பயங்கரவாத தடைச்சட்டத்தை வித்தியாவின் வழக்கில் பயன்படுத்துவதை ஏற்கமுடியாது
ஒன்பது சந்தேக நபர்களும் சாதாரண சட்டத்தின் கீழ்தான் கைது செய்யப்பட்டார்கள். ஆனால், விசாரணை மேற்கொள்வதற்காக மட்டும் வலுவிலுள்ள ஒரே சட்டமான பயங்கரவாத தடைச்சட்டம் பிரயோகிக்கப்பட்டுள்ளமை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
தடுப்புக் காவல் விசாரணை முடிவடைந்த பின்னர் மீண்டும் இந்த வழக்கு சாதாரண சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும். குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்ட பின்னர் தண்டனை சாதாரண சட்டத்திலேயே வழங்கப்படும். பயங்கரவாத தடைச் சட்டத்தினைப் பொறுத்தவரை, அந்தச் சட்டத்தில் மரண தண்டனை வழங்க முடியாது.
பயங்கரவாத தடைச்சட்டத்தை வித்தியாவின் வழக்கு விசாரணையில் பயன்படுத்துவதை நான் முற்றுமுழுதாக வரவேற்கவில்லை. ஏனெனில், பயங்கரவாத தடைச்சட்டம் முற்றுமுழுதாக அழிக்கப்பட வேண்டிய ஒரு சட்டமாகும்.
ஆனால், இந்தச் சட்டத் தின் அடிப்படையில் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்தது புலனாய்வுப் பிரிவினரேயாகும். வித்தியாவின் வழக்கு விசாரணைகளை 24 மணித்தியாலத்திலோ அல்லது 48 மணித்தியாலத்திலோ முடிக்க முடியாது என்ற காரணத்தினால் அவர்கள் இவ்வாறானதொரு கோரிக்கையினை முன்வைத்திருக்கலாம்.
அடுத்ததாக, ஒன்பது சந்தேக நபர்கள் இந்தக் கொலையுடன் தொடர்புபட்டிருப்பதால் துரிதமாக விசாரணைகளை முடிக்க முடியாது என்பதாலும் அவர்கள் இவ்வாறானதொரு பொறிமுறையினை கையாண்டிருக்கலாம் என்று வித்தியாவின் குடும்பத்தினர் சார்பில் ஆஜராகும் சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்தார்.
அவர் வழங்கிய செவ்வி முழுமையாக கீழே தரப்படுகின்றது.
கேள்வி: வித்தியா கொலை வழக்கு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகின்றது. இது சட்டரீதியானதா? இது தொடர்பில் உங்கள் அபிப்பிராயம் என்ன?
பதில்: முதலில் பயங்கரவாதத் தடைச் சட்டம் எந்த சூழ்நிலையில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டதென்பதை நாம் பின்னோக்கிப் பார்க்க வேண்டும். தந்தை செல்வாவின் தலைமையில் தமிழ் மக்களின் நியாயமான சட்டரீதியான உரிமைகளுக்காக நடாத்தப்பட்ட அகிம்சை வழிப் போராட்டங்கள் நசுக்கப்பட்ட பின்னர் இளைஞர்கள் ஆயுதமேந்திப் போராடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.
1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க தற்காலிகச் சட்டமாக மூன்று வருடங்களுக்கு மட்டும் எனக் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டம் 1982ஆம் ஆண்டின் 10ஆம் இலக்கச் சட்டத்தின்படி நிரந்தரச் சட்டமாக்கப்பட்டதுடன், 2011ம் ஆண்டு அவசரகால விதிகளின் முக்கிய விதிகள் நான்கையும் இந்தச் சட்டத்தின் 27ம் பிரிவின் கீழ் உட்புகுத்தப்பட்டு நிரந்தரச் சட்டமாக நடைமுறையில் உள்ளது.
அதாவது, குறிப்பிட்ட ஒரு நோக்கத்துக்காக இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. பயங்கரவாதம் என்றால் என்ன?, இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை ஏற்படுத்துவது போன்ற வரைவிலக்கணங்களையும் விடயங்களையும் உள்ளடக்கியதாக இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது.
1979 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. யுத்தம் நிறைவடைந்து ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டு விட்டன, புலிகள் அழிக்கப்பட்டுவிட்டனர் என்றெல்லாம் அரசாங்கம் கூறினாலும்கூட, இன்றுவரை இந்தச் சட்டம் ஒரு நிரந்தரச் சட்டமாகக் காணப்படுகின்றது.
