இனியும் முகாம் வாழ்க்கையை தொடர முடியாது! கண்ணீருடன் வலி.வடக்கு மக்கள்
25 ஆண்டுகள் நிறைவடைந்து முகாம் வாழ்க்கையையே தொடரவேண்டிய அவ-லத்திற்குள் தள்ளப்பட்டுள்ளோம். தொடர்ந்தும் எம்மால் இந்த நிலையில் நீடிக்க முடியாது என கண்ணீருடன் தெரிவிக்கும் வலி. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து வாழும் மக்கள் எவ்வாறாவது தமது பிரதேசங்களுக்குள் மீண்டும் செல்வதையே இலக்காக கொண்டிருக்கின்றோம். எனவும் குறிப்பிட்டனர்.
1990ஆம் ஆண்டு ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக வலி. வடக்கிலிருந்து நாட்டின் பல பாகங்களுக்கும் மக்கள் இடம்பெயர்ந்து சென்றிருந்தனர். அதன் பின்னர் இராணுவம் அப்பிரதேசத்தில் உயர் பாதுகாப்பு வலயமாக உருவாக்கி தொடர்ச்சியாக நிலைகொண்டு இருக்கின்றது.
தற்போதுவரை இவர்களது மீள்குடியேற்றம் தொடர்பில் எந்தவிதமான உறுதிப்பாடுகளும் வழங்கப்படாதநிலையில் நலன்புரி முகாம்களில் தங்கியிருக்கின்றனர். நேற்றுடன் தமது சொந்த நிலத்தை விட்டு இடம்பெயர்ந்து 25 ஆண்டுகள் நிறைவுக்கு வந்தநிலையில் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
நாம் எமது சொந்த நிலத்தை விட்டு வெளியேறும் போது எந்தவிதமான உடமைகளையும் கையில் எடுத்துசென்றிருக்கவில்லை. உடுத்த உடையுடன் உயிரை கையில் பிடித்துக்கொண்டு வெளியேறியிருந்தோம். அதன் பின்னர் எத்தனையோ விதமான இன்னல்களுக்கு முகம்கொடுத்து வந்தோம். என்றோ ஒருநாள் எமது சொந்த நிலத்திற்கு திரும்பி மீண்டும் எமது வாழ்வை தொடரலாம் என்ற நம்பிக்கை இன்றும் உள்ளது.
கடந்த காலத்தில் காணப்பட்ட அரசாங்கங்கள் எமக்கு எத்தனையோ உறுதிமொழிகளை வழங்கியபோதும் இன்றுவரையில் எமது மீள்குடியேற்றம் என்பதற்கான உத்தரவாதம் கேள்விக்குறியாகவே உள்ளது. இறுதியாக புதிய அரசாங்கம் தனது நூறுநாள் வேலைத்திட்டத்தில் எம்மை மீள்குடியேற்றுவதாக அறிவித்தபோதும் இன்றுவரை அதற்கான எந்தவிதமான ஆக்கபூர்வ நடவடிக்கைகளும் முன்னெடுத்திருப்பதாக அறியவில்லை.
எனவே, எம்மால் தொடர்ந்து போலியான வாக்குறுதிகளை நம்பிக்கொண்டு நலன்புரி முகாம்களில் அவலம் நிறைந்த வாழ்க்கையை வாழமுடியாது. எமக்கு உரிய பதில் கிடைக்க வேண்டும் எமது நிலங்கள் எம்மிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இல்லை-யேல் எவ்வாறாவது நாம் எங்களுடைய மண்ணுக்கு செல்வோம் இதுவே எமது இலக்கு என்றார்கள்
வலி வடக்கு பிரதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் 38 நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து வருவதாகவும் அண்மையில் மக்கள் மீள்குடியேற்றத்திற்காக அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்ட 620 ஏக்கர் நிலப்பரப்பில் 800 குடும்பங்கள் மீள் குடியேற்றத்திற்காக பதிவு-செய்துள்ளதாகவும் வலி வடக்கு பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்-கின்றன.