மகிந்த மீண்டும் வந்தால் நாடு நாசமாகி விடும் : பிரதமர் ரணில் எச்சரிக்கை
மஹிந்த மீண்டும் வந்தால் நாடு நாசமாகி விடுமெனவும் இந்நிலையில் தமது குடும்பத்தின் எதிர்காலமா அல்லது ராஜபக்ஷ குடும்பத்தின் எதிர்காலமா முக்கியமானது என சிந்தித்து மக்கள் பொதுத் தேர்தலில் வாக்களிக்க வேண்டுமெனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று சனிக் கிழமை கொழும்பு கெம்பல் பார்க் மைதானத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் சம்மேளனக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்ததாவது ;
எதிர்வரும் ஆகஸ்ட் 17 ஆம் திகதி நாட்டு மக்கள் முக்கிய தீர்மானம் மேற்கொள்ள வேண்டிய நாளாகும். ஒவ்வொருவரும் தமது குடும்பத்தின் எதிர்காலம் தொடர்பாக சிந்தித்து தீர்மானமெடுக்க வேண்டும். தமது குடும்பமா அல்லது மஹிந்தவின் குடும்பமா முக்கியமென சிந்தித்தே மக்கள் வாக்களிக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் தமது குடும்பத்தின் எதிர்காலம் முக்கியமானதாகும். இதன்படி மகிந்த குடும்பம் ஆட்சிக்கு வரும் வகையில் வாக்களிக்கக் கூடாது. அவர்கள் மீண்டும் வந்தால் மக்கள் மீண்டும் துன்பத்துக்கே செல்ல நேரிடும்.
ஜனவரி 8 ஆம் திகதி மக்களின் எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டே நாம் மைத்திரிபாலவை வெற்றிபெற செய்தோம். அந்த வெற்றியை நாம் தொடர்ந்தும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும். மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் நாடு நாசப்படுத்தப்பட்டுவிட்டது. யுத்த காலத்திலும் சரி, அதன் பின்னரும் சரி, அவர்கள் சம்பாதிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டார்களே தவிர அபிவிருத்திகளை மேற்கொள்ளவில்லை. கல்வி , சுகாதாரம் போன்ற துறைகளில் பிரச்சினைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. வேலையில்லாப் பிரச்சினை தலைவிரித்தாடியது .
பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டன. மக்கள் ஒருவேளை உணவுக்குக் கூட திண்டாடும் நிலைமையும் காணப்பட்டது. ஆனால் இவ்வாறான நிலைமையில் ராஜபக்ஷக்கள் ஹில்டன் ஹோட்டலில் சொகுசாக உணவு உட்கொண்டனர். சுவிற்சர்லாந்து சொக்லேட் வகைகளால் செய்யப்படும் சோஸ் மூலமே உணவு உட்கொண்டனர். அதுவும் கைகளால் அல்ல தங்கக் கரண்டிகளினால். இப்படித்தான் அவர்களின் வாழ்க்கை காணப்பட்டது.
இந்நிலையில் நாம் ஒன்றிணைந்து மகிந்தவை வீட்டுக்கு அனுப்பி வைத்தோம். அந்த வெற்றியை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள வேண்டும். அதற்காக நாம் புதிய அணியை அமைக்கத் தீர்மானித்துள்ளோம். அந்த அணியின் வேட்பு மனுக்களை நாம் கையளிப்போம். இனி புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க நடவடிக்கையெடுப்போம்.
இதேவேளை எமது புதிய அரசாங்கத்தில் ஐந்து விடயங்களை அடிப்படையாக கொண்டே வேலைத் திட்டங்களை முன்னெடுப்போம். அதில் பொருளாதாரம் முக்கியமானது. நாடு பூராகவும் 48 பொருளாதார பிரதேசங்களை உருவாக்குவோம்.
அத்துடன் புதிய தொழிற் துறைகளையும் அமைப்போம். வாகன உற்பத்தித் தொழிற்சாலைகளையும் இங்கு அமைப்போம். அத்துடன் முச்சக்கர வண்டித் துறையினையும் விரிவு படுத்துவோம். முச்சக்கர வண்டி விபத்தில் உயிரிழப்பவர்களின் குடும்பத்துக்காக 10 இலட்சம் ரூபா வரை நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கையெடுப்போம். அத்துடன் கல்வித்துறையையும் அபிவிருத்தி செய்வோம் என்றார்.