ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையினை பிற்போட தீர்மானம்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணையை பிற்போடுவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பிலும் கட்சி தலைவர்கள் மத்தியில் ஒருமித்த தீர்மானம் எடுக்கப்படாத நிலையில் கூட்டம் முடிவடைந்துள்ளது.
நாட்டின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் தொடர்பில் ஆராயும் வகையில் நேற்று சபாநாயகர் சமல் ராஜபக் ஷ தலை மையில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் கூட்டம் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது.
இந்நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் கொண்டுவருவதாக தெரிவிக்கப்பட்ட நம்பிக்கை இல்லா பிரேரணையை பிற்போடுவதற்கான தீர்மானம் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரணிலுக்கு எதிராக விரைவில் பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவருவதாக எதிர்க்கட்சி தரப்பினர் தெரிவித்துவந்த நிலையில் சபாநாயகர் தலைமையிலான நேற்றைய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அதனை பிற்போடும் தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் நிதி அமைச்சர் ரவி கருணாநாயகவுக்கு எதிராக கொண்டுவருவதாக கூறப்பட்ட நம்பிக்கை இல்லா பிரேரணை அடுத்த மாதம் 6ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.
அதேபோல் பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் கட்சிகளுக்கிடையில் ஒருமித்த தீர்மானம் எடுக்கமுடியாதுள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மக்கள் விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகள் உடனடியாக தேர்தலுக்கு செல்வதை ஆதரித்துள்ள போதிலும் ஒருசில இடதுசாரிக் கட்சிகளும் ஏனைய கட்சிகளும் பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் ஒருமித்த தீர்மானம் எடுக்கவில்லை என கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த மக்கள் விடுதலை முன்னணியினர் தெரிவித்தனர்.
மேலும் 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் இன்று அல்லது நாளை வர்த்தமானியில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அதன்பின்னர் பாராளுமன்ற அமர்வுகளில் அதை விவாதத்தில் எடுப்பதற்கான கால அவகாசம் அதிகமாக தேவைபடுகின்றமையினாலும் இப்போதைக்கு பாராளுமன்றத்தை கலைக்காது தேர்தல் முறைமையில் மாற்றத்தை கொண்டுவந்து 20ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவது என்றும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.