Breaking News

மூன்றாவது அணி?

நாளுக்கு நாள் பல சுவாரஸ்யமான திருப்புமு னைகளுடன் அரங்கேறிக் கொண்டிருக்கும் அரசியல் நாடகத்தில் தற்போது புதிய அத்தியாயம் ஒன்று ஆரம்பமாகியுள்ளது. பொதுத் தேர்தல் ஒன்றை அனைத்து கட்சிகளும் எதிர்பார்த்துக் கொண்டி ருக்கும் போது பிரதான கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்பட்டுள்ளது.

அதாவது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாக பிளவுபடும் முக்கிய தருணத்தில் உள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷ தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேர்தலுக்கு முகம் கொடுக்க தயாராகிய போது அவரை எதிர்த்து களத்தில் நின்றவர் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. இப்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்துடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை கைப்பற்றியுள்ள நிலையில் மஹிந்த ராஜபக் ஷ இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு சாதாரண உறுப்பினராக மட்டுமே செயற்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு இருக்கையில் மீண்டும் ஒரு தேர்தலுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆனால் இம்முறை பிரதமருக்கான கனவில் மஹிந்த அவரது கத்துக் குட்டிகளை தூண்டிவிட்டு கட்சியில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள முயற்சித்தாலும் அதற்கும் பல முட்டுக் கட்டைகள் ஏற்பட்டுள்ளன.

ஒரு புறம் பிரதமர் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் பலமான நிலையில் உள்ளதுடன் பொதுத் தேர்தலை எதிர்பார்த்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலுடன் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ரணிலுக்குமே யோகம் அடித்துள்ளது. அதேபோல் தேசிய அரசாங்கம் அமையப்பெற்றவுடன் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய பிரதான இரு கட்சிகளும் ஒரு அணியில் கைகோர்த்துள்ளதால் இன்று பலமான ஆட்சியில் ஐக்கிய தேசியக் கட்சியே உள்ளது.

இந்த உத்வேகத்துடன் அடுத்த பொதுத் தேர்தலுக்கு உடனடியாக செல்வதென்ற தயார் நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளது. ஏனைய சிறிய மற்றும் சிறுபான்மைக் கட்சிகளும் தேர்தலை வலியுறுத்தி நிற்கின்றன. ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள்தான் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது. அதாவது எதிர்வரும் பொதுத் தேர்தலில் யாரை பிரதமர் வேட்பாளராக்குவது என்ற சிக்கலில் மைத்திரி தலைமையிலான கூட்டணி உள்ளது.

மஹிந்தவை பிரதமர் வேட்பாளர் ஆக்குவதா அல்லது நிமல், சுசில் என வேறு ஒருவரை களமிறக்கிப் பார்ப்பதா என்பதில் ஜனாதிபதிக்கு சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது என்று சொன்னாலும் தவறேதும் இல்லை.

ஆயினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் தலைமையில் மூன்றாவது கூட்டணியை களமிறக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தனித்த சின்னத்தில் தனிக் கட்சியாக மஹிந்த ஆதரவு குழுவுடன் தான் களமிறங்குவதற்கான விருப்பத்தை சாடையாக மஹிந்த காட்டிவிட்டார்.

அந்த அடையாளத்தை வைத்துக்கொண்டு மஹிந்த ஆதரவு கூட்டணி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பெருந்தொகையான உறுப்பினர்களை மஹிந்த கூட்டணியுடன் இணைத்துக்கொள்ளவும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பலரையும் தமது பக்கம் ஈர்த்தெடுக்க முடியும் என்ற முயற்சியில் இறங்கியுள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சி உறுப்பினர்களாக இருக்கும் வாசுதேவ நாணயக்கார, தினேஷ் குணவர்த்தன, திஸ்ஸ விதாரண, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் இந்த கூட்டணிக்கு ஆள்சேர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்போதே இந்த கூட்டணியில் முன்னாள் அமைச்சர்களான ஜி.எல். பீரிஸ், பந்துல குணவர்த்தன, டலஸ் அழகபெரும போன்ற உறுப்பினர்களும் மேலும் சிலரும் ஆதரவாக செயற்பட்டு வரும் நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து பலமான கட்சியை ஆரம்பிப்பதே இவர்களின் இப்போதைய நிலைப்பாடாக உள்ளது.

இதற்கான வேலைத்திட்டத்தை கடந்த இரு வாரத்துக்கு முன்னரே இவர்கள் ஆரம்பித்து விட்டனர். மஹிந்த ராஜபக் ஷவின் இப்போதைய அடைக்கலமான அபயராம விகாரையில் இந்த கூட்டணிக் கட்சிக்கான பேச்சுவார்த்தைகளை மஹிந்த ஆதரவுக் கூட்டணி ஆரம்பித்துள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளில் நாட்டில் பலமானதொரு அரசியல் கட்சியாகவும் மஹிந்த தலைமையில் இறுக்கமான கூட்டணியாகவும் அவதானிக்க முடிந்த மஹிந்த அரசாங்கத்தை மஹிந்த இன்று மீண்டும் தேட ஆரம்பித்து விட்டார். தனக்கான சிம்மாசனத்தை தயாரிக்க ஆரம்பித்துள்ளார்.

