போர் குற்றத்திலிருந்து தப்பிக்கவே ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிடுகிறார்
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சர்வதேச நீதிமன்றத்தின் குற்றவாளிகள் கூண்டில் நிறுத்த வேண்டும்.
போர்க்குற்றத்தில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக அவர் இலங்கை பிரதமர் பதவிக்குப் போட்டியிடுகிறார் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும், தெரிவித்துள்ளதாவது,மஹிந்த ராஜபக் ஷ தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காகவே தேர்தலில் போட்டியிடுகிறார். ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனாவும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார். இத னை நான் வன்மையாகக்கண்டிக்கிறேன் என்றார்.
இதேவேளை, இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடத்த வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலை வர் தொல்.திருமாவளவன் இக் கையெழுத்து இயக்கத்தை நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.
இலங்கை அரசு மீது போர்க்குற்ற விசாரணை நடத்த ஐ.நா.வை வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் 10 இலட்சம் பேரிடம் கையெழுத்து பெறப்படவுள்ளதாக தெரிவித்த திருமாவளவன், அதன் முதற்கட்டமாக கோயம்பேடு பஸ்நிலைய வாசலில் பஸ் பயணிகளிடம் கையெழுத்துப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.