எப்படியிருக்கிறது தமிழரின் முதல் கிராமம் – ஒளிப்படக் கதை
இலங்கையில் தமிழ்க் கிராமங்களின் தொடக்க இடம் எது?பட்டெனப் பதில் வரும் அம்பாறை எல்லைக் கிராமங்கள்என்று.
அப்படியாயின், எந்த வரைபடத்திலாவது அந்தக்கிராமங்களை ஆழ நுணுகிப் பார்த்திருக்கிறோமா? அவற்றின்பெயர்களையாவதுதேடிப்
ஆனால் எனக்கு இந்தக் கேள்விகளுக்குப் பதில் தெரிய வேண்டும்போலிருந்தது. கடந்த மாதம் வருமானத்தில் சிக்கெனப்பிடித்தசிறுதொகைப் பணத்துடன் தமிழர்களின் தொடக்கக் கிராமத்தைப் பார்ப்பதற்கான இனிய பயணத்தைத் தொடங்கினேன். எப்பவும் போலஇப்போதும் தனியே தான்.
யாழ்ப்பாணத்திலிருந்து சராசரியாக மணிக்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கும் பேரூந்து ஒன்றில் தொற்றிக்கொண்டால் 11ஆவது மணிநேர முடிவில் அந்தக் கிராமத்துக்கு சில கிலாமீற்றர்கள் இருக்கும் இடத்தில் (அக்கரைப்பற்று, பொத்துவில், அம்பாறை,திருக்கோவில்) நீங்கள் இருப்பீர்கள். இடையில் தேநீர் பொழுது, உணவுப் பொழுது, கழிவுப்பொழுது உள்ளடங்கலாக. 32 ஆவது மணிநேரத்தின் முடிவில் தமிழ் சினிமாவில் கதாநாயகன் இறங்குவதுபோல நீங்கள் தேடிப்போன தமிழனின் எல்லைக் கிராமத்தின்முடிவில் இறங்கி நிற்க முடியாது. அந்தக் கிராமங்களுக்குப் பல கிலோ மீற்றர்கள் இருக்கும் நிலையிலேயே பேருந்துகளின்பயணங்கள் முடிந்துவிடும். இறங்கி நின்று ‘பித்தாபித்தா’ என்று சற்று நேரம் விழிபிதுங்க வேண்டும். பி;ன்னர் வழியில் வரும்யாரிடமாவது ‘தமிழாக்கள் இங்க எந்த இடத்தில் ஆகலும் தொங்கலாக இருக்கினம்’ என்று ஒரு கேள்வியைக் கேட்கவேண்டும். ஒருமாதிரியாக மேலும், கீழும் பார்த்துவிட்டு சாகாமம், மாணிக்கமடு, காஞ்சிரங்குடா, கஞ்சிகுடியாறு, தங்கவேலாயுதபுரம் என்று பதில்வரும்.
இந்தக் கிராமங்களுக்கு எப்பிடி போகலாம்? மறுகேள்வியையும் அவரிடமே கேட்பீர்கள்.
‘பஸ் பின்னேரம் ஒண்டு, காலம ஒண்டுதான் வரும் மோனே (மகனே). ஆட்டோவில தான் போய்க்கொள்ளலாம். ஆட்டோக்குதமிழாக்கட (தமிழர்களினுடையது) எண்டால் 5 ரூவா எடுப்பாங்கள். சிங்கள, முஸ்லிம் ஆக்கட எண்டால் 600-700 ரூவா எடுப்பாங்கள்.அந்தப் பக்கம் நிண்டு வாறபோற வாகனத்துக்குக் கையப்போட்டால் (வழிமறிப்பது) சில பேர் ஏத்திக்கொண்டு போய் விடுவாங்கள்”.அவரின் அனுபவப் பதில் பளிச்சென்றது.