மேலும், இந்தச் சட்டம் நீக்கப்பட வேண்டும். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர், யுவதிகள் விடுதலை செய்யப்படவேண்டும் என்று நாங் கள் தொடர்ந்தும் வேண்டுகோள் விடுத்து வருகின்றோம். ஆனால், இதுவரை பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவில்லை.
இவ்வாறான சூழ்நிலையில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஒரு சரத்தான தடுத்துவைத்து விசாரணை செய்தல் என்ற விடயம் வித்தியாவின் கொலை வழக்கு விசாரணையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தை வித்தியாவின் வழக்கு விசாரணையில் பயன்படுத்துவதை நான் முற்றுமுழுதாக வரவேற்கவில்லை. ஏனெ னில், பயங்கரவாத தடைச்சட்டம் முற்றுமுழுதாக அழிக்கப்பட வேண்டும் என்பது எங்களுடைய நீண்டகால கோரிக்கையாகும்.
இந்தச் சட்டத்தின் 9 ஆம் பிரிவின் கீழ் பாதுகாப்பு அமைச்சரினால் வழங்கப்படும் தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்று இந்த வழக்கின் மேலதிக விசாரணைகளை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையினை புலனாய்வுப் பிரிவினர் முன்வைத்தனர்.
வித்தியா கொலை சந்தேக நபர்களை பொதுச் சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டுவந்த பொலிஸார் என்னென்ன காரணங்களுக்காக பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நாடினார்கள் என்பதை விரிவாக பார்ப்போமாயின், வித்தியாவின் படுகொலை தொடர்பான விசாரணைகளை வெறுமனே தனியான கொலையாகவோ, பாலியல் வன்புணர்வாகவோ மட்டும் நோக்கமுடியாது.
இதன் பின்னணியில் திட்டமிட்ட செயற்பாடுகள் இருக்கலாம். மேலும், முக்கிய சந்தேக நபர்கள் இருக்கலாம் என்ற சந்தேகம் வலுவடைந்துள்ளது என்பதை வித்தியா கொலை செய்யப்பட்ட தினமான 2015 மே மாதம் 13ம் திகதியிலிருந்து நடைபெறும் சம்பவங்களும், வித்தியா கொடூரமாக சித்திரவதை செய்து படுகொலை செய்யப்பட்ட விதம், இந்த வழக்கின் ஆரம்ப விசாரணைகளை மேற்கொண்ட ஊர்காவற்றுறை பொலிஸாரின் அலட்சியப் போக்கு, அதன் பின்னணியில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் இன்னும் சில அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டமை.
அடுத்ததாக, இந்த வழக்கின் ஒன்பதாவது சந்தேகநபரான சுவிஸ் குமார் எனப்படும் மகாலிங்கம் சசிகுமார் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகக் கூறப்படுபவர் தப்பிச் சென்றோ அல்லது தப்ப விடப்பட்டோ மறுதினம் வெள்ளவத்தையில் வைத்து கைது செய்யப்பட்டமை, மேலும் ஒன்பதாவது சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, அவர் தொடர்பில் கொடிகாமம் பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி வழங்கிய மேலதிக அறிக்கையும் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தின. அந்த அறிக்கையில் ஒன்பதாவது சந்தேக நபருக்கு சாதகமான தன்மை காணப்பட்டது.
இதனையடுத்தே, வித்தியாவின் வழக்கு விசாரணை பொலிஸ் மா அதிபரின் உத்தரவிற்கமைய குற்றப் புலனாய்வுப் பிரிவின் கூட்டுக் கொள்ளை மற்றும் மனித படுகொலை தொடர்பிலான விசாரணைப் பிரிவிற்கு கையளிக்கப்பட்டு அந்தப்பிரிவின் பொறுப்பதிகாரி நிசாந்த டீ சில்வா தலைமையிலான விசேட பொலிஸ் குழு விசாரணைகளை நடாத்தி வருகிறது.
மேலும், வித்தியாவின் வழக்கு விசாரணைகளை 24 மணித்தியாலத்திலேயோ அல்லது 48 மணித்தியாலத்திலேயோ முடிக்க முடியாது என்ற காரணமும் புலனாய்வுப் பிரிவினர் இவ்வாறானதொரு கோரிக்கையினை முன்வைத்திருக்கலாம்.
