மஹிந்தவை பிரதமராக வழிமொழிவேன் : 113 எம்.பி.க்களைத் தாருங்கள்
எமக்கு 113 எம்.பி.க்களை தாருங்கள். நாங்கள் வெற்றி பெற்றதும் மஹிந்தவை நானே பிரதமராக வழி மொழிவேன். சுதந்திரக் கட்சியை பாதுகாக்க வேண்டியதே அவசிய மானதாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி. சில்வா தெரிவித்தார்.
அனுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் முன்னணியின் வேட்பாளர்கள் உள்ளிட்ட பலர் இந்த முதலாவது பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இங்கு எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்து உரையாற்றுகையில்
சுதந்திரக் கட்சியை பலவீனப்படுத்த சர்வதேசமும் ஐக்கிய தேசிய கட்சியும் முயற்சித்தது. என்னை சந்திப்பதற்கு அண்மையில் பல தூதுவர்கள் வந்தனர். அவர்கள் தேர்தலை பற்றியே விசாரித்தனர். அவர்களுக்கு என்ன அவசரம் எமது நாட்டின் தேர்தல் குறித்து என்று நான் விசாரித்தேன். இதிலிருந்து பல விடயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக ஒரு விடயத்தைக் கூறுகின்றேன். அதாவது எமக்கு 113 எம்.பி.க்களை தாருங்கள். நாங்கள் வெற்றிபெற்றதும் மஹிந்தவை நானே பிரதமராக வழி மொழிவேன் என்பதனை உறுதியுடன் கூறுகின்றேன். சுதந்திரக் கட்சியை பாதுகாக்கவேண்டியது அவசியமாகும் என்றார்.
சு.க.செயலாளர் அநுரபிரியதர்சன யாப்பா
இங்கு உரையாற்றிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அநுரபிரியதர்சன யாப்பா, சுதந்திரக் கட்சி இன்று பலமடைந்துள்ளது. இது ஜனநாயகக் கட்சியாகும். மஹிந்தவை இங்கு கொண்டுவர ஐ.ம.சு.மு. பாடுபட்டது. அதனை நாங்கள் ஏற்றுக்கொண்டோம்.
மஹிந்தவை பிரதமர் வேட்பாளராக களமிறக்கியுள்ளோம். நாம் இன்று ஒன்றிணைந்துள்ளோம். மக்கள் விடுதலை முன்னணி மனித உரிமை ஆணைக்குழுவுக்கு சென்று மஹிந்தவின் பாதுகாப்பை குறைக்ககேட்டுள்ளது. இது துரோகத்தனமாகும்.
மஹிந்த எம்மை பயங்கரவாதத்திலிருந்து காப்பாற்றினார். அவர் எம்மை மீட்ட தலைவர். அவர் அதனால் இலக்கு வைக்கப்பட்டுள்ளார். ரணில் விக்கிரமசிங்க முடியுமானால் தனி வாகனத்தில் செல்ல முடியும். அதற்கு மஹிந்தவே வழிசமைத்தார். நாம் ஒன்றிணைந்துள்ளோம்.
எமது அரசாங்கத்தை அமைப்போம். மஹிந்தவை பிரதமராக்குவோம். எனவே இந்தத் தேர்தல் தீர்க்கமானது. முக்கியமானது. ஐக்கிய தேசிய கட்சியை தோற்கடித்து ரணிலை வீட்டுக்கு அனுப்புவோம். 18 ஆம் திகதி நாம் வெற்றிபெறுவோம் என்றார்.