வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் பணிகள் நாளை நண்பகல் 12 மணியுடன் நிறைவு
எட்டாவது பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணி கள் நாளை நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளதாகத் தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ள நிலையில், பிரதான கட்சிகள், சிறு அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் தமது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கான இறுதி முனைப்பில் ஈடுபட்டுள்ளன.
பிரதான கட்சிகளான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி ஆகியன நாளைய தினம் தமது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யவுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வேட்புமனுக்கள்...
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு முன்னணி கொழும்பு, கம்பஹா, நுவரெலியா, கண்டி, பதுளை, இரத்தினபுரி ஆகிய தேர்தல் மாவட்டங்களில் போட்டியிடவுள்ளது.
அதேநேரம் ரிஷாட் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வடகிழக்கிலும் வெ ளியிலும் ஐ.தே.கவில் களமிறங்கவுள்ளதோடு வன்னி, மட்டக்களப்பு தேர்தல் மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐ.தே.கவுடன் இணைந்தும் தனித்தும் போட்டியிடுகின்றன.
இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பு மனுக்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ உள்ளிட்ட முன்னாள் இந்நாள் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள், தேசிய அமைப்பாளர்கள் என முக்கியஸ்தர்கள் பலர் கையொப்பமிட்டுள்ள நிலையில் ராஜித சேனாரத்ன, அர்ஜுண ரணதுங்க, சரத்அமுனுகம, பியசேன கமகே, எம்.கே.டி.எஸ். குணரத்ன, விஜய தஹநாயக்க, சுதர்ஷிணி பெர்னாண்டோ புள்ளே, ஏர்ள் குணசேகர, நியோமல் பெரேரா உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முக்கியஸ்தர்கள் சிலர் இதுவரையில் வேட்புமனுவில் கைச்சாத்திடவில்லை.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிற்கு மீண்டும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் வாய்ப்பு வழங்கப்பட்டமையடுத்து சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஜாதிக ஹெலஉறுமய, ஐ.ம.சு. கூட்டமைப்பிலிருந்து வெ ளியேறியிருந்தது.
இந்நிலையில் மஹிந்த ராஜபக் ஷவின் வருகையை கண்டித்து இவ்வாறான முக்கியஸ்தர்கள் தற்போது வரை வேட்பு மனுவில் கைச்சாத்திடாத நிலை நீடிக்கின்றது.
நல்லாட்சிக்கான கூட்டு
இவ்வாறான நிலையில் ஹெலஉறுமய மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் பிரவேசத்திற்கு எதிரான ஏனைய சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் நல்லாட்சியைப் பாதுகாப்பதற்காக ஒன்றிணைந்துள்ளனர். இவர்கள் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியை அமைத்து ஐ.தே.க. வுடன் இணைந்து போட்டியிடவுள்ளனர்.
மஹிந்தவின் முன்னேற்பாடு
ஐக்கிய மக்கள் சுதந்திரமுன்னணியில் மீண்டும் சாதாரண வேட்பாளராக குருநாகல் மாவட்டத்தில் களமிறங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டு வேட்புமனுவில் கைச்சாத்திட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு இறுதி நேரத்தில் அவரது பெயர் இரத்தாகலாம் என்ற ஐயப்பாடுகள் மேலெழுந்துள்ள நிலையில் அவரது ஆதரவாளர்களான விமல் வீரவன்ச, தினேஷ் குணவர்த்தன, வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ விதாரண ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் மாற்று ஏற்பாடுகள் குறித்து மந்திர ஆலோசனை நடத்தி வருவதுடன் தேர்தல்கள் ஆணையாளரையும் சந்தித்து ஆலோசனையையும் பெற்றுள்ளனர்.
இவ்வாறு பிரதான கட்சிகள் தமது வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான உறுதியான முடிவுகளை எட்டுவதற்காக பல்வேறு முனைப்புக்களை மேற்கொண்டு வருகின்றன.
வடகிழக்கில்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடகிழக்கில் நான்கு மாவட்டங்களில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ள நிலையில் நாளைய தினம் அம்பாறை தேர்தல் மாவட்டத்தில் வேட்பு மனுவைத் தாக்கல்செய்யவுள்ளது.
அதேவேளை ஐ.ம.சு.முன்னணி யாழ். தேர்தல் மாவட்டத்தில் அங்கஜன் இராமநாதனை முதன்மை வேட்பாளராகக் கொண்டு வேட்புமனுவைத் தாக்கல் செய்யவுள்ளது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வடகிழக்குத் தாயகங்களில் நாளை வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யவுள்ளது.
இதேவேளை ஜனநாயக போராளிகள் அமைப்பினர் சுயேச்சையாகப் போட்டியிடவுள்ளதுடன் நாளை வேட்புமனுவைத் தாக்கல் செய்கின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டதாக குற்றம்சாட்டும் அனந்தி சசிதரன் சுயேச்சையாகப் போட்டியிடுவதற்கு கட்டுப்பணம் செலுத்தி விண்ணப்பம் பெற்றுள்ள நிலையில், நாளை காலை வேட்புமனுவைத் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் ஜே.வி.பி. நாளைக் காலை வேட்பு மனுவைத் தாக்கல் செய்யவுள்ளதாக அக் கட்சி அறிவித்துள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணி, விக்னராஜா தலைமையில் யாழ். மாவட்டத்தில் தமது வேட்பு மனுவை நாளை தாக்கல் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
தேர்தல்கள் திணைக்களத்தின் அறிவிப்பு
நாளை நண்பகல் 12 மணியுடன் வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் பணிகள் நிறைவுறவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்துள்ளதுடன் அதனைத் தொடர்ந்து ஒன்றரை மணித்தியாலங்கள் வேட்பு மனுக்கள் குறித்த ஆட்சேபனைகளைத் தெரிவிக்கமுடியும்.
அதனைத் தொடர்ந்து அந்தந்த தேர்தல் மாவட்டங்களுக்கான தெரிவத்தாட்சி அலுவலகங்களில் தெரிவத்தாட்சி அலுவலர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்களுடனான விசேட சந்திப்பு இடம்பெறும். தொடர்ந்து சுயேட்சைக் குழுக்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட சின்னங்கள் வழங்கப்படவுள்ளன. இரண்டு சுயேட்சைக்குழுக்கள் ஒரு சின்னத்தைக் கோரும் சந்தர்ப்பங்கள் ஏற்படும் பட்சத்தில் குலுக்கல் முறை மூலம் தெரிவு செய்யப்பட்டு வழங்கப்படவுள்ளது என்றார்.
எட்டாவது பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும் மாதம் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் நாடு முழுவதும் ஒரு கோடியே 50 இலட்சத்து 44 ஆயிரத்து 490 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளதுடன் நாடு முழுவதும் 12 ஆயிரத்து 21 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.