Breaking News

மஹிந்த மீண்டும் அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை: விக்கிரமபாகு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை எனவும் அவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெற்றால் அதற்கு எதிராக போராடுவோம் எனவும் நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் வெள்ளிக்கிழமை (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

'மஹிந்த மீண்டும் அரசியலுக்கு வருவதற்காக முயற்சிகளை மேற்கொள்கின்றார். மஹிந்த ராஜபக்ஷவையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் இணக்கப்பாட்டுக்கு கொண்டு வருவதற்காக குழுவொன்று சில நாட்களுக்கு முன்னர் நியமனம் பெற்றது. மஹிந்த அரசியலுக்கு வருவதில் எங்களுக்கு எந்தவித விருப்பமும் இல்லை. வருவதற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்கள் செய்வோம்.

பிரதம வேட்பாளராகவோ, நாடாளுமன்ற உறுப்பினராகவோ அல்லது தேசியப் பட்டியல் மூலமோ மஹிந்த அரசியலுக்கு வரமுடியாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அது மகிழ்சியளிக்கின்றது. பேரினவாதச் செயற்பாட்டாளர்கள் மீண்டும் அரசியலுக்கு வரக்கூடாது.

தற்போது காலாவதியான நாடாளுமன்றம் உள்ளது. அந்த நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தல் வைத்து புதிய நாடாளுமன்றத்தை தெரிவு செய்ய வேண்டும். தேர்தலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம். அனைத்து கட்சிகளும் இணைந்து செயற்பட்டு சிறுபான்மையினரை ஒடுக்கிய மஹிந்த பேரினவாதம் மீண்டும் தலைதூக்க இடமளிக்கக்கூடாது. 

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்காக தொடர்ந்தும் குரல் கொடுப்போம். அது முக்கியமான பிரச்சினையாக இருக்கின்றது. இராணுவத்தினர் வைத்துள்ள பொதுமக்களின் காணிகளை பொதுமக்களிடம் வழங்கவேண்டும் என அழுத்தங்கள் கொடுப்போம். இராணுவத்தினரைக் குறைக்கச் சொல்லி அழுத்தம் கொடுக்க மாட்டோம்.

இருந்தும் தமிழர் பிரதேசங்களில் ஏன் அதிகளவான இராணுவத்தினர் இருக்கின்றனர் என கேள்விகளை எழுப்புவோம். இராணுவத்தினருக்கு தேவைக்கு காணிகளை எடுப்பது என்றால், வடமாகாணத்திலுள்ள அரசுடன் கதைத்து முடிவுகளை எட்டிய பின்னர் எடுக்க வேண்டும்.

அதை விடுத்து பலவந்தமாக காணிகள் எடுப்பதற்கு எதிராக குரல் கொடுப்போம். காணிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக விடுவிக்கப்பட்டுள்ளன. ஆனால் விவசாய காணிகளை தொடர்ந்தும் இராணுவத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். அதற்கு எதிராக குரல் கொடுப்போம்.

சிறைகளில் 312 தமிழ் அரசியல் கைதிகள் இருக்கின்றனர் என அரசாங்கம் அறிவித்துள்ளது. அவர்கள் தங்களது தனிப்பட்ட பிரச்சினைக்காக சிறைகளுக்குச் செல்லவில்லை. அவர்கள் விடுவிக்கப்படவேண்டும். இதற்கு அரசு முனைப்புடன் செயற்படவேண்டும். காணாமற்போனோர் தொடர்பில் அரசு பொறுப்புக் கூறவேண்டும். அவர்கள் எங்கிருக்கின்றார்கள், அவர்களின் நிலைமைகள் என்ன என்பது தொடர்பில் வெளிப்படுத்தப்பட வேண்டும்' என்று அவர் மேலும் கூறினார்.