Breaking News

ஆள்கடத்தல் பாதிப்பு அவலம்: மியான்மர் தமிழர்களும் தவிப்பு

மியான்மரில் பல்வேறு துயரங்களுக்கு ஆளாகும் ரோஹிங்கியர்களுக்கு இணையாக, தமிழர்களும் பாதிக்கப்படுவதாக கனடா நாட்டுப் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

மியான்மரில் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிரான போக்கு இருந்து வரும் நிலையில், அங்கிருக்கும் தமிழர்களும் ஆள்கடத்தல் உள்ளிட்ட துயரங்களுக்கு ஆளாகி வருவதாகவும், ஆனால் இது குறித்து செய்திகள் வெளிவராமல் இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

மியான்மரின் தமோ மற்றும் தத்தோன் மாவட்டங்களில் வாழும் முஸ்லிம், இந்து மற்றும் கிறிஸ்தவ மக்கள் பாரம்பரிய விவசாயத்தை தொழிலாக செய்கின்றனர். இவர்களுள் பலர் ஏஜென்டுகளிடம் சிக்கி மலேசியாவுக்கு அடிமைகளாக கடத்துப்படுகின்றனர்.

ஆள்கடத்தலில் ஈடுபடும் கும்பல், இவர்களுக்கு மலேசியாவில் வேலை வாங்கித் தருவதாக பொய்யான வாக்குறுதிகளை அளித்து அடிமைகளாக்கும் வேலைகளில் தொடர்ந்து ஈடுபடுவதாக ‘தி ஸ்டார் பேப்பர்’ என்ற கனடாவைச் சேர்ந்த பத்திரிகை அதிர்ச்சி செய்தியை குறிப்பிட்டுள்ளது.

“ஆள்கடத்தல் கும்பலால் அனுப்பப்படும் இவர்கள் அனைவருமே, ரோஹிங்கிய மற்றும் வங்கதேச அகதிகள் பயணிக்கும் செல்லத்தகாத படகுகளில் கடல் மார்க்கமாக மலேசியா மற்றும் தாய்லாந்து வழியாக உணவு, தண்ணீர் போன்ற அத்தியாவசிய தேவைகள் எதுவும் இன்றி ஆபத்தான பயணத்தை மேற்கொள்ள வற்புறுத்தப்படுகின்றனர்.

மியான்மரில் தவிக்கும் ரோஹிங்கியர்களுக்கு இணையாக முஸ்லிம் மற்றும் இந்து தமிழர்களும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

இவர்கள் பலர் தங்களது சொத்துக்களை விற்று, ஏஜென்டுகளிடம் பணத்தை அளித்து பின்னர் அடிமைகளாக வாழும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். மலேசிய நகரங்களான பெனாங், கேதா, பெர்லிஸ் போன்ற பகுதிகளில் தொடர்பு இல்லாத வேலைகளில் கொத்தடிமைகளாக இருக்கின்றனர்” என்று அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

புலம் பெயர்ந்த தமிழரான பரிமளா இது குறித்து கூறும்போது, “ராணுவக் கட்டுப்பட்டில் இருந்த மியான்மரிலிருந்து ஒரு வருடம் முன்பாக நான் வெளியேறினேன். ஆனால் இப்போது என்னிடம் எந்த ஆவணமும் இல்லை. சொந்தமாக கூறிக்கொள்ள ஒரு நாடு இல்லை. எங்களை அகதிகளாக அறிவிக்கவும் ஐ.நா. மனித உரிமை ஆணையம் மறுக்கிறது. என்னுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் இதே நிலையில் உள்ளனர்.

உரிய ஆவணங்களை அளிக்காவிட்டால், எங்களை அதிகாரிகள் சுட்டுக் கொன்றுவிடுவர் என்று இங்கு சற்று முன்னதாக வந்த ரோஹிங்கியர்கள் தெரிவித்தனர். இதனால் சிறைச்சாலை வாழ்க்கையை நாங்கள் வாழ்ந்து வருகிறோம்” என்றார்.

புலம் பெயர்ந்த ஜேம்ஸ் கண்ணா கூறும் போது, “நாட்டுக்குள் சட்ட ரீதியாகவே அழைத்துச் செல்லப்படுவதாக என்னிடம் பொய் கூறினர்.

வேலை கிடைக்கும் என்று நினைத்து எனது ஒரு வயது குழந்தையை, தெரிந்தவர்களிடம் விட்டு வந்தேன். இனி நான் என் குழந்தையை பார்க்கச் செல்வே என்ற நம்பிக்கையே எனக்கு இல்லை” என்றார்.

பல்லாயிரக்கணக்கான ரோஹிங்கிய முஸ்லிம்கள் சந்தித்து வரும் அதே பிரச்சினைகளை தற்போது மியான்மரில் வசிக்கும் சிறுபான்மை தமிழர்களும் சந்தித்து வருகின்றனர் என்று ஸ்டார் நாளிதழ் தெரிவித்துள்ளது.