மகிந்தவின் முடிவு இன்று – மைத்திரியின் அறிக்கையால் குழப்பம்
நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக எவரையும் அறிவிக்க முடியாது என்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்ததையடுத்து, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது முடிவை இன்று காலை 10.30 மணிக்கு அறிவிக்கவுள்ளார்.
பிரதமர் பதவிக்குப் போட்டியிடுவது தொடர்பாக மைத்திரிபால சிறிசேன தரப்புக்கும், மகிந்த ராஜபக்ச தரப்புக்கும் இருந்து வந்த இழுபறி நிலைக்கு இன்று முடிவு காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மகிந்த ராஜபக்சவும் அவரது ஆதரவாளர்களும், மகிந்தவை பிரதமர் வேட்பாளராக சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.
இதனால், சிறிலங்கா சுதந்திரக் கட்சியை உடைத்து தனியாகப் போட்டியிட மகிநத ராஜபக்ச தயாராகி வந்தார். இந்த நிலையில், சுதந்திரக் கட்சியின் பிரமுகர்கள் அடங்கிய குழு ஒன்று நடத்திய பேச்சுக்களின் முடிவில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் மகிந்த ராஜபக்சவுக்கு இடமளிக்க மைத்திரிபால சிறிசேன முன்வந்தார்.
ஆனால் பிரதமர் வேட்பாளராக நிறுத்த முடியாது என்றும் அவர் திட்டவட்டமாக கூறியிருந்தார். இந்த தகவல் நேற்று பிற்பகல் கண்டியில் வைத்து, நிமால் சிறிபால டி சில்வா, அனுர பிரியதர்சன யாப்பா, சுசில் பிரேம ஜெயந்த ஆகியோரால், மகிந்த ராஜபக்சவிடம் தெரிவிக்கப்பட்டது,
இந்த நிலையில், பிரதமர் வேட்பாளராக மகிந்த ராஜபக்சவை நிறுத்த மைத்திரிபால சிறிசேன இணங்கி விட்டதாக அவரது ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்கள் ஊடகங்களில் செய்தியை பரப்பினர்.
இந்தநிலையில், நேற்றுமாலை இலங்கை ஜனாதிபதி செயலகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், எவரையும், பிரதமர் வேட்பாளராக நியமிக்க மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவிக்கவில்லை என்று கூறப்பட்டிருந்தது.
இது மகிந்த ராஜபக்ச தரப்புக்கு அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்றிரவு தனது ஆதரவாளர்களுடன் மகிந்த ராஜபக்ச பேச்சுக்களை நடத்தியிருந்தார்.
இதன் முடிவில் அவர் இன்று காலை 10.30 மணியளவில் மெதமுலானவில் உள்ள வீட்டில் இருந்து தனது எதிர்காலத் திட்டம் குறித்து அறிவிக்கவுள்ளார். பெரும்பாலும் தனியான அணியாகப் போட்டியிடும் முடிவை -அதாவது திட்டம் பின்னர் அறிவிக்கலாம் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக நிற்குமாறு அழைப்பு விடுக்க இன்று பிரமாண்ட வாகனப் பேரணி ஒன்று தங்காலைக்குச் செல்கிறது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் உள்ள கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் ஆதரவாளர்கள் மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்கள் இந்தப் பேரணியில் பங்கேற்கின்றனர். 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்தப் பேரணியில் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.