அடுத்ததாக ஒன்பது சந்தேக நபர்கள் இந்தக் கொலையுடன் தொடர்புபட்டிருப்பதால் துரிதமாக விசாரணைகளை முடிக்க முடியாது என்பதாலும் அவர்கள் இவ்வாறானதொரு பொறிமுறையினை கையாண்டிருக்கலாம்.
மேலும், இந்த வழக்கைப் பொறுத்தவரை நேரடிச்சான்றுகள் எதுவும் இல்லை. நேரடியாக துன்பத்தையும், துயரத்தையும் அனுபவித்து இறந்த வித்தியாவுக்குத்தான் அங்கு உண்மையில் என்ன நடந்தது என்பது தெரியும்.
இதனடிப்படையில், நேரடிச்சான்று இல்லாததினால் ஏனைய சான்றுகளுக்குச் செல்ல வேண்டும். ஏனைய சான்றுகள் என்று எடுத்துக்கொண்டால், ஒன்று சூழ்நிலைச் சான்று. அடுத்தது அறிவுசார் சான்றான அதாவது, மரபணுச் சான்றுகளை குறிப்பிடலாம்.
குற்றவாளிகளுக்கு விரைந்து அதிக பட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும், தண்டிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்புக்களை நிறைவு செய்யும் நோக்கத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தை பாவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்பதில் இந்தச் சட்டதால் பாதிக்கப்பட்ட நமது உறவுகள் நன்கறிவார்கள்.
ஆனால், எமது நாட்டின் தண்டனைச் சட்டத்திலோ அல்லது குற்றவியல் கோவையிலோ, இவ்வாறான கடுமையான குற்றங்களுக்காக போதியளவு கால அவகாசம் எடுத்து தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான சட்டம் தற்போது இல்லை. அவ்வாறானதொரு சட்டம் இருந்திருக்குமேயானால், நிச்சயமாக பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கமாட்டாதெனக் கருதலாம்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் பலர் 15 தொடக்கம் 20 வருடங்களுக்கு மேலாகவும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். எது எப்படியோ, நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
அந்த வகையில், இந்த விடயம் ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் வந்தபோது, நீதிமன்றக் காவலில் உள்ள சந்தேக நபர்கள் பாதுகாப்பு அமைச்சின் பணிப்புரைக்கமைய 30 நாட்கள் மாத்திரமே பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவார்கள் என்று தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்.
கேள்வி: அவ்வாறாயின், பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் விசாரணைகளை மேற்கொண்டுவிட்டு சாதாரண சட்டத்தின்கீழ் தண்டனை வழங்க முடியுமா?
பதில்: பயங்கரவாத தடைச்சட்டம் விசாரணைக்கு மாத்திரமே பயன்படுத்தப்படும். இலங்கையில் நடைமுறையிலுள்ள சட்டங்களில் தடுத்து வைத்து விசாரணை செய்ய இரண்டு சட்டங்கள் மட்டுமே உண்டு. ஒன்று போதைப்பொருள் சட்டத்தின் பிரகாரம் சந்தேக நபர்களை ஏழு நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரிக்க நியாயாதிக்கம் கொண்ட நீதவான் நீதிமன்றின் கட்டளை பெறமுடியும்.
மற்றையது, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் 9ஆம் பிரிவின் கீழ் பாதுகாப்பு அமைச்சரிடம் தடுப்புக் காவல் உத்தரவினைப் பெற்று சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணை நடாத்தமுடியும். தடுத்து வைத்து விசாரணைகளை நடாத்த நடைமுறையில் வேறு சட்டங்கள் இல்லாத காரணத்தினால், பயங்கரவாத தடைச்சட்டத்திலுள்ள தடுப்புக்காவல் உத்தரவினைப் பெற்றிருக்கலாம்.
இந்த ஒன்பது சந்தேக நபர்களும் சாதாரண சட்டத்தின் கீழ்தான் கைது செய்யப்பட்டார்கள். ஆனால், விசாரணை மேற்கொள்வதற்காக மட்டும் வலுவிலுள்ள ஒரே சட்டமான பயங்கரவாத தடைச்சட்டம் பிரயோகிக்கப்படடுள்ளமை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
தடுப்புக் காவல் விசாரணை முடிவடைந்த பின்னர் மீண்டும் இந்த வழக்கு சாதாரண சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும். குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்ட பின்னர் தண்டனை சாதாரண சட்டத்திலேயே வழங்கப்படும். பயங்கரவாதச் சட்டத்தினைப் பொறுத்தவரை, அந்தச் சட்டத்தில் மரண தண்டனை வழங்க முடியாது.
