Breaking News

165 ஓட்டங்களால் இலங்கையிடம் சுருண்டது பாகிஸ்தான்

பாகிஸ்தானுக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான போட்டியில் 165 ஓட்டங்களால் இலங்கை அணி அபார வெற்றியீட்டியுள்ளது. 

இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகின்றது.  இதில் முன்னதாக இடம்பெற்ற நான்கு போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி 3-1 என தொடரைக் கைப்பற்றியுள்ளது. 

இந்தநிலையில் ஹம்பாந்தோட்டை - சூரியவெவ மைதானத்தில் நேற்று ஐந்தாவதும் இறுதியுமான போட்டி நடைபெற்றது.  இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கியது. ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடி பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களை திணறடித்த இலங்கை அணி சார்பில், ஆரம்ப துடுப்பாட்ட வீரரான குஷல் பெரேரா 116 ஓட்டங்களையும் டில்ஷான் 62 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். 

50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்த அந்த அணி 368 ஓட்டங்களைக் குவித்தது.  மெத்தியூஸ் 70 ஓட்டங்களுடனும் சிறிவர்த்தன 52 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர். ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இலங்கை அணி பெற்ற அதிகூடிய ஓட்டங்கள் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. 

இதன்படி 369 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என் இலக்குடன் பாகிஸ்தான் அணி அடுத்தாக களமிறங்கியது. எனினும் அந்த அணி வீரர்கள் இலங்கை பந்து வீச்சாளர்களின் வேகத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் சொற்ப ஓட்டங்களுடன் வரிசையாக வௌியேறினர். 

இறுதியில் 37.2 ஓவர்களை மாத்திரம் எதிர்கொண்ட பாகிஸ்தான் 203 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது. இலங்கை அணி சார்பில் பந்து வீச்சில் சசித்திர சேனாநாயக்க 3 விக்கெட்டுக்களையும், திஸர பெரேரா 2 விக்கெட்டுக்களையும் சாய்த்தனர். 

இதேவேளை திலஹரட்ன டில்ஷான் இன்று ஒருநாள் போட்டிகளில் 10,000 ஓட்டங்களைக் பெற்றுள்ளார். இதன்படி இந்த இலக்கை எட்டும் நான்காவது இலங்கை வீரர் என்ற பெருமையும் அவர் வசமானது. 

சனத் ஜெயசூரிய ஒருநாள் போட்டிகளில் 10,000 ஓட்டங்களைப் பெற்ற முதல் இலங்கை வீரராவார். அடுத்ததாக மஹெல ஜெயவர்த்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகியோரும் இந்த சாதனையை வசப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு 20பது போட்டி எதிர்வரும் 30ம் திகதி கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறவுள்ளது.