Breaking News

தலைமன்னாரில் 160 கிலோ கஞ்சா பறிமுதல்

இலங்கையின் வடமேற்கே உள்ள தலைமன்னார் கடற்பரப்பில் 160 கிலோ கஞ்சா கடற்படையினரால் நேற்றுஅதிகாலை கைப்பற்றப்பட்டிருப்பதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

இந்தக் கஞ்சா இந்தியாவிலிருந்து கடத்திவரப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. படகொன்றில் இதனைக் கடத்திவந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டு, சுங்கத்துறை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

அண்மைக் காலமாக பெருமளவிலான கஞ்சா நாட்டின் வடபகுதிக்குள் கடல்வழியாகக் கடத்தி வரப்படுவது கண்டறியப்பட்டிருக்கிறது. காவல்துறையின் உதவியுடன் கடத்தல்காரர்கள் கைது செய்யப்படுவதும் தொடர்ந்து நடந்துவருகிறது. வடக்கில், குறிப்பாக யாழ் குடாநாட்டில் அண்மைக் காலமாக கஞ்சா பாவனை அதிகரித்திருப்பதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

இதுபற்றி  கருத்து வெளியிட்ட வவுனியா மாவட்ட மது வரித் திணைக்களப் பொறுப்பதிகாரி பி. ரகுநாதன், "புதுமையை விரும்பும் இளைஞர்கள் சாராயத்திற்குப் பதிலாக மணமில்லாத கஞ்சாவைப் பயன்படுத்துவதாகவும், சாராயம் வாங்கவதற்கு அதிக அளவு பணம் தேவைப்படுவதனால், குறைந்த அளவில் அதிக போதையைத் தருகின்ற கஞ்சா இலையைப் பயன்படுத்துகின்றார்கள்" என்றும் தெரிவித்தார்.

கஞ்சா வைத்திருப்பவர்களைக் கண்டுபிடித்து நேரடியாகச் சென்று கைதுசெய்வது கடினம் என்பதனால், போலி கஞ்சா நுகர்வோரைப் பயன்படுத்தி அதிகாரிகள் கஞ்சா விநியோகம் செய்பவர்களையும் கஞ்சா வைத்திருப்பவர்களையும் கைது செய்துவருவதாக ரகுநாதன் கூறினார்

கஞ்சா நுகர்வோருக்கும் அதனை வினியோகம் செய்வோருக்கும் எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால் வடபகுதியின் கஞ்சா பாவனையை ஒரு மாத காலத்தில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.