1982ம் ஆண்டு கொழும்பு மேல் நீதிமன்றில் குட்டிமணி-, தங்கத்துரை, ஜெகன் ஆகியோருக்கு எதிராக முதலாவது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நடைபெற்ற வழக்கில் தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் மு. சிவசிதம்பரம், கரிகாலன் என அழைக்கப்படும் சட்டத்தரணி நவரட்ணம், சட்டத்தரணி உருத்திர மூர்த்தி ஆகியோருடன் நானும் ஆஜராகியிருந்தேன். இந்த வழக்கில் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு அமைவாக குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டது.
நான்கு மாதங்களில் வழக்கு விசாரணைகள் முடிவடைந்த பின்னர் நீதிமன்றம் தீர்ப்பினை சாதாரண சட்டத்தில் வழங்கியிருந்தது. அதாவது, இந்த வழக்கைப் பொறுத்தவரை சாதாரண சட்டத்தில் கைது செய்யப்பட்டு பயங்கரவாத சட்டத்தில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று சாதாரண சட்டத்தில் தண்டனைகள் வழங்கப்பட்டன. ஏனெனில், பயங்கரவாதச் சட்டத்தில் மரணதண்டனை வழங்க முடியாது. கூட்டு வன்புணர்வு கொலைக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும்போது மரணதண்டனை வழங்கப்படலாம்.
கேள்வி: வித்தியா கொலை வழக்கு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகின்றது. இதுபோன்ற வழக்குகள் கடந்த காலங்களில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டுள்ளனவா?
பதில்: இதற்கு முன்னர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய வாஸ் குணவர்தன இம்தியாஸ் என்ற வர்த்தகரை சதி செய்து கொலை செய்ததாகவும், இன்னும் பல மோசடிக் குற்றச்சாட்டுகளுக்காகவும் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
வாஸ் குணவர்தன மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரணை இடம்பெற்றது. இதேவேளை, சட்டம் எதைக் கூறினாலும் சில சந்தர்பப்பங்களில் சூழ்நிலைக்கு ஏற்ப விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் சட்டம் வளைந்து கொடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது.
சட்டம் எதைக் கூறினாலும் நீதி நிலைநாட்டப்படவேண்டும். அது இனத்தையோ, மதத்தையோ சார்ந்ததல்ல. நாம் மனிதர்கள் என்ற வகையில் நீதி வழங்கப்படவேண்டும். சட்டம் மக்களுக்கானது. சட்டத்துக்காக மக்கள் என்ற நிலை ஏற்படக்கூடாது.
கேள்வி: பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளமையினால், வித்தியாவின் வழக்கில் குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை வழங்கப்படுமா?
பதில்: சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டால், அவர் குற்றவாளியா? சுற்றவாளியா? என்பதை தீர்மானிப்பது புலன் விசாரணையும் சான்றுகளுமேயாகும். சான்றுகள் மிகவும் முக்கியமாகும். அந்தவகையில் ஒரு வழக்குக்கு சான்றுகள் மிகவும் முக்கியமானவை.
ஆகவே விசாரணை விரைவாக நடந்து முடிந்த பின்னர் இந்த விசாரணைக் கோவை சட்டமா அதிபருக்கு அனுப்பப்படும். பின்னர் சட்டமா அதிபர் குற்றச்சாட்டுப்பத்திரத்தை மேல் நீதிமன்றில் தாக்கல் செய்ய வேண்டும். அதன் பின்னர் இந்த வழக்கின் விசாரணையை துரிதப்படுத்த நீதி நலன்கருதி விசேட நீதி மன்றமோ அல்லது மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட நீதி ஆயம் (Trial At-�Bar) ஒன்றினால் விளக்கம் நடாத்தப்படலாம்.
வித்தியா மீதான இந்த கொடூர வல்லுறவு மற்றும் படுகொலைச் சம்பவம் மக்கள் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமிழர்கள் மட்டுமன்றி, தெற்கிலுள்ள ஏனைய இன மக்களும் பெரும் போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.
இதனால் ஏனைய வழக்குகளுடன் வித்தியாவின் கொலை வழக்கை ஒப்பிட முடியாது. இதுவொரு சமூகப் பிரச்சினையாக மாறியுள்ளது. எனவே, இந்த வழக்கு விசாரணைகள் விரைவாக இடம்பெற வேண்டும், குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்பதில் மக்கள் மிகவும் ஆர்வமாக இருக்கின்றார்கள்.