அவர் சொன்னதுபோலவே அந்தப் பக்கம் நின்றதும், முதல் ஒரு கூலர், கையைப் போட்டேன். பறந்தது. பிறகு ஒரு ஆட்டோ, என்னைக்கண்டதும் ஸ்லோவ் அடித்தது, மற்றைய பக்கம் திரும்பிக் கொண்டேன். 3 ஆவதாக ஒரு மோட்டார் சைக்கிள். என் நான்குபற்களையாவது காட்டிக்கொண்டு கையை நீட்டினேன். காலைக் குத்தி பிரேக் அடித்து நிறுத்தினார். அப்படியிருந்தும் என்னைக் கடந்துபோய்தான் அந்த வண்டியால் நிற்கமுடிந்தது. முகம் முழுவதும் முள்போல தாடி. குழிவிழுந்த கண்கள். குள்ளமுமில்லாத,உயரமுமில்லாத மெல்லிய உடல் தோற்றம். சரம், சேட் உடுத்தியிருந்தார்.
‘எங்க போகேணும்” என்றார். அந்த ஊரில் நான் சந்தித்த முதல் நபர் சொன்ன இடத்தை உச்சரித்தேன். சாகமம் என்றேன்.
‘அது சாகமம் இல்ல மோனே. சாகாமம். வாங்க நானும் அங்க இரி(ரு)க்கிறவன்தான். கூட்டிப்போறன்” என்ன விசயமா வாறேள்(வாறியள் வருகிறீர்கள்)? வந்த விசயத்தைச் சொன்னேன். ‘வாங்க தம்பி, வந்து பாருங்க நம்மட ஆக்கள் படுற கஸ்ரத்த’ தொடர்ந்தும்சாகாமத்தின் கஸ்ரங்களை ஓயாமல் சொல்லிக்கொண்டிருந்தார். காற்றின் வேகமுமம், சைக்கிளின் சத்தமும், அது கிடங்குபள்ளங்களுக்குள் விழுந்தெழும்போது எழும் இரைச்சலின் லயமும் அவரின் பேச்சை தெளிவற்றதாக்கியது. நான் வந்த பாதையைத்திரும்பி பார்த்தேன். கல்முனை, சாய்ந்தமருது, நிந்தவூர், அக்கரைப்பற்று, திருக்கோவில் என அபிவிருத்தியின் அடையாளங்களானபிரமாண்டமான வணிக மையங்களும், கட்டடங்களும், அவரோகணத்தில் தெரிகின்றன.
நான் இப்போது பயணித்துக் கொண்டிருக்கும் இடத்தில் நின்று பார்த்தால் பெரும் அபிவிருத்தியின் மலைகளாகத்தோற்றமளிக்கின்றன. சட்டென இலங்கையின் புறச்சூழல் மாறிவிட்டதாக ஓர் அதிசயம். ஈரானிய படங்களில் வரும் பெரும்பாலைவன சாலைக்குள் பயணிப்பதுபோன்ற ஓர் உணர்வு.
அது தொல்லியல் படித்துக்கொண்டிருந்த நேரம். தோன்மையான காலத்தில் மக்கள் வாழ்ந்தனர் என்பதை சுற்றுச்சூழலைஅவதானிப்பதன் மூலமே கண்டுபிடிக்கலாம் எனவும், அதற்குரிய அம்சங்கள் கீழ்வருவனபோல இருக்கும் எனவும்ஆய்வுமுறையியல் பேராசிரியர் சொல்லியிருந்தமையை பல தடவைகள் சூழலில் பிரதியிட்டுப் பார்த்திருக்கிறேன்.
