வடக்கு, கிழக்கு பிரதிநிதித்துவத்தை குறைக்கும் வகையில் தொகுதிகள் குறைக்கப்படுவதை ஏற்றுக்க முடியாது
பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 237 ஆக உயர்த்தும் வகையில் அமைந்துள்ள புதிய தேர்தல் முறையானது தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளது.
அந்த வகையில் தொகுதிகளின் அடிப்படை யில் 145 எம்பிக்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். இது எந்த வகையிலும் வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதாக அமையக் கூடாது. அவ்வாறு அமையும் பட்சத்தில் நாம் இதனை ஏற்றுக்கொள்ளமாட்டோம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் நேற்று தெரிவித்தார்.
யுத்தம் காரணமாக ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் தமிழ் மக்கள் இடம்பெயர நேரிட்டது. அதனைக் கவனத்தில் கொண்டு யாழ். மாவட்டப் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை முன்னைய நிலையிலேயே பேண நடவடிக்கை எடுப்பது அவசியம். எக்கார ணம் கொண்டும் இருக்கும் உறுப்பினர்களை மேலும் குறைக்கும் வடக்கு கிழக்கு வகையில் புதிய தேர்தல் முறைமைகள் அமைவதை நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும் அவர் சொன்னார்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 237 ஆக உயர்த்தும் வகையில் அமைந்துள்ள புதிய தேர்தல் முறை யோசனையை உள்ளடக்கிய 20ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அந்த வகையில் தொகுதிகளின் அடிப்படையில் 145 எம்.பிக்களும் மாவட்ட விகிதாசார அடிப்படையில் 55 பேரும் தேசியப் பட்டியலில் 37 எம்.பிக்களும் தெரிவு செய்யப்படும் வகையில் புதிய தேர்தல் முறை தயாரிக்கப்பட்டு அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
அத்துடன், விருப்பு வாக்குமுறை முற்றாக நீக்கப்படுகின்ற தொகுதி மற்றும் விகிதாசார முறைமைகள் அடங்கியதாக புதிய கலப்பு தேர்தல் முறை முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் கருத்து கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
புதிய தேர்தல் முறையில் யாழ். மாவட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் தொகை குறைக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தொகுதி அடிப்படையிலான தேர்தலின் போது 11 உறுப்பினர்கள் தெரிவானார்கள். பின்னர் விகிதாசார அடிப்படையில் கடந்த தடவை 9 பேர் தெரிவு செய்யப்பட்டார்கள். எனினும், புதிய அடிப்படையில் யாழ். மாவட்ட பிரதிநிதிகளின் எண்ணிக்கை 9 இல் இருந்தும் 7 ஆக குறையும் சாத்தியம் உள்ளது. இதனை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.
இறுதியாக 77 இல் நடைபெற்ற தேர்தலில் 160 தேர்தல் தொகுதிகளில் இருந்து மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டார்கள். அவை தற்பொழுது 145 தொகுதிகளாக குறைக்கப்படும் பட்சத்தில் 15 தொகுதிகள் குறைவடையும். இந்நிலையில் தொகுதிகள் எங்கு குறைவடையும் என்ற கேள்வி எழுகின்றது.
அநேகமாக இதன் தாக்கம் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பிரதேசத்தையே சார்ந்திருக்கும். இதனால் குறிப்பாக தமிழ் மக்களின் பிரதிநிதித்துவமே குறையும் வாய்ப்புள்ளது. அசாதாரணமான சூழல் காரணமாக வடபகுதி மக்கள் இடம் பெயர நேரிட்டது, நாட்டில் ஏனைய பிரதேசங்களில் யுத்தம் காரணமாக மக்கள் இடம் பெயர்வு ஏற்படவில்லை. வடக்கு, கிழக்கில் இருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேறியுள்ளனர். அவர்கள் மீண்டும் பழைய இடங்களுக்கு திரும்ப வேண்டும்.
புதிய சூழலில் தேர்தல் நடைபெறும் பட்சத்தில் பரவலாகத் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் குறைவடைய வாய்ப்புள்ளது. அதேபோன்று மலையக மற்றும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவம் எந்தளவு தூரம் பாதிக்கப்படுகின்றது என்பதை நன்றாக ஆராய்ந்தே நாம் ஒரு முடிவுக்கு வரவேண்டும். எழுந்தமானமாக இந்த முறைமையை ஏற்றுக்கொள்ள முடியாது. தற்போதைய தேர்தலின் அடிப்படையில் விகிதாசார முறைமையின் கீழ் சமனாக உள்ளது. எனினும், தொகுதிகள் குறையும் போது அது சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை வெகுவாகப் பாதிப்பதாக இருக்கும்.
அரசின் அடிப்படை நோக்கம் விகிதாசார தேர்தல் முறையை மாற்றியமைத்து ஒரு குறிப்பிட்ட தொகை உறுப்பினர்களை தொகுதி அடிப்படையிலும் மேலும் ஒரு குறிப்பிட்ட தொகையினரை விகிதாசார அடிப்படையிலும் ஏனைய ஒரு தொகுதி உறுப்பினர்களை தேசியப் பட்டியல் அடிப்படையிலும் தெரிவு செய்வதாகும்.
வடக்கு, கிழக்கைப் பொறுத்த வரையில் மக்களின் குடிப்பெயர்வு வாக்காளர்களை வெகுவாகப் பாதித்துள்ளது. மக்களின் காணிகளில் இராணுவம் குடிகொண்டுள்ளதால் மக்கள் மீளக் குடியேற முடியாது இடம் பெயர்ந்துள்ளனர். இதனால், அவர்கள் வாக்களிக்க முடியாத நிலையுள்ளது. இவையனைத்தும் எமக்குப் பாதகமான நிலைமையையே ஏற்படுத்துவதாக இருக்கும். மேலும் வடக்கு, கிழக்கிற்கு வெளியேயுள்ள எமது மக்களும் தங்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்யக் கூடிய விதத்தில் விகிதாசார தேர்தல் முறை அமையவேண்டும்.
எவ்வாறெனினும் புதிய முறையிலா, அல்லது பழைய முறையிலா தேர்தல் நடைபெறும் என்பதை தற்பொழுது கூற முடியாது. புதிய முறையில் தேர்தல் நடைபெறுமானால் தேர்தல் மாவட்டங்கள் நிர்ணயிக்கப்பட வேண்டும். இதற்கென தேர்தல் நிர்ணயக் குழு நியமிக்கப்பட வேண்டும். அக்குழு கலந்துரையாடல்களை நிகழ்த்தி தமது முடிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.