சம்பூர் காணி விடுவிப்பு வழக்கு யூலை 10வரை ஒத்திவைப்பு
சம்பூர் அதியுயர் பாதுகாப்பு வலையத்தில் உள்ள காணியை தனியார் நிறுவனம் ஒன்றிற்கு தொழிற்சாலை வழங்குவதற்கு கடந்த அரசு அனுமதி வழங்கியிருந்தது. எனினும் இதனை மைத்திரி அரசு இரத்துச் செய்திருந்தது. இதேவேளை குறித்த தனியார் நிறுவனம் தொழிற்சாலை அமைப்பதற்கு ஏற்பாடு செய்திருந்ததையடுத்து உயர்நீதிமன்றத்திற்கு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதனை ஆராய்ந்த பின்னரே உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. குறித்த வழக்கு நேற்று உயர்நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. எனினும் விசாரணைகள் எதுவுமின்றி வழக்கு எதிர்வரும் மாதம் 10 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. மற்றும் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. ஆகியோர் கூட்டமைப்பின் சார்பில் உயர்நீதிமன்றத்திற்கு சமுகமளித்திருந்ததுடன், ஸ்ரீலங்கா கேட்வே இன்டஸ்ட்ரீஸ் தனியார் நிறுவனம் சார்பில் அதன் பிரதிநிதிகள் சமுகமளித்திருந்தனர். சம்பூர் மக்கள் சுமார் 9 வருடங்களாக சொந்தக்காணிகளில் மீள்குடியேற முடியாது உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.