நவாலி படுகொலை – 20ம் ஆண்டு நினைவு நாள் இன்று
09.07.1995ல் இடம்பெற்ற நவாலித் தாக்குதலின் 20ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். வரலாற்றில் இந்த இரத்தக்கறை படிந்த நிகழ்வை மறக்கமுடியாது.
முன்னாள் அரசாட்சியாளர்களின் பணிப்புரையின் பேரில் நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் பலியெடுக்கப்பட்ட 20ம் ஆண்டு நினைவு நாளை 2015ல் நாம் ஒரு கணம் மீண்டும் மீட்டுப் பார்க்கின்றோம்.
இந்தக் கொடுமையான நவாலி சென்ற்.பீற்றர் ஆலய பலியெடுப்பு சர்வதேச சமூகத்தையே மிகவும் மனவருத்தத்திற்குள்ளாக்கியதுடன் மக்களை சொல்லொணாத் துயரத்திற்கும் இட்டுச் சென்றது. கடந்த 09.07.1995ல் தமிழர்களின் வாழ்வில் வரலாற்றில் நவாலியில் இரத்த ஆறு ஓடிய ஒரு கோரமான கொடிய நாளாகும்.
அன்று தான் நவாலி சென்ற்.பீற்றர்ஸ் தேவாலயம் மற்றும் நவாலி ஸ்ரீகதிர்காம முருகன் (சின்னக் கதிர்காமம்) ஆலயம் என்பன அழிந்து அப்பாவியான 147 மக்களைக் காவு கொண்ட கரிநாள். வலிகாமம் பூராகவும் இடம்பெற்ற வன் தாக்குதலில் அதிர்ந்து கொண்டிருந்த வேளையில் மாலை நேரத்தில் மக்கள் இடம் பெயர்ந்து கொண்டிருந்த வேளையில் விமானப் படையினரால் மிலேச்சத்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டது.
வடமாகாணத்தின் கீழ் யாழ்.மாவட்டம் வலிகாமம் தென்மேற்கின் நவாலியூரில் வரலாற்றில் இந்த இரத்தக்கறை படிந்த நாட்களை பலியெடுப்பு நிகழ்வுகளை தமிழினம் மறக்காது மறக்கமுடியாது என்று அன்றைய நிகழ்வையொட்டி லண்டன் பி.பி.சி. தமிழோசை செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது.
முன்னோக்கிப் பாய்தல் (Leap Forward) எனப் பெயர் கொண்ட "லீப் போர்வேர்ட்" இராணுவ நடவடிக்கையை வலிகாமம் பகுதியில் தொடங்கிய இராணுவத்தினர் பலாலியிலிருந்தும் அளவெட்டியிலிருந்தும் மிகக் கொடூரமான முறையில் ஷெல் தாக்குதல்களையும், குண்டுத் தாக்குதல்களையும் மேற்கொண்டிருந்தனர்.
திடீரென 09.07.1995 அன்று வலிகாமம் தென்மேற்கு, வலிகாமம் மேற்கு, வலி.தெற்கு, வலி.வடக்கு பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புக்கள், ஆலயங்கள், பொது நிலையங்கள், அரச மற்றும் பொது நிறுவனங்களை நோக்கி காலை 5.20 மணியிலிருந்து விமானத் தாக்குதல்களும் ஷெல் தாக்குதல்களும் தாறுமாறாக பாரிய சத்தங்களுடன் நடத்தப்பட்டன.
அவ்வேளையில் சகல வீதிகளிலும் ஹெலிகொப்டர்கள் தாக்குதல் அகோரமான ஷெல் தாக்குதல்களினால் வீதிக்கு வீதி காயப்பட்டவர்கள், இறந்தவர்கள், காயமடைந்து இரத்தம் சிந்திக்கொண்டிருந்தவர்களை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்ல வாகனங்கள் இல்லை.
