பாலியல் பலாத்கார வழக்கில் பயங்கரவாதத் தடைச் சட்டம்: கூட்டமைப்பு கவலை
இலங்கையின் புங்குடு தீவைச் சேர்ந்த மாணவி வித்யாவின் கொலை வழக்கில் கைதுசெய்யப் பட்டுள்ள சந்தேக நபர்கள் 9 பேரையும் காவல்துறையினர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் விசாரித்து வருவது குறித்து சுரேஸ் பிரமச்சந்திரன் கேள்வியெழுப்பியிருக்கிறார்.
வித்யா கொலை தொடர்பான விசாரணைக்காக குற்றம் சாட்டப்பட்டவர்களை, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் ஒரு மாத காலத்திற்கு காவலில் வைப்பதற்குரிய அனுமதியை காவல்துறையினர் நீதிமன்றத்திடம் பெற்றிருக்கின்றனர்.
இந்த நிலையில், இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கின்றார்.
இந்த விஷயம் நீதிமன்றத்தின் முன்னால் இருந்தாலும்கூட, அது தொடர்பான சட்டப் போக்குகள், அவற்றின் அரசியல் பரிமாணங்கள் குறித்து தமிழ் அரசியல் தலைமைகள் கூடி நுணுக்கமாக ஆராய்ந்து கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டும் என்று அவர், தனது அறிக்கையில் கோரியிருக்கின்றார்.
இது பற்றி கருத்து தெரிவித்த சுரேஸ் பிரேமச்சந்திரன், பயங்கரவாதத் தடைச்சட்டம் தற்காலிகமாகவே கொண்டு வரப்பட்டது என்பதை சுட்டிக்காட்டியிருக்கிறார்.
யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் அது நீக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தும்கூட, முப்பது வருடங்களுக்கு மேலாக அது நடைமுறையில் இருந்து வருகின்றது என்றும் அதனை நீக்க வேண்டும் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திடம் வலியுறுத்தி வருகின்றது என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறியிருக்கிறார்.
பாலியல் பலாத்காரம், கொலை போன்ற மோசமான குற்றங்களுக்கென கடுமையான சட்டங்கள் இருக்கும்போது, வித்யாவின் கொலை வழக்கில் பயங்கரவாதத் தடைச்சட்டம் ஏன் கையில் எடுக்கப்பட்டிருகின்றது என்று சுரேஸ் பிரேமச்சந்திரன் கேள்வியெழுப்பினார்.
ந்த மோசமான சட்டத்தை சாதாரணமாக, வேறு பல வழக்குகளுக்கும் பயன்படுத்துவதற்கு இது வழியேற்படுத்திவிடும் என்று அவர் கூறியிருக்கிறார்.