வடக்கின் மனித உரிமைகள் நிலையில் பெரிய முன்னேற்றமில்லை – பிரித்தானியா கவலை
இலங்கையில் 2015ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில், மனித உரிமைகள் நிலைமையில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், சில கவலைக்குரிய விடயங்கள் தொடர்வதாக பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஜனவரி மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலை அடுத்து, பதவிக்கு வந்த, மைத்திரிபால சிறிசேனவின் புதிய அரசாங்கம், மனித உரிமைகள், ஜனநாயகம் குறித்த கரிசனைகளுக்குத் தீர்வு காணும் வகையிலான சாதகமான சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் முன்னேற்றமடைந்துள்ளதுடன், புலம்பெயர்ந்த ஊடகவிய லாளர்களையும் திரும்பி வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. சில இணையத்தளங்கள் மீதான தடைகள் நீக்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டவர்கள் வடக்கிற்குச் செல்வதற்கான தடையும், அரசசார்பற்ற நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு ஜனநாயக வெளி திறந்து விடப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கில் இலங்கை படையினரின் கண்காணிப்பு குறைக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், உயர்ந்தளவு இராணுவ மயமாக்கல், பொதுமக்களின் வாழ்வில் இராணுவத் தலையீடுகள், ஆயுதப்படைகளால் தொடர்ந்து காணிகள் அபகரிக்கப்படுதல் போன்ற சவாலான விடயங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
பெண்களின் பாதுகாப்பு மற்றும் ஊடகவியலாளர்கள் துன்புறுத்தப்படுதல் என்பன கவலைக்குரிய விடயங்களாகவே உள்ளன. போரின் போது, இலங்கை படைகளிடம் சரணடைந்து காணாமற்போனதாக குற்றம்சாட்டப்படும் முன்னாள் போராளிகள் உள்ளிட்ட காணாமற்போனவர்கள் தொடர்பான விசாரணைகளில் எந்த முன்னேற்றமும் இல்லை.
இரகசியத் தடுப்பு முகாம்கள் இயங்குவதாக தமிழ் அரசியல்வாதிகளும் செயற்பாட்டாளர்களும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் அதனை நிராகரிக்கின்றனர். முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் குறைந்துள்ளன.” என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.