13 ஆம் திருத்தத்திற்குள் தான் இனப்பிரச்சனைக்கு தீர்வு என்பது வெறும் கபட நாடகம் - சுரேஷ்
இனப்பிரச்சனைக்கு 13 ஆம் திருத்தத்திற்குள் தான் தீர்வு என்பது வெறும் கபட நாடகம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழிலுள்ள அவரது இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் உடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதே தவிர இனங்களுக்கு இடையிலான முரண்பாடு முடிவுக்கு கொண்டு வரப்படவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்வுக்கான வழிமுறைகளாக சில அடிப்படை விடயங்களை சொல்லி இருக்கின்றது.
வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும், அரசியல் அமைப்பு முறையின் கீழ் அதிகார பகிர்வு வேண்டும், அந்த அதிகார பகிர்வின் ஊடாக சுயாட்சி அடிப்படையாக கொண்டதாக இருக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ச்சியாக பேணி வருகின்றது. இவற்றை உடனடியாக தென்னிலங்கை சிங்கள கட்சிகள் மறுதலித்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சி ஒற்றையாட்சியின் கீழ் தான் தீர்வு என்கிறது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 13ம் திருத்தத்தின் ஊடாக தீர்க்கலாம் என்கிறார்கள், ஜே.வி.பி போன்ற கட்சிகள் சமஸ்டி ஆட்சி ஏற்றதல்ல என்கிறார்கள். இவர்களின் முக்கிய நோக்கம் சிங்கள மக்கள் மத்தியில் வாக்கு பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே ஆகும். எமது கோரிக்கை என்பது ஒன்றுபட்ட நாட்டுக்குள் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பது என்பதை மையமாக கொண்டதே ஆகும்.
13ம் திருத்தத்திற்குள் தான் தீர்வு என்பது வெறும் பித்தலாட்டம்,கபட நாடகம் ஆகும். 13ம் திருத்தத்திற்கு மேலதிகமாக சென்று இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்போம் என இந்தியாவுக்கு கூறியவர்களே இன்று 13க்குள் தீர்வு என்கிறார்கள். நாங்கள் முன் வைத்துள்ள சமஸ்டி தீர்வுக்கு ஆதரவாக இந்தியா, அமெரிக்கா போன்ற உலக ஆதரவை திரட்டி எமது இந்த கோரிக்கையை வெல்வதற்கான சர்வதேச நியாங்களை திருப்பி அதனூடாக இந்த கோரிக்கையில் வெற்றி பெறுவோம். எனவும் தெரிவித்துள்ளார்.