உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் நடேசன், புலித்தேவன் உறவினர்கள்!
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் தலைவர்கள் சிலர் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது எதிர்கொண்ட சம்பவங்கள் தொடர்பில் அவர்களது உறவினர்கள் விளக்கம் அளிக்கவுள்ளனர்.
குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் துறை தலைவர் நடேசன் மற்றும் மூத்த தளபதி புலித்தேவன் ஆகியோரின் உறவினர்கள் இவ்வாறு விளக்கம் அளிக்கவுள்ளனர்.
இறுதிக் கட்ட யுத்தத்தில் சரணடைந்து பின் காணாமல் போனவர்கள் தொடர்பான விசேட கூட்டம் ஒன்று ஜெனீவாவில் எதிர்வரும் 24ம் திகதி இடம்பெறவுள்ளது. தமிழகத்தில் இயங்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் கீழ் உள்ள பசுமை தாயகம் அமைப்பு, உலகத் தமிழ் பேரவை மற்றும் ஐக்கிய அமெரிக்கா தமிழர் பாதுகாப்பு பேரவை ஆகியன இணைந்து இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன.
பசுமை தாயகம் அமைப்பு சார்பில் பாட்டாளி மக்கள் கட்சி பேச்சாளர் கே.பாலு மற்றும் அருள் ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் உள்ளிட்ட 18,000 பொது மக்கள் இறுதி யுத்தத்தில் இராணுவத்திடம் சரணடைந்ததாகவும் யுத்தம் முடிந்து 6 வருடங்கள் ஆகியும் அவர்களுக்கு என்ன நடந்ததென்று தெரியவில்லை எனவும் கே.பாலு தெரிவித்துள்ளார்.
காணாமல் போனவர்கள் தொடர்பான பட்டியலை வெளியிட இலங்கை அரசாங்கம் தொடர்ந்து மறுத்து வருவதாகவும் காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மை வெளியில் வந்தால் மாத்திரமே நிலையான சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.