Breaking News

ஆட் கடத்தல்காரர்களுக்கு ஆஸி. அதிகாரிகள் இலஞ்சம் கொடுத்தார்களா?

இந்தோனேசியாவிலிருந்து நியூசிலாந்துக்கு படகில் சென்று கொண்டிருந்தபோது அவுஸ்திரேலிய அதிகாரிகள் சர்வதேச கடற்பரப்பில் தம்மைத் தடுத்து திசைதிருப்பி திமோருக்கு அனுப்பிவிட்டதாக அந்த படகில் பயணித்த இலங்கையைச் சேர்ந்த தமிழர் ஒருவர் சென்றவாரம் குற்றஞ்சாட்டியிருந்தார். 

தம்மை அழைத்துச் சென்றுகொண்டிருந்த இந்தோனேஷியாவைச் சேர்ந்த தமது படகின் ஓட்டிகளுக்கு அவுஸ்திரேலிய அதிகாரிகள் இலஞ்சம் கொடுத்து வேறு படகுகளில் ஏற்றி தம்மை திசை திருப்பிவிட்டதாகவும் அவர் அப்போது கூறியிருந்தார். 

இந்தோனேஷியா படகோட்டிகளுக்கு 30,000 டொலர்கள் இலஞ்சமாக கொடுக்கப்பட்டதா என்பது குறித்து தாம் விசாரிக்கப்போவதாக இந்தோனேஷியக் காவல்துறை உயர் அதிகாரி அறிவித்திருக்கிறார். 

இந்த பின்னணியில் இலங்கைத்தமிழர் உள்ளிட்ட அந்த படகில் பயணித்தவர்கள் தெரிவித்த குற்றச்சாட்டுக்கள் உண்மையா என்பது குறித்தும், இந்தோனேஷிய படகோட்டிகளுக்கு அவுஸ்திரேலிய அதிகாரிகள் இலஞ்சம் கொடுத்தார்களா என்றும் அவுஸ்திரிலிய பிரதமர் டோனி அப்பாட்டிடம் கேட்டபோது அவர் அதை ஆம் என்று ஆமோதிக்கவும் இல்லை. அப்படி நடக்கவில்லை என்று தெளிவாக மறுக்கவும் இல்லை. 

மாறாக, அவுஸ்திரேலியாவுக்குள் ஆட்கள் சட்டவிரோதமாக குடியேறி வருவதைத் தடுக்க தம்மால் ஆன அனைத்தையும் செய்வோம் என்று மழுப்பலானதொரு பதிலைத் தெரிவித்திருக்கிறார். 

“அவுஸ்திரேலிய கடற்கரைகளில் குடியேறிகளின் படகுகள் வந்து சேர்வதைத் தடுக்க புதுமையான யுக்திகள் அனைத்தையும் நாங்கள் கையாள்வோம். இதன் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சட்ட்டவிரோத படகுகள் வருவதை நாங்கள் தடுத்து நிறுத்தி விட்டோம். அந்த நிலைமையை அப்படியே தொடர்வதற்கு என்னென்ன செய்ய முடியுமோ அவை அனைத்தையும் நாங்கள் செய்வோம்” என்றார் அப்பாட். 

நேற்று வெள்ளிக்கிழமை காலையில் வானொலி நிகழ்ச்சி ஒன்றில் இதுகுறித்த கருத்துக்களுக்கு பதில் அளித்தபோது அப்பாட் இந்த கருத்துக்களை தெரிவித்திருந்தார். 

இதுகுறித்து அவரிடம் மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டபோதும் அவர் பணம் கொடுக்கப்பட்டதா இல்லையா என்கிற கேள்விக்கு ஆம் அல்லது இல்லை என்று தெளிவாக பதில் அளிப்பதை தவிர்த்துவிட்டு, குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் சட்டவிரோத படகுகள் மூலம் வரும் குடியேறிகளை தடுப்பதற்காக புதுப்புது யுக்திகளை கையாள்வதாகவும் அவற்றை தாம் ஆதரிப்பதாகவும் கூறினார். இதுபோன்ற தருணங்களில் குடிவரவு அதிகாரிகளால் கடைபிடிக்கப்படும் யுக்திகள் குறித்து பகிரங்கமாக விவாதிப்பதற்குத்தான் தயாரில்லை என்றும் அவர் திட்டவட்டமாக மறுத்தார்.

டோனி அப்பாட்டின் இந்த கருத்துக்கள் அவுஸ்திரேலிய அதிகாரிகள் இலஞ்சம் கொடுத்தார்கள் என்கிற குற்றச்சாட்டை மறைமுகமாக ஏற்பது போல் இருப்பதாக பரவலாக குற்றம்சாட்டப்படுகிறது. இது சரியான அணுகுமுறை அல்ல என்கிற விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

அகதிகளுக்கான ஐநா மன்ற ஆணையர் அந்தோனியோ குடெர்ரஸ், ஆட்கடத்தலில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு நாடுகளே பணம் கொடுத்து தடுக்கப்பார்க்கக்கூடாது என்று தெரிவித்திருக்கிறார். மாறாக இவர்கள் சிறையில் அடைக்கப்படவேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருக்கிறார். குற்றச்செயல்களுக்கு பணம் கொடுப்பது ஏற்கத்தக்கதல்ல என்று அவர் கூறியுள்ளார். 

“மனிதக்கடத்தல் கடுமையாக ஒடுக்கப்படவேண்டும். அதை செய்பவர்களுக்கு பணம் கொடுக்கக்கூடாது. அப்படிப்பட்டவர்கள் எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் சிறையில் அடைக்கப்படவேண்டும். வழக்குகள் மூலம் தண்டிக்கப்பட வேண்டும். அதேசமயம் இதில் பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாக்கப்படவேண்டும். 

குடியேறிகளின் நலன்களை பாதுகாப்பதற்கான தமது கடப்பாடுகளை ஒவ்வொரு நாடும் உணர்ந்து நடந்துகொள்ள வேண்டும். குடியேறிகள் தொடர்பான பெருந்தன்மையான கொள்கைகளைக் கொண்டிருக்கும் அவுஸ்திரேலிய அரசு, தன் எல்லைக்குள் பாதுகாப்பு கோரி வரும் குடியேறிகளை நல்லவிதமாக நடத்தவேண்டும்”, என்றார் அகதிகளுக்கான ஐநா மன்ற ஆணையர் அந்தோனியோ குடெர்ரஸ். 

அவுஸ்திரேலியாவுக்குள்ளும் அப்பாட்டின் இந்த கருத்துக்களுக்கு பெரும் கண்டனங்கள் எழுந்துள்ளன. பசுமைக்கட்சியின் செனட் உறுப்பினர் சாரா ஹன்சன் எங், இப்படி பணம் கொடுக்கப்பட்டிருந்தால் அது குற்றம் என்று தெரிவித்திருக்கிறார். 

“இந்த பணம் கொடுத்த செயல் நடந்திருந்தால், அது அவுஸ்திரேலிய சட்டப்படியும் சர்வதேச சட்டப்படியும் ஒரு குற்றச்செயல். இந்த விஷயத்தில் அவுஸ்திரேலிய பிரதமர் நெருப்போடு விளையாடிக் கொண்டிருக்கிறார். இதில் அவர் என்ன நடந்தது என்பதை தெளிவாகத் தெரிவிக்கவேண்டும்,” என்றார் பசுமைக்கட்சியின் செனட் உறுப்பினர் சாரா ஹன்சன் எங்.