Breaking News

ஐந்தாண்டுகளில் முன்னணி செய்தது என்ன – தேசிய அமைப்பாளர் விளக்கம்

நாம் கடந்த 5 வருடங்களாக என்ன செய்தோம் என்று கேட்பவர்கள் உண்டு. 





தமிழர் தாயகத்தில் பல்வேறு பட்ட பிரச்சனைகளுக்கு போராட்ட களத்தினை திறந்து வைத்தவர்கள் நாமே. முல்லைத்தீவு கேப்பாபிலவில் முழுக் கிராமம் பறி போன போது தமிழரின் ஏக பிரதிநிதிகள் தாமே என்று சொல்லிக் கொண்டோர் மௌனமாக இருந்தனர். நாமே அம்மக்களை ஒன்றிணைத்து போராட்டம் நடத்தினோம்

அது போல கிளிநொச்சி பரவிப்பாஞ்சன் நில அபகரிப்பு, தமிழ்க் கைதிகளின் (நிமலரூபன்) சிறைப் படுகொலை, காணாமல் போனோர் பிரச்சனை போன்றவை தொடர்பில் போராட்டத்தை தொடக்கி வைத்தவர்கள் நாமே. ஐ. நாவில் தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகளாக தம்மை காட்டிக் கொள்வோர் உரையாற்றியதில்லை. நாம் ஐ. நாவிலும் இப்பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்தோம். எமது பங்களிப்பை நியாயமாக சிந்திப்போர் தட்டிக் கழிக்க முடியாது”. என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் மணிவண்ணன் விளக்கமளித்து்ள்ளார்.

மெனிக் பார்ம் முகாமில் கடைசி வரைக்கும் வைத்திருக்கப்பட்டவர்கள் கேப்பாபிலவு மக்கள் என்பது யாவரும் அறிந்ததே. அக்டோபர் 2012 இல் சிறீலங்கா ஐ. நா. மனித உரிமை பேரவையின் முன் 5 வருடங்களுக்கொரு முறை (Universal Period Review) அறிக்கையிடும் தவணை நெருங்கி வர எப்படியாவது ஐ. நா கூட்டத்தொடருக்கு முன் கேப்பாபிலவு மக்களை மெனிக் பார்மிலிருந்து அகற்றி விட்டு மெனிக் பாரம் முகாமை தாம் மூடிவிட்டோம் என்று காட்ட வேண்டிய தேவை மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு இருந்தது.

கேப்பாபிலவு ஏற்கனவே பாரிய இராணுவ முகாமுக்கு விழுங்கப் பட்டிருக்க அதன் காரணமாக மக்களை வேறு இடத்தில் அவசர அவசரமாக மீள்குடியேற்ற இராணுவத்தினர் முயற்சித்தனர். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் கூட்டமைப்பிற்கு அறிவித்தும் நடவடிக்கை எடுக்க்காதிருக்க தமிழ் தேசிய மக்கள் முன்னணியிடம் போராட்டம் ஒன்றிற்கு அழைப்பு விடுக்கும் படி மக்கள் கோரினர். இப்போராட்டம் 21 செப்டம்பர் 2012 அன்று முல்லைத்தீவு அரச அதிபர் அலுவலகத்திற்கு முன்னால் இடம் பெற்றது. போரிற்குப் பின்னர் முல்லைத்தீவில் நடந்த முதல் போராட்டம் அதுவே. போராட்டத்தில் பல்வேறு கட்சிகளும் 200 க்கு மேற்பட்ட மக்களும் கலந்து கொண்டனர்.

புலனாய்வுப் பிரிவும், இராணுவமும் பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தின. மெனிக் பார்ம் முகாமிலிருந்து மக்கள் வெளியேறி போராட்டத்தில் கலந்து கொள்வதை ஆயுதம் கொண்டு படையினர் தடுத்தனர். போராட்டம் நடந்து கொண்டிருந்த போது மலம் வீசி குழப்ப முயற்சித்தனர். கவிக்கிரமபாகு கருணாரத்னவும் கஜேந்திரகுமார் பொன்னமபலமும் பிரயாணித்த வாகனம் யாழ்ப்பாணம் திரும்பும் வேளையில் சேதமாக்கப்பட்டது. கஜேந்திரனின் வாகனம் மாங்குளம் வீதியில் வைத்து கல்லெறிந்து தாக்கப்படத்து.

அப்போராட்டத்தில் 200 க்கு மேற்பட்ட மக்கள் கையெழுத்திட்டு தாம் சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டுமென கோரும் மகஜர் தயாரிக்கப்பட்டது. அம்மகஜரை நேரடியாக ஐ. நாவின் இலங்கை வதிவிடப் பிரதிநிதிக்கு அனுப்பி வைக்குமாறு கொழும்பில் இருந்து நன்கறியப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் ஒருவரிடமிருந்து கஜேந்திரகுமாருக்கு செய்தி வந்தது.

அவ்வாறே அனுப்பப்பட்டு மெனிக் பார்ம் மூடப்பட்டமை தொடர்பில் ஐ. நாவின் அறிக்கையில் கேப்பாபிலவு மக்களின் பிரச்சனை இடம் பெற்றது. (மக்களிடமிருந்து நேரடிக் கோரிக்கையாக வராவிட்டால் அது உள்ளடக்கப்படுவது கடினம் என்று எமக்கு சொல்லப்பட்டது) இது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மக்கள் போராட்டங்களை ஒழுங்குபடுத்துவதற்கும் அதனை தமது சர்வதேச பிரச்சார வேலைத்திட்டத்தோடு இணைக்கும் முயற்சிக்கும் நல்லதோர் உதாரணம்.

இவ்வளவற்றையும் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இல்லாமல் இருந்த போதே கஜேந்திரகுமார் செய்யக் கூடியதாக இருந்தால் அவரது கட்சிக்கு எதிர்வரும் தேர்தலில் ஒரு வாய்ப்பை கொடுப்பது தமிழ் மக்களின் அரசியலுக்கு பலம் சேர்க்கும் இல்லையா? என அவர் கேள்வி எழுப்பினார்