Breaking News

எதிர்க்கட்சி செயலகத்தில் இருந்த மைத்திரியின் படத்தை அகற்றினார் மஹிந்த

கொழும்பு 7இல் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் மாட்டப்பட்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் படம் திடீரென அகற்றப்பட்டுள்ளது.


சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவராக மைத்திரிபால சிறிசேனவே இருக்கும் நிலையில், கொழும்பு 7இல் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் அவரது படம் மாட்டப்பட்டிருந்தது.

எனினும், நேற்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்கள் அங்கு செய்தியாளர் மாநாட்டை நடத்திய போது, மைத்திரிபால சிறிசேனவின் படம் அகற்றப்பட்டு, அங்கு வெற்றிலைச் சின்னத்துடன் கூடிய பதாகை ஒன்று பொருத்தப்பட்டிருந்தது. மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்துக்களை அடுத்து, அவரை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து நீக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

எனினும், கட்சியின் மத்திய செயற்குழுவைக் கூட்ட நீதிமன்றம் மூலம் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, சிறிலங்கா சுதந்திரக் கட்சியினதோ, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினதோ தலைவர் பதவியில் இருந்து மைத்திரிபால சிறிசேனவை நீக்குவதற்குத் தாம் திட்டமிடவில்லை என்று சுசில் பிரேமஜெயந்த தெரிவித்திருந்தார். ஆனாலும், மைத்திரிபால சிறிசேனவின் படம் எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.