மீண்டும் சிம்ம சொப்பனத்தில் ஆடம்பரமாக அமர்ந்து நாட்டை ஆட்சி செய்ய வேண்டும் என்ற ஆசை மீண்டும் மஹிந்தவுக்கு வந்துள்ளது என்பதே உண்மையாகும். ஆனால் அன்று மஹிந்தவுடன் துணை நின்ற பலமான அரசியல் தலைமைகள் இன்று அவருடன் கூட்டு சேர தயாரில்லை என்பது தெளிவாகவே தெரிகின்றது.

குறிப்பாக சொல்வதாயின் கடந்த பத்து ஆண்டுகளில் மஹிந்தவுடன் மைத்திரி. ராஜித, சம்பிக்க, நிமல், சுசில் என பலமான உறுப்பினர்கள் இருந்தனர். ஆனால் இன்று அவர்கள் எவரும் மஹிந்தவின் கரங்களை மீண்டும் பலப்படுத்தும் எண்ணத்தில் இல்லை. இன்று மஹிந்தவுடன் இருப்பது அன்று மஹிந்தவின் கூட்டத்தில் கூச்சல் போட்ட அதே கூட்டணி மட்டுமே.

இவர்களும் தமது இருப்பை தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் மஹிந்த புகழ் பாடி தமது மிச்சமிருக்கும் அரசியல் வாழ்க்கையை கொண்டு செல்ல நினைக்கின்றனர் என்பதே உண்மை. ஆனால் மஹிந்த ராஜபக்ஷ அதை உணராமல் இந்த கூட்டணியுடன் சேர்வது அவரின் வெற்றியை எந்த அளவுக்கு பலப்படுத்தமுடியும் என்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு வெளியேறும் நோக்கத்தில் இக் கூட்டணி முயற்சிப்பது சாத்தியமானாலும் தனித்து போட்டியிட முடியுமா ? அரசாங்கத்தை அமைக்க முடியுமா? மக்கள் மத்தியில் நிலைக்க முடியுமா? என்பதையும் மஹிந்த சிந்தித்து பார்க்க வேண்டும். கடந்த காலங்களில் அவரின் பலமும் வெற்றியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தான் தங்கி இருந்தது. இந் நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு வெளியேறி புதிதாக ஒரு கட்சியை ஆரம்பிப்பது அதன்பின்னர் பிரதான இரு கட்சிகளுடன் மூன்றாவது கட்சியாக போட்டியிடுவதென பல சிக்கல்கள் உள்ளன. 

எனவே இந்தக் கூட்டணி எந்தளவு சாத்தியமாகும் என்பது கேள்விக்குறியே. அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தொடர்ந்தும் மஹிந்த முக்கிய உறுப்பினராக செயற்படுவார், அவரின் ஆலோசனைக்கு அமையவே கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் முன்னெடுக்கப் படுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து வெளியேற வேண்டும் என்ற பிடிவாதத்திலும் பங்காளிக் கட்சிகளின் ஒருசில உறுப்பினர்கள் மஹிந்த ராஜபக் ஷவை தூண்டுகின்றதாகவும் கட்சிக்குள் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. மஹிந்த ஆதரவுக் கூட்டணி என்ற அமைப்பை உருவாக்கி நாட்டில் சிங்கள மக்கள் செரிந்து வாழும் பகுதிகளில் மக்கள் கூட்டங்களை நடத்தி இனவாதக் கருத்துக்களையும் தமது வலிமையான கொள்கையையும் பரப்பி இனவாத கூட்டணியை அமைக்கும் தீவிர முயற்சியை இவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவை கடும் வார்த்தைகளால் விமர்சிப்பதுடன் தமது கட்சி தலைமை பதவியை துறக்கவும் கோஷம் எழுப்புகின்றனர். திடீரென கட்சிக்குள் ஏன் இந்த சலசலப்பு. பலமான கூட்டணிக்குள் குழப்பம் வரக் காரணம் என்ன என்பதையும் பார்க்க வேண்டும்.

இதன் பின்னணி என்னவெனில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மஹிந்தவை புறக்கணித்தமையே உண்மையான காரணமாகும். ஏனெனில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டுக் கட்சிகள் ஒன்றிணைந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்திருந்த வேளையில் அடுத்த பொதுத் தேர்தலின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக மஹிந்தவை நியமிக்கக்கூறி கோரிக்கை விடுத்திருந்தனர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை வீழ்த்தும் போட்டியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் மஹிந்தவை களமிறக்க வேண்டும் என்ற கோரிக்கையை வாசு தலைமையிலான மஹிந்த ஆதரவு கூட்டணி ஜனாதிபதியிடம் முன்வைத்தது . ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மஹிந்த ஆதரவு அணியின் கனவுக் கண்ணாடியை நொறுக்கும் வகையிலான பதிலை முன்வைத்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் மஹிந்தவுக்கு ஒருபோதும் பிரதமராக முடியாது எனவும் அவர் கட்சியில் சாதாரண உறுப்பினராக மட