோரி பிரதமருக்கு ஆலோசனை வழங்கியதாக ஜனாதிபதி கூறுகின்றார். அப்படியானால் மத்தியவங்கி ஊழல் உண்மை என்பது நிரூபணம் ஆகியுள்ளது. அதேபோல் மத்திய வங்கி ஆளுநரை நீக்கக் கோரி ஜனாதிபதி தெரிவித்தும் பிரதமர் அவரை காப்பாற்றியுள்ளார். ஆகவே பிரதமரும் குற்றவாளி என்பது மற்றொரு வகையில் நிரூபணமாகின்றது.
ஆகவே குற்றவாளிகளை காப்பாற்றும் செயலை எமது கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டுள்ளார். இவரது அறிக்கையால் இன்று ஐக்கிய தேசியக் கட்சியும், விடுதலைப் புலிகள் இயக்கமும், சர்வதேச சக்திகளும் சந்தோசப்படுகின்றன. ஆனால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உண்மையான ஆதரவாளர்களும், மஹிந்த ராஜபக் ஷவை நேசிக்கும் நல்ல உள்ளங்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்களும் வேதனைப்பட்டுள்ளனர். ஆகவே நாம் எமது கண்டனத்தை தெரிவிக்கின்றோம்.
அதேபோல் ஜனாதிபதி நடுநிலையானவர், ஜனநாயகவாதி என தெரிவித்துள்ளார். கடந்த பல சந்தர்ப்பங்களில் இதனை அவர் வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் அவரை நடுநிலையான தலைவர் என எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் அவர் தனது உரையின் போது இரண்டு சந்தர்ப்பங்களில் தன்னை சுயநலவாதியாக நிருபித்துள்ளார். அதாவது ஒரு சந்தர்ப்பத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நான் நிராகரிக்கின்றேன். ஆனால் கட்சியின் அழுத்தம் காரணமாகவே கட்சிக்குள் இடம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக குறிப்பிட்டார்.
அதேபோல் கட்சி வெற்றி பெற்றாலும் அவரை பிரதமராக்க மாட்டேன் என குறிப்பிடுகின்றார். ஆனால் தான் நடுநிலையானவர் எனவும் கூறுகின்றார். அவர் நடுநிலையானவர் என்றால், ஜனநாயகத்தை ஆதரிப்பவர் என்றால் கட்சியின் ஏகமனதான தீர்மானத்தை எதிர்க்கக்கூடாது. அதேபோல் ஐக்கிய தேசியக் கட்சியை பலப்படுத்த நினைக்கவும் கூடாது. ஆனால் இன்னொரு வகையில் நாம் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கவுள்ளோம்.
அதாவது கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி வெளியிட்ட உரையினை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்புமனு தாக்கலின் முன்னர் வழங்கியிருந்தால் இப்போது எமது கட்சி சிதைவடைந்திருக்கும். எம்மால் இந்தத் தேர்தலுக்கு முகம்கொடுக்க முடியாது போயிருக்கும். ஆனால் நாம் கட்சியாக ஒன்றிணைத்த பின்னரே ஜனாதிபதி இவ்வாறானதொரு கருத்தினை முன்வைத்துள்ளார். அந்த வகையில் நாம் திருப்தியடைகின்றோம்.
மேலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்களாக இருந்து இப்போது ஐக்கிய தேசியக் கட்சியின் துணையை தேடியிருக்கும், உறுப்பினர்களை கட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்க வேண்டும். கட்சிக்கு துரோகம் நினைக்கும் அனைவரையும் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்பதை நாம் கட்சி மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கவுள்ளோம் என்றார்.
இதில் கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிடுகையில்
கடந்த 2௦௦5 ஆம் ஆண்டு இந்த நாட்டை காப்பாற்றவும், நாட்டு மக்களை ஆயுத கலாசாரத்தில் இருந்து காப்பாற்றவும் அனைத்து மக்களும் தலைவர் ஒருவரை தேடினார்கள். அப்போது மஹிந்த ராஜபக் ஷ கிடைத்தார். அவரை அனைத்து மக்களும் ஆதரித்து நாட்டை பலப்படுத்தினர். அதேபோல் 2௦15ஆம் ஆண்டும் மீண்டும் நாட்டை காப்பாற்றவும், சர்வதேச அடிமைத்தனத்தில் இருந்து மக்களை விடுவிக்கவும் மீண்டும் மஹிந்தவை மக்கள் அழைக்கின்றனர்.
ஆட்சி மாற்றத்தின் பின்னர் கடந்த ஆறுமாத காலத்தில் இந்த நாட்டில் ஜனநாயகம் குப்பை தொட்டிக்குள் போடப்பட்டுள்ளது. அபிவிருத்திகள் அனைத்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளன. கள்ளர் கூட்டத்துக்கு நாடு கையளிக்கப்பட்டுள்ளது. இந்தக் கள்ளர் கூட்டத்தை காப்பாற்ற ஜனாதிபதி மைத்திரிபாலவும் துணை போகின்றார். இந்த நிலையில் ரணிலை பாதுகாக்கவே பாராளுமன்றத்தை கலைத்தேன் என ஜனாதிபதி தெரிவித்திருப்பதிலும் சந்தேகம் உள்ளது. குற்றவாளிகளை காப்பாற்றும் முயற்சியும் பெரிய குற்றம் என்பதை மறந்துவிடக் கூடாது.
மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இரண்டு முகங்கள் உள்ளன. அவரை நம்பி வாக்களித்த 62 இலட்சம் மக்களுக்கு ஒரு முகத்தையும், அவரை எதிர்த்து 57 இலட்சம் வாக்களித்த மக்களுக்கு இன்னொரு முகத்தையும் காட்டுகின்றார். இவ்வாறு அவர் சந்தர்ப்பவாதியாக செயற்படுவதை நினைத்து நாம் வேதனைப்படுகின்றோம். அதேபோல் மஹிந்த ராஜபக் ஷவை தோற்கடிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை. அவர் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர். மக்களின் ஆணைக்கு கட்டுப்பட்டாக வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சி உறுப்பினரான உதய கம்மன்பில தெரிவிக்கையில்,
நாட்டில் மக்களின் ஆணையை மீறி தனது சுயநல முடிவுகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுக்க முடியாது. அவர் மக்களின் ஆதரவால் நியமிக்கப்பட்டவர். அவர் மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும். எனவே மஹிந்த ராஜபக்ஷவை மக்கள் ஆதரித்தால், கட்சிக்குள் மஹிந்த ஆதரவு அதிகரித்தால் ஜனாதிபதி மஹிந்தவை பிரதமராக்கியாக வேண்டும். அதேபோல் யார் தடுத்தாலும் நாம் மஹிந்தவை பிரதமராக்கியே தீருவோம் எனக் குறிப்பிட்டார்.