இங்கிலாந்து அணியின் ஆலோசகராக மஹெலவை நியமிக்க ஆலோசனை
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரராக விளங்கிய மஹெல ஜெயவர்த்தனவை இங்கிலாந்து அணியின் ஆலோசகராக நியமிக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஆலோசனை நடத்தி வருகிறது.
உலகக் கிண்ண கிரிக்கெட்டில் மோசமான நிலையை அடைந்த இங்கிலாந்து கிரிக்கெட்டை மேலும் வலுப்படுத்த பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. முதல்கட்டமாக அந்த அணியின் இயக்குனராக முன்னாள் தொடக்க வீரர் ஸ்ட்ராஸ் நியமிக்கப்பட்டார். ஸ்ட்ராஸ் அப்போதைய பயிற்சியாளரை நீக்கிவிட்டு அவுஸ்திரேலியாவின் டிரெவோர் பெய்லிஸ்சை பயிற்சியாளராக நியமித்தார்.
தற்போது மஹெல ஜெயவர்த்தனவை இங்கிலாந்து அணியின் ஆலோசகராக நியமிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இலங்கை அணி 2014-ம் ஆண்டு இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத்தை வெல்லும்போது தற்போதைய இங்கிலாந்து அணியின் துணை பயிற்சியாளராக இருக்கும் பால் பார்பிரேஸ்தான் பயிற்சியாளராக இருந்தார்.
பால் பார்பிரேஸ் ஜெயவர்த்தனவுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால், இயக்குனர் ஸ்ட்ராஸ் ஜெயவர்த்தனவை ஒப்பந்தம் செய்வது குறித்து எந்தவித உத்தரவாதத்தையும் இதுவரை கூறவில்லை.
அடுத்த 18 மாதங்களில் இங்கிலாந்து அணி ஆசிய கண்டத்தில் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறது. பாகிஸ்தானை ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திலும், இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளை அந்தந்த நாடுகளிலும் சந்திக்கவுள்ளது.
அதேபோல் தங்கள் நாட்டில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளைச் சந்திக்க இருக்கிறது. எனவே, ஆசிய நாடுகளின் மைதானங்களைப் பற்றி நன்று அறிந்த ஜெயவர்த்தனவின் ஆலோசனை கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நினைக்கிறது.