மஹிந்த,மைத்திரிக்கான எதிர்ப்பே குருநாகலில் போட்டி: சிவாஜிலிங்கம்
மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவே குருநாகல் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதாக சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வடமாகாண சபை உறுப்பினராக இருக்கும் சிவாஜிலிங்கம் வேட்புமனு தாக்கல் செய்யும் கடைசி நாளன்று நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் நோக்கில் குருநாகல் மாவட்டத்தில் சுயேச்சையாக போட்டியிட மனுச்செய்தார்.
குருநாகல் மாவட்டத்தில் தம்மால் வெற்றியீட்ட முடியாது என்பது யதார்த்தம் என்றாலும், மைத்திரிபால மற்றும் மஹிந்தவுக்கு அடையாள ரீதியில் எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கிலேயே தானும், இதர 18 தமிழர்களும் அங்கு சுயேச்சையாக போட்டியிடுவதாக அவர் கூறினார்.
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மஹிந்த ராஜபக்ஷவுக்கு, மைத்திரிபால சிறிசேன வாய்ப்பு அளித்தது தவறு என பலரும் சுட்டிக்காட்டியபோது, அதைச் சுட்டிக்காட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயங்கியது எனவும் சிவாஜிலிங்கம் கூறுகிறார்.
அதைச் சுட்டிக்காட்ட வேண்டிய ஆழமான, உறுதியான தேவை இருப்பதாக கருதியதாலேயே நாடளுமன்றத் தேர்தலில் குருநாகலில் போட்டியிட முடிவெடுத்ததாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே சுயேச்சையாகப் போட்டியிடுவதால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனுமதியைப் பெற வேண்டிய தேவை எழவில்லை என்றும் தமிழ் மக்களுக்கு உரிமைகள் மற்றும் நீதிகோரும் தமது செயல்பாடுகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தொடரும் என்றும் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.