இன்றுடன் முடிகிறது வேட்புமனுத் தாக்கல் – மாவட்டச் செயலகங்கள் பரபரப்பு
இலங்கையில் எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று நண்பகலுடன் நிறைவடையவுள்ளது.
பெரும்பாலான கட்சிகள் இன்றே வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளதால், மாவட்டச் செயலகங்களில் கடுமையான நெருக்கடி ஏற்படும் நிலை தோன்றியிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த 6ஆம் நாளே தொடங்கிவிட்ட போதிலும், பெரும்பாலான கட்சிகள் இன்னமும் வேட்புமனுக்களைச் சமர்ப்பிக்கவில்லை.
திடீர் அரசியல் சூழ்நிலைகள் காரணமாக, வேட்புமனுக்களை தயாரிக்க முடியாமலும், ஏற்கனவே தயாரிக்கப்பட்ட வேட்புமனுக்களைத் திருத்தியமைக்க வேண்டிய நிலையிலும் முக்கிய கட்சிகள் இருக்கின்றன.மகிந்த ராஜபக்சவின் வருகையால், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து பலர் வெளியேறியுள்ளதுடன், அவர்கள் ஐதேகவுடன் இணைந்து போட்டியிடவுள்ளனர்.
இது தொடர்பான புரிந்துணர்வு உடன்பாடு நேற்றைய தினமே கையெழுத்தானது. அதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் வேட்புமனு விடயத்தில் குழப்பமடைந்திருந்தது. இதனால், கடந்த வெள்ளிக்கிழமை வரை வேட்புமனுத் தாக்கல் மந்தநிலையிலேயே இருந்து வந்தது. 47 மாவட்டங்களில் போட்டியிடுவதற்கு அரசியல் கட்சிகளும், 11 சுயேச்சைக்குழுக்களும் மாத்திரமே வெள்ளிக்கிழமை வரையில் வேட்புமனுக்களைக் கையளித்திருந்தன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ்ப்பாணம், வன்னி, மட்டமக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் வேட்புமனுக்களை வெள்ளிக்கிழமையன்றே கையளித்திருந்தது. அம்பாறையில் இன்று கூட்டமைப்பின் வேட்புமனுத் தாக்கல் இடம்பெறவுள்ளது. கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதா என்று கூட்டமைப்பு இறுதி முடிவை அறிவிக்கவில்லை.
ஏனைய பெரும்பாலான கட்சிகள் ஓரிரு மாவட்டங்களில் வேட்புமனுக்களைக் கையளித்திருந்த நிலையில், இன்றே எல்லாக் கட்சிகளும் வேட்புமனுக்களை சமர்ப்பிக்கவுள்ளன. இன்று நண்பகல் 12 மணியுடன் வேட்புமனுத் தாக்கலுக்கான காலஎல்லை முடிவடையவுள்ளதால், எல்லாக் கட்சிகளும் இறுதி நேரத்திலேயே அந்தந்த மாவட்டச் செயலகங்களை முற்றுகையிடவுள்ளன.
இதனால் வேட்புமனுக்களை நேரகாலத்துடன் சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் கோரியுள்ளார். அதேவேளை, கொழும்பு உள்ளிட்ட 22 மாவட்டச் செயலகங்களைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு இன்று பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.