Breaking News

அதிர்ச்சியில் கருணா – உறுதிமொழி கொடுத்து ஏமாற்றிவிட்டதாக விசனம்

தனக்குத் தேசியப்பட்டியலில் இடமளிப்பதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றிவிட்டதாக விசனமும், அதிர்ச்சியும் வெளியிட்டுள்ளார், முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன்.


”தேசியப்பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைப்பதாக சுசில் பிரேம் ஜெயந்தவும், அனுர பிரியதர்சன யாப்பாவும் எனக்கு வாக்குறுதி அளித்திருந்தனர். ஆனால் கடைசியில் எனது பெயர் தேசியப்பட்டியலில் உள்ளடக்கப்படாதது வருந்தத்தக்கது.

இந்தச் சூழலில், இதுபற்றி நான் முடிவு ஒன்றை எடுக்க வேண்டியுள்ளது. போர் முக்கியமான கட்டத்தை எட்டியிருந்த போது, கோத்தாபய ராஜபக்சவும், லக்ஸ்மன் ஹுலுகல்லவும், வந்து அரசாங்கத்துக்கு உதவ வேண்டும் என்று உனது உதவியைக் கோரினர்.

அந்த நேரத்தில் நாட்டுக்காக நான் மிகவும் ஆபத்தான ஒரு முடிவை எடுத்தேன். அதன்காரணமாக, தமிழர்களின் சில பகுதியினரின் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிட்டது.” என்று குறிப்பிட்டுள்ளார். அந்த நேரத்தில் 600 தமிழ்ப் போராளிகளை விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்படுவதற்காக கருணா கிழக்கிற்கு அனுப்பி வைத்ததாகவும், அவர்களின் 300 பேர் போரில் இறந்து போனதாகவும், கொழும்பு ஆங்கில நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போது அதற்கான பொறுப்புகளைத் தானே சுமக்க நேரிட்டுள்ளதாகவும், தெரிவித்துள்ள கருணா, தற்போதைய அரசியல் சூழல் தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக இல்லை என்பதை முதலில் கூற வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.