வாகனங்களை இயக்குவதற்கான எரிபொருட்களும் அற்ற பொருளாதார தடையான பெருமந்தமான காலப்பகுதியாகும். இதேநேரம் காயமடைந்தவர்கள் ஏதோஒரு வழியின் ஊடாக எடுத்துச் செல்லப்பட்டால் அவர்களை காப்பாற்ற மருந்தகங்களோ வைத்தியசாலைகளோ இயங்க முடியாத அவலநிலை. வைத்தியசாலைகளிலும் மருந்துகளோ வைத்தியர்களோ காணப்படாத சூழலுமாக இருந்தது. இறுதியில் காயமடைந்தவர்கள் சிகிச்சையின்றி இறந்த நிகழ்வுகளையும் நாம் மறக்கமுடியாது.
அன்றைய தினம் குடாநாட்டின் பல்வேறு வீதிகளின் ஊடாக நவாலி சென்ற் பீற்றர்ஸ் ஆலயத்திலும் நவாலி சின்னக்கதிர்காம முருகன் ஆலயத்திலும் தாகம் தீர்ப்பதற்காக அமர்ந்து களைப்பாறினர். படுத்து உறங்கினர்.
அவ்வேளையில் யாழ். நகரப் பகுதியில் இருந்து அராலி நோக்கி வந்து கொண்டிருந்த விமானம் தொடர்ச்சியாக விமானம் மூலம் 13 குண்டுகள் தான்தோன்றித்தனமாக மக்கள் ஒன்று கூடியிருந்த மேற்படி இரு ஆலயங்கள் மீதும் வீசப்பட்டன.
அவ்வளவுதான்! நவாலி கிராமம் ஒரு கணம் அதிர்ந்தது. வீதிகள் தடைப்பட்டு, மரங்கள் முறிந்து வீழ்ந்து, வீடுகள் தரைமட்டமாகி, மதில்கள் வீழ்ந்து பாரிய புகைமூட்டம் காணப்பட்டது. நவாலி சென்ற் பீற்றர்ஸ் தேவாலயமும் நவாலி சின்னக்கதிர்காம முருகன் ஆலயமும் மாலை 5.45 மணியளவில் இடம்பெற்ற தாக்குதலில் அதிர்ந்தன. முற்றாக அழிந்து சிதைந்தன.
சுமார் 147 பேர் அந்த இடத்திலேயே குடாநாட்டின் பல்வேறு இடங்களைச் சேர்ந்தவர்கள் பலியானார்கள். இந்த நிகழ்வில் இக்கொடூரச் சாவானது கையிழந்து, காலிழந்து, தலையிழந்து, உடல் சிதறி குற்றுயிராகக் கிடந்த நிகழ்வுகளை எம்மால் இலகுவில் மறந்து விடமுடியாது.
சுமார் 360ற்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை அளிக்காத நிலையில் நீண்டநேரம் இரத்தம் சிந்தி பலர் உயிர் இழந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. அன்றைய தாக்குதலில் பொது மக்கள் சேவையில் பங்கு கொண்ட சில்லாலை பிரிவு சிரேஷ்ட கிராம அலுவலரான பிலிப்புப்பிள்ளை கபிரியேல்பிள்ளை, கிராம அலுவலர் செல்வி ஹேமலதா செல்வராஜாவும் உள்ளிட்ட அரச சேவையாளர்கள் பலர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தனர்.
அன்றையதினம் மக்கள் தொண்டுப் பணியில் ஈடுபட்டு உணவு, குடிநீர் வழங்கி கொண்டிருந்த 48 தொண்டர்களும் அந்தந்த இடத்தில் துடிதுடித்து உயிர் இழந்ததை மறக்கமுடியாது.
இதனை நினைவு கூருமுகமாக இவ்வருடம் இன்று வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு நவாலி சென்ற் பீற்றர்ஸ் திறந்த வெளியரங்களிலும் நவாலி ஸ்ரீ கதிர்காம கந்தன் முருகன் ஆலயத்தில் ஆலய பிரதம குரு சிவத்திரு மாரிமுத்து பத்மநாதன் தலைமையில் காலையிலும் மாலையிலும் விசேட வழிபாடுகள் நடைபெறவுள்ளன.
மேற்படி 1995.07.09ம் திகதி படுகொலை தொடர்பாக நவாலி வடக்கு சோமசுந்தரப் புலவர் வீதியிலும் நவாலி சென்ற் பீற்றர் ஆலய பகுதியிலும் படுகொலை சின்னங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வருடம் ஜூலை 9ஐ தமிழர் தேசம் என்றும் மறந்திடாது.