கூட்டமைப்பு சார்பில் பொதுத் தேர்தலில் போட்டியிட பலர் விண்ணப்பித்துள்ளனர் - அரியநேத்திரன் எம்.பி.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவதற்கு பலர் விண்ணப்பித்துள்ளனர் என்று பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்துக்கான வேட்பாளர் தெரிவு பற்றி கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு பலர் விண்ணப்பித்துள்ளனர். கட்சி செயலாளருக்கு மட்டுமன்றி எமக்கும் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. எனினும் தெரிவு இன்னும் நடைபெறவில்லை. அதனை தெரிவுக் குழுவே தீர்மானிக்கும். இக்குழுவில் நாங்கள் இடம் பெற மாட்டோம். தேர்தலில் போட்டியிடவிருப்பவர்கள் இடம் பெற முடியாது.
தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள் தொடர்ந்தும் போட்டியிடுவதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இக்கட்டான காலப்பகுதிகளான 2004,2010 தேர்தல்களில் நாம் போட்டியிட்டு கட்சியை இந்த நிலைக்குகொண்டு வந்தோம். அப்போது போட்டியிட யாரும் முன்வரவில்லை. நாம் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்தோம். 2012 ஆம் ஆண்டில் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலின் போது வேட்பு மனுவில் கையொப்பம இட்டவர்கள் அச்சம் காரணமாக பின்வாங்கிய வரலாறும் உள்ளது.
தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து போட்டியிட முடியுமா? முடியாதா? என்ற நிலைப்பாடு மட்டக்களப்புக்கு மட்டும் பொருந்த மாட்டாது. அப்படியானால் முழு வடக்கு, கிழக்கையும் உட்படுத்தவேண்டும். எவ்வாறாயினும் போட்டியிட முன்வருவது ஜனநாயக உரிமை, கட்சியே முடிவு எடுக்கும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் எட்டுப்பேர்தான் போட்டியிட முடியும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் நான்கு கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. பெண்கள், இளைஞர்கள் ஆகியோருக்கும் இடம் கொடுக்க வேண்டும் என்ற கருத்துக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. அதேவேளை கடந்த பொதுத் தேர்தலில் கிறிஸ்தவர்களின் சார்பில் ஒருவருக்காவது வேட்பாளர் பட்டியலில் இடமளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் முன் வைக்கப்பட்டிருக்கிறது. வேட்பாளர் தெரிவின்போது இந்தக் கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.
எட்டுப்பேரில் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரும் நீங்கலாக ஐந்து அபேட்சகர்கள் இடம் பெறுவர். இதில் ரெலோ, புௌாட், ஈ.பி.ஆர்.எல்.எல் ஆகிய மூன்று கட்சிகளுக்கும் இடமளிக்க வேண்டியுள்ளது. இக்கட்சிகள் பெண்கள், இளைஞர்கள், கிறிஸ்தவர்களுக்கு இடமளிக்காவிட்டால் அதனை ஈடுசெய்ய வேண்டிய பொறுப்பும் கூட்டமைப்புக்கு உள்ளது என்றார்.