‘எவ்வளவுதான் சூழலில் நீர்வளமும் ஈரழிப்பும் இருந்தாலும், காய்ந்து சருகாகவே நிலமேடு காட்சியளிக்கும். தொடர்ச்சியானகாடுகளைப் பார்க்க முடியாது. ஆங்காங்கே பறட்டைக்காடுகளும் மரங்களும் இருக்கும். பரந்த மண் மேடுகளும், மலைமேடுகளும்ஆங்காங்கே முளைத்திருக்கும். அவற்றை இன்னும் ஆழமாகப் பார்த்தால் ஒவ்வொரு காலத்திலும் மனிதர்கள் வாழ்ந்தமைக்கானதடயங்கள் இருக்கும். இவற்றுக்கும் மேலாக அந்த இடங்களில் மக்கள் வசித்தால், அவர்களிடம் கட்டாயம் மந்தை வளர்ப்பு,வேட்டையாடல் உள்ளிட்ட தொன்ம தொழில்கள் இருக்கும், கூட்டம் கூட்டமாக அதேநேரத்தில் தத்தமக்கு வசதியான இடங்களில்தொகுதி தொகுதியாக குடிசைகளை அமைத்திருப்பர். மாடு, ஆடு வைத்திருப்பவர்கள் குன்றுகளின் சாரலில் இருந்தால், வேட்டை மற்றும் விவசாயம் செய்பவர்கள் பள்ளமான வெளியில் இருப்பர்” என்று பேராசிரியர் சொன்னமை நினைவுக்கு வர,
“இந்தப் புட்டிக்கு அங்கால 2002 ஆம் ஆண்டு வரைக்கும் இயக்கம், இங்கால ஆமி நிண்டவங்க. இனி நாங்க போகப்போறதுஇயக்கத்துக்கும், ஆமிக்கும் நடுவில இருந்த சாகாமம் கிராமத்துக்குள்ள என்று ஒரு அறிமுகத்தைத் தந்து, என்னைச் சாகாமத்துக்குள்இழுத்துவந்தார் அவர். சாகாமத்தைப் பார்த்தவுடனேயே, இங்கு பல நூற்றாண்டுக்கணக்கில் மனிதர்கள் வாழ்ந்துள்ளார்கள் என்றஅறுதியான முடிவுக்கு வந்துவிட்டேன்.
இறங்கிக் கால், கையை நிமிர்த்திக்கொண்டு வயல் வெளியைப்பார்த்தேன், தூரத்தே ஒருவர் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கிறார்.
உங்களோட கதைக்கோணுமாம். என்று என்னுடன் வந்தவர் கூப்பிட்டார்.
எவ்வளவு காலாம அய்யா இங்க இருக்கிறியள்? என் கேள்வி. ‘அது தெரியாது. எங்களின்ட எல்லா தலைமுறையும் இங்கதான்வாழ்ந்தது. யாரும் வெளியால இருந்து வரல்ல’.
‘வாங்க தம்பி வீட்ட போவம்’ மறுக்க முடியவில்லை. முள்வேலிக்குள்ளால் நுழைந்து அவரின் வீட்டுக்குப் போனால் அது வீடுமல்ல,குடிசையுமல்ல. உலகமும், இலங்கையும், இலங்கையில் மீள் குடியேற்றம் என்று அகதிகளின் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளிவைத்துவிட்டதாகச் சொன்னபின்னரும் சாகாமம் கிராமத்தவரின் வீடுகள் இப்படித்தான் இருக்கின்றன.
‘இது மூனாம் முறையா குடியேறியிருக்கம். யுத்தத்தில 1990 இல ஓடிப்பேயிற்றம். பிறவு 1996 இல வந்தனாங்க ஊருக்கு. பிறவு 1998இல சுட்டுத் துரத்திட்டானுவ. விநாயகபுரத்தில இருந்துபோட்டு 2000 இல மறுகா வந்தம். 2000 இல மறுகாவும் துரத்திட்டானுவ.அதுக்குப் பிறவு 2002 இங்க வந்தம். வந்தவுடன வீட்டுத்திட்டம் தாறம் எண்டானுவ. பதிவுகள் எடுத்த. ஆனா ஒண்டும் தரல்ல. பாருங்கஎன்ர வீட்ட’ அவர் தன் வீட்டைக்காட்ட நான் போட்டோ எடுத்துக் கொள்கிறேன்.
கிழக்கில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கும்,இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கும் இடையிலானசூனியபகுதியில், அதுவும் மேடான ஓரிடத்தில் சாகாமம்அமைந்துவிட்டதால் அதிகளவான தாக்குதல்களையும்எதிர்கொண்டிருக்கின்றனர்.
அதிகளவான உயிரிழப்புக்களுடன்,வீடு, தோட்டம், துறவு, மரம் என அனைத்துவகையானசொத்துழப்புக்களையும்இழந்திருக்கின்றனர். போருக்கு முன்னர்600க்கு மேற்பட்ட குடும்பங்கள் இருந்த இடத்தில் போர் முடிந்ததும்126 குடும்பங்களேசாகாமத்தில் மீளக்குடியேறியிருக்கின்றனர்.மிகுதிக் குடும்ப ங்கள் எங்க?
"சண்ட நடந்த நேரமெல்லாம் கண்டபடி சுட்டுத்தள்ளினவங்க. கடத்திக்கொண்டு போனாங்க. அதுபோக இவ்வளபேர்தான் மிஞ்சினம்,”என்று தன் குடிசையின் வாசலில் நின்று அவருக்கு முன்னால் பரந்த வெளியைப் பார்க்கிறார் அந்த மேய்ப்பன்.
‘அந்தப் பக்கம் மக்கள் கொஞ்சம் கூடப்பேர் இருக்கா. அங்க பேயிற்றுக் கதைப்பம் வாங்க,” அழைத்துப் போகிறார் மோட்டார்சைக்கிள்காரர்.
அடுத்த மக்கள் குடியிருப்பு நோக்கிப் பறக்கிறது பைக். இடையில் அந்த ஊர் பாடசாலை. ‘பள்ளிக்கூடம் இண்டைக்கு இல்லையோஅண்ண’ ‘பள்ளிக்கூடத்த நிப்பாட்டி கன காலம் ஆயிற்று தம்பி’
இங்க எப்பிடி பிள்ளையள் படிக்கிற. என்ன வசதி இருக்க நம்மட்ட. வந்து பள்ளியப் பாருங்க. கைவிடப்பட்ட பாடசாலைக்குள்அழைத்துப் போகிறார். அந்தப் பாடசாலை கலகலப்பாக இயங்கியதற்கான சான்றுகள் கொட்டிக் கிடக்கின்றன. மாணவர்கள் போரின்நினைவுகளை வரைந்து பழகியிருக்கின்றனர். இன்னும் அதற்கான தடயங்கள் சாகாமத்திலிருந்து மறையவில்லை. ஆனால் அங்குவாழும் பிள்ளைகள் கல்வியிலிருந்து மறைந்துவிட்டனர். கடைசியாக 16 பிள்ளைகள்தான் படிப்பதற்கு வந்தார்களாம். மிகுதிப் பேர்நகரங்களுக்கும், வேறு இடங்களுக்கும் மேசன், கூலி, சாப்பாட்டுக்கடை வேலைகளுக்குச் சென்றுவிடுவார்களாம்.
“வறுமை வயசு பார்க்கிறேல்ல தம்பி. கொப்பி பென்சில மட்டும் வச்சி படிக்கேலா (படிக்கமுடியாது) தம்பி” நான் கேள்விகள் தயார்செய்யமுன்பு பதில் தந்துவிட்டு மோட்டார் சைக்கிளில் ஏறிக்கொள்கிறார்.
வயல் வரம்புகளுக்குள்ளால் துள்ளிக் குதித்துப் போகிறது பைக்.
‘இது தான் இங்க பிரச்சினையே. நல்லா போட்டோ புடிச்சி போடுங்க. இன்னும் கொஞ்சம் கிட்டப் போய் போட்டோ எடுங்க”
இதுவரை நான் படங்களில் மட்டுமே பார்த்திருந்த பிரம்மாண்டமான யானை என் கண்முன்னே காதை ஆட்டிக் கொண்டு நிற்கிறது.‘ஓரளவு கிட்டப் போகலாம். வயலுக்குள்ளால வேகமா ஓடிக்கொள்ள மாட்டார். பயப்பிடாதை மேனே’ பக்கத்தில் பட்டியடைத்துக்கொண்டிருந்தவரின் (மாடுகட்டுவது) ஆதரவுக் குரல் கேட்கிறது.
அவரின் பெயர் ப. ஞானசுந்தரம். அவரும் பரம்பரை பரம்ரையாக வாழ்ந்த நிலம் சாகாமம்தான். தொழில் மாடு வளர்ப்பது.ஆயிரக்கணக்கில் இருந்த மாடுகள் இப்போது 20 – 25 க்குள் சுருங்கிவிட்டதாகச் சொல்கிறார்.
‘இங்க இப்ப பிரச்சினை எண்டா ஆனை தான். வீடு தொடங்கி, வீட்டுல வைக்கிற சாப்பாட்டு சாமான் வரைக்கும், பயிர்கொடி,மரம்மட்டை எல்லாத்தையும் ஆனை கொண்டு பேயிற்று. பாருங்க அந்த வளவுக்குள்ள எவ்வள மாமரம் நிண்டுது. இப்ப மர அடிமட்டும் தான் கிடக்கு. பிறவு எப்பிடி இங்க வாழுற நம்மட ஆக்கள. நாமளும் சொல்லாத அதிகாரிமார் இல்ல. இந்த யானையளப்பிடிச்சிப் போகச் சொல்லி. யாரும் கணக்கிலெடுக்கிறல்ல. காட்டு யானையெண்டா கிளையா வரும். ஆனைவெடி, பந்தங்கள் போடஓடீடும். இந்த ஆனையள் எதுக்கும் பயப்பிடாது. மாடு போல திரியும். இதால நம்மட மக்கள் வேற ஊருகளுக்குப் போய்இருந்திட்டாங்கள். இங்க இப்ப ஆக்கள் குறைவு. பிள்ளையள் படிக்க பள்ளியும் இல்ல. இதுக்கு அங்கால பாத்தியலெண்டால்மாந்தோட்டம். அது சிங்கள கிராமம். இதை உட்டுப்போட்டு நாமளும் போயிற்றம் எண்டால் சிங்களாக்களின்ர கிராமமா இதுவும்போயிடும்”.
ஞானசுந்தரம் குறிப்பிடுவதில் இருக்கின்ற அபாயம் மிகப் பாரியது. தமிழர்களின் எல்லையோரக் கிராமங்களை அபகரித்தலில்எத்தனை வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன என்பதை அனுபவப்படுகையில் இந்த அரசியல், இராஜதந்திரம், கொப்பி புத்தகம்மாணவர்களுக்கு கொடுத்து பேஸ்புக்கில் படம் போட்டு பெயர் வாங்கிக் கொள்ளுவதெல்லாம் அவமானமாய்ப்படுகிறது.
“இந்த யானையள் காட்டுக்க இருந்து வாறதில்லையோ’ இல்லடா மேனே. எப்பிடி வருதெண்டு காட்டுறன் வா. அவரிருந்தஇடத்திலிருந்து ஒரு கிலோமீற்றர் வரை சாலையோரமாக சென்றோம். இடையில் இராணுவ முகாம். அதாவது தெற்குப் பக்கமாகஇருந்து தமிழர் பகுதிக்குள் வரும் முதலாவது இராணுவ முகாம் அது.
‘இதப் பார் மேனே. ஆனைய கொண்டு வந்து இறக்கிவிடுறஇடங்களில இந்த கித்துல் மரக் குத்திகள் கிடக்கும். வயசாகிப்போன வளப்புஆனையள பெரிய வாகனங்களில் ஏத்தி, சாமத்திலஇங்க கொண்டு வந்து இறக்கிப் போட்டு போயிடுவாங்கள்.அதுகளஇறக்கிவிடுறதுக்கும், சாப்பாட்டுக்கும் சப்போட்டாத்தான்இந்தக் கித்துல் மர குத்தியள சிங்கள ஆக்கள் கொண்டு வாறவங்க.இங்கஎங்க இருக்கு கித்துல் மரம்? எல்லாம் அங்கால இருந்துவாறதுதான்’ தெற்கைப் பார்த்தபடி பேசிக்கொண்டே தன்சைக்கிளில் ஏறிமிதிக்கத் தொடங்கிவிட்டார். சூரியன்அஸ்தமிக்கிறது.
‘யாராவது குடும்பம் ஒண்ட சந்திச்ச நல்லம் அண்ண’ என்றேன். ‘நேரமாயிட்டுது சரி வாங்க”.
சின்னச் சின்னக் குழந்தைகள். ஆட்டுக் கொட்டைகளுக்கு நடுவில் அந்த வீடு அமைந்திருக்கிறது. நான்கைந்து பெண்கள் மட்டுமேஅங்கிருந்து ஏதோ ஊர்ப் புதினம் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
எங்கள் அறிமுகம் முடிந்ததும் ஒரு பெண் சொல்கிறார், “இங்க என்ன இருக்கு வாழுறதுக்கு. குளத்துத் தண்ணியையும் முஸ்லிம்ஆக்கள் உறிஞ்சு எடுத்துடுறாங்கள். முழு தண்ணியும் முஸ்லிம் ஆக்கட வயலுக்கு எடுத்துக்கொள்றாங்க. ஆனா இது எங்கட குளம்.நாங்க பாரம்பரியமா வயல் செஞ்சு வந்த குளம். ஆனா இப்ப, எங்களுக்குத் அந்தத் தண்ணியெடுக்கக்கூட உரிமையில்ல.இங்களாலதான் நாங்க அதிகம் பாதிக்கப்படுறம். முந்தையப் போல வயலுகள் செஞ்சா நாங்க ஏன் இந்த வளமான ஊரை விட்டுப்போகப் போறம். எங்கட பள்ளிக்கூடம் மூடுப்பட வேண்டி வந்திருக்காது மேனே’
‘இது ஒரு சரணாலயம் பகுதி. இங்க பூச்சு பூரணுகள் அதிகம். கிட்டவா 4 பேர் கிட்ட பாம்புக் கடிக்கு செத்திரிக்கு (மரணித்துள்ளனர்).இரவில ஏதுமென்டா மருந்தெடுக்க சின்ன ஆசுப்பத்திரி வசதி கூட இல்ல. எல்லாத்துக்கும் திருக்கோவில் தாண்டிஅக்கரப்பத்துக்குத்தான் போவோணும். பிறவு எப்பிடி அங்கு குழந்தைகள வச்சிக்கொண்டிருக்கிற? ஒழுங்கான வீட்டுத்திட்டமும்தரேல்ல. 126 குடும்பம் இரிக்கம். 7 குடும்பத்துக்குதான் வீடு ( தகரக் கொட்டில்) தந்திரிக்கானுவள். மீதிப் பேர் நிலைம? பாம்பு, ஆனை,தண்ணியில்ல, மருந்து வசதில்ல, ஒழுங்கான சாப்பாடில்ல. தொழில் செய்யவும் ஒண்டுமில்ல. இங்க எப்பிடி வாழுற? சனம் கொஞ்சம்கொஞ்சமா விநாயகபுரம் பக்கம் பேயிற்று. (போய்விட்டார்கள்) இன்னும் எவ்வள காலத்துக்கு நாமளும் இங்க இருப்பமெண்டுதெரியல்ல.”
அங்கு வாழ்தலின் நம்பிக்கையீனத்தைக் காரணகாரியங்களுடன் சொல்லி முடிந்தார் கமலேஸ்வரி ஆகிய 47 வயதுப் பெண். அது வளமான, செழிப்பான விவசாய நிலம். வயல் நிலம் மட்டும் 3000 ஏக்கர்களுக்கு மேல். மாரி கால விதைப்பைத் தவிர சிறுபோகவிதைப்பில் தமிழர்கள் ஈடுபடுவதில்லை. காரணம் அவர்களின் ஊர் குளத்துத் தண்ணீரையே அவர்களால் பயன்படுத்தஉரிமையில்லை. அந்தளவுக்கு அதிகாரப் பசிக்கு வேட்டையாடப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் அந்தத் தமிழர்கள்.
‘இருட்டாகிற்று வெளிக்கிடுவம் அண்ண, திரும்பித் திருக்கோவிலுக்குப் பறக்கிறோம்.
‘இதோ போல மற்றக் கிராமங்களுக்கும் போய் பாருங்க தம்பி. இங்க எல்லாம் மாகாண சபை உறுப்பினர் கலையரசன தவிர வேற எந்தஅரசியல்வாதியும் வாரல்ல. அரசாங்கமும் இந்த மக்கள இப்பிடியே துரத்திவிடுற நோக்கத்தில செயற்படுபோலத்தான் தெரியுது. 2002இல மீளக் குடியேறின மக்களுக்கு இன்னும் ஒரு வீட்டுத்திட்டம் வரேல்ல எண்டா பாருங்க. யாரிட்ட சொல்றது. முஸ்லிம் ஆக்கள்நிறையப் பிரச்சினை குடுக்கிறானுவ. யாரும் கண்டுகொள்ற இல்ல.
தமிழ் பொம்பிளப் பிள்ளையள் சீரழியுது. சாப்பாட்டுக்கே கஸ்ரப்படுற நம்மட சனங்களுக்கு வட்டிக்கு காசு குடுத்திட்டு, அந்தக் கடனதிருப்பி குடுக்க முடியாம போனா வயசு பார்க்காம தமிழ் பொம்பிளப் பிள்ளையள 3 ஆம் 4 ஆம் தாரமா கூட்டிக்கொண்டுபோயிடுறானுவ. மதம் மாத்திப்போடுறானுவ. 16 வயசு தமிழ் புள்ளைய 60 வயசுக்காரன் 4 ஆம் தாரமா கூட்டிப் போறான். இப்பிடியேபோனா நம்மட சனம் எங்க போகப் போகுதுகள். கொப்பியும், பென்சிலும், வாழ்வாதாரமும் குடுக்கிறதால நம்மட மக்களுக்கு விடிவுவந்திடாது. தொழில் செய்ய வசதி செய்து குடுக்கோணும்.
மாணிக்கமடு கிராமத்திலயும் இதே நிலைதான். அங்க நம்மட ஆக்கள் ஆத்து மீன் பிடிச்சி உப்புக் கூட இல்லாம 3 நேரமும் அவிச்சிசாப்பிட்டுட்டு படுக்கிற நிலைமேலதான வாழுதுகள். ஆனால் 6 லட்ச ரூபா இருந்தா அந்தக் கிராமமே சொந்தமா ஒரு கைத்தொழில்ஆரம்பிக்கலாம். சீமெந்துக் கல் அறுக்கிற வேல. அந்தப் பக்கங்களில முஸ்லிம், சிங்கள ஆக்கள் அந்தத் தொழில் செஞ்சுதான்முன்னேறியிருக்கானுவ. இது மாதிரி நம்மட பொம்பிளப் பிள்ளையளும் வேலை செய்யக்கூடியமாதிரி தொழில்கள உருவாக்கனும்.ஆம்பாறைக்கு எண்டு தமிழ் ஆக்கள் மட்டும் வேலைசெய்யக்கூடியமாதிரி ஒரு நெசவுத் தொழிற்சாலை இருந்தாலே போதும். ஆனாஇதெல்லாம் யாரு செய்வா? கேட்டா எல்லாருக்கும் தையல் மெசின் குடுக்கிறானுவ. படிக்க உதவி கேட்டா கொப்பி, பென்சில்குடுக்கிறானுவ. ஊர்ல எல்லாரிட்டயும் தையல் மெசின் இருந்தா யாரு காசுக்கு தைக்கப்போறா? அப்பனுக்குத் தொழில் இல்லாமபட்டினி கிடக்கிற புள்ளைக்கு கொப்பி, பென்சில் குடுத்து என்ன பயன்?’
அந்த முதலை முதுகுச் சாலை திருக்கோவிலில் வந்து ஏறும் வரை இப்படி நிறையவே பேசினார். எங்களைக் கடந்து வேகமாகப்பறந்தது பஸ். அய்யோ இதைவிட்டா நீங்க இப்போதைக்கு போய்க்கொள்ள மாட்டியள். புடிப்பம். புறந்து பிடித்தார் பஸ்ஸை.
‘போயிற்று வாறன் அண்ண’- ‘போய் வாங்க தம்பி,” உரையாடல்களுக்கு மத்தியில் பாய்ந்துத் தொங்கிக் கொண்டேன் பேருந்தில்.
அய்யோ அவரின் பெயரைக் கேட்கவில்லையே. இவ்வளவு தூரம் வந்த மனுசனுக்கு ஒரு தேத்தண்ணீ கூட வாங்கிக்குடுக்கேல்லயே..சீ..! மனசு குற்றவுணர்ச்சியால் மூளையைக் குட்டியது. புரவாயில்லை. வழிப்பயணத்தில் கடந்து போகும் நல்லமனிதர்களை நினைவு வைத்துக்கொள்ளப் பெயர் எதற்கு. அவரின் நினைவுகளே போதும் – என்னை நானே ஆற்றுப்படுத்திக்கொண்டு,கைத்தொலைபேசியில் பேஸ்புக்கைத் திறந்தேன். யாரோ ஒரு அமைப்பு வன்னியில் பாடசாலை சிறார்களுக்கு கொப்பி, பென்சில், பைவழங்கியதாம். அந்த ‘சொல்லிக்காட்டும்’ பதிவு படார் என்று தொடுதிரையில் தோன்றியது. கடுப்பாகி கைத்தொலைபேசியை ‘ஓவ்’செய்து வைத்துவிட்டு கண்களை இறுக்கி மூடிக்கொண்டேன். சாகாமம் இருளுக்குள் மறைந்தது.
- ஜெரா