திம்புக் கோட்பாடுகளின் அடிப்படையில் இலட்சிய பயணத்தை ஆரம்பித்துள்ளோம்
திம்புக் கோட்பாடுகளின் அடிப்படையில் நேர்மையாகவும் உறுதியாகவும் தொடர்ச்சியாகச் செயற்படும் நாம் கட்சி மக்கள் ஏமாற்றப்படுவதற்கு முற்று-ப்புள்ளி வைப்பதற்கான இலட்சிய பயணத்தை ஆரம்பித்துள்ளோம்
என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் யாழ். தேர்தல் மாவட்டத்திற்கான வேட்புமனு நேற்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின்னர் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாம் இன்று மிக முக்கியமானதொரு நாளில் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளோம். சாதாரணமாக அரசியல் கட்சியொன்று பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்கின்றது என்பதற்கு அப்பால் திம்புக்கோட்பாடுகள் எடுக்கப்பட்ட தினத்தில் எமது வேட்புமனுக்களை தமிழர் தாயகத்தின் ஐந்து தேர்தல்கள் மாவட்டங்களிலும் தாக்கல் செய்துள்ளோம்.
தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வை எட்டுவதற்கான முன்மொழிவாக திம்புக் கோட்பாடுகள் அமைந்தன. அதனை மையப்படுத்தி ஒவ்வொரு தேர்தலிலும் தமிழ் மக்கள் தமது வாக்குகளை அளித்தபோதும் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டே வந்திருக்கின்றார்கள்.
திம்புக் கோட்பாடுகளை நேர்மையாகவும் உறுதியாகவும் ஏற்றுக் கொண்ட ஒரேயொரு தரப்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியே காணப்படுகின்றது. தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் இலட்சியத்துடன் ஒன்றிணைந்து செல்வதற்கு உறுதிமொழி கோரும் வகையிலேயே நாம் இத்தேர்தலில் போட்டியிடுகின்றோம்.
தமிழ் மக்கள் ஒன்றுபட்டு எமக்கு ஆணை வழங்குவார்கள் என எதிர்பார்க்கின்றோம் என்றார்.