Breaking News

நாடாளுமன்றத் தேர்தல் குறித்த மைத்திரியின் சிறப்பு அறிக்கை இன்று வெளிவருமா?

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான தனது நிலைப்பாடு குறித்து இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வேட்புமனுத் தாக்கல் முடிந்த பின்னர், சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிடுவாரா என்பது தொடர்பில் குழப்பமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் மகிந்த ராஜபக்சவுக்கு இடமளிக்கப்பட்டது தொடர்பாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதுவரை பகிரங்கமான கருத்து எதையும் முன்வைக்கவில்லை.

இதனால், அவர் கடைசி நேரத்தில் மகிந்த ராஜபக்சவின் வேட்புமனுவை நிராகரிக்கலாம் என்று கடந்தவாரம் வரை ஒரு நம்பிக்கை காணப்பட்டது. ஆனால், கடந்த புதன்கிழமை இரவு மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த சிவில் சமூகப் பிரதிநிதிகளிடம், அவர் தனது கையறு நிலையை வெளிப்படுத்தியிருந்தார்.

மகிந்த ராஜபக்சவை நிராகரிக்கும் விடயத்தில் தாம் தனித்து விடப்பட்டுள்ளதாகவும் தம்மால் எதையும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். எனினும், அதுபற்றி அவர் வெளிப்படையாக எந்தக் கருத்தையும் பொதுமக்களுக்கு கூறவில்லை.

இந்தநிலையில், வேட்புமனுத் தாக்கல் முடிந்த பின்னர் மகிந்த ராஜபக்சவுக்கு இடமளிக்கப்பட்டது தொடர்பான தமது நிலைப்பாட்டை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிடுவார் என்றும், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் நடுநிலை வகிக்க முடிவு செய்துள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகின.

இன்று நண்பகலுடன் வேட்புமனுத் தாக்கல் முடிவடையவுள்ள நிலையில், அதன் பின்னர் மைத்திரிபால சிறிசேனவின் அறிவிப்பு வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, அவ்வாறு சிறப்பு அறிக்கை எதையும் மைத்திரிபால சிறிசேன வெளியிடமாட்டார் என்று அதிபரின் ஊடகப் பிரிவை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.