வித்தியா படுகொலைச் சந்தேகநபர்களை மேலும் ஒருமாத காலம் ரி.ஐ.டியினர் விசாரிக்க அனுமதி!
புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி
சிவலோகநாதன் வித்தியா படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை மேலும் ஒரு மாத காலம் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் தமது பாதுகாப்பில வைத்து விசாரணைகளை மேற்கொள்ள ஊர்காவற்துறை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கடந்த மாதம் 15 ஆம் திகதி ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் பயங்கரவாத புலனாய்வுப்பிரிவினர் இவர்களை விசாரணை செய்வதற்காக ஒரு மாத கால அனுமதியை நீதிமன்றத்தில் பெற்று கொழும்புக்கு கொண்டு சென்றார்கள். நேற்று 13ஆம் திகதி நீதிமன்றத்தில் மீண்டும் முற்படுத்தவேண்டுமென என தவணையிடப்பட்ட நிலையில் நேற்று குறிப்பிட்ட ஒன்பது சந்தேக நபர்களும் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவில்லை.
தேர்தல் கடமையில் அதிகளவான பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டமையால் சந்தேகநபர்களை நீதிமன்றம் கொண்டுவருதற்கு போதிய பாதுகாப்பு இல்லையெனவும் அதனால் குறிப்பிட்ட சந்தேகநபர்களை நீதிமன்றம் கொண்டு வரவில்லையென பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் சார்பில் நீதிமன்றத்தில் தொவிக்கப்பட்டதுடன் கால அவகாசத்தை மேலும் ஒரு மாதம் நீடிக்கும் படியும் விண்ணப்பிக்கப்பட்டது. இதனை ஆராய்ந்த ஊர்காவற்துறை நீதிபதி எஸ்.லெனின்குமார் கால அவகாசத்தை நீடித்து வழங்கியதுடன் அடுத்த மாதம் 12ஆம் திகதி சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்தும் படியும் உத்தரவிட்டார்.