தேசியப்பட்டியலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடமில்லை – மைத்திரி அதிரடி
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பி னர்கள் எவருக்கும் தேசியப் பட்டியலில் இடமளிக்கப்படாது
என்று ஜனாதிபதியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் மீண்டும் நாடாளுமன்றம் செல்ல விரும்பினால், அவர்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றும் மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டுக்காக சேவையாற்றிய புலமையாளர்களை நாடாளுமன்றத்துக்கு கொண்டு வருவதற்கே, தேசியப்பட்டியல் முறை கொண்டு வரப்பட்டது என்பதையும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அத்துடன், முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக அங்கம் வகிக்காத புலமையாளர்களை தேசியப்பட்டியலில் உள்ளடக்குவது குறித்த கலந்துரையாடல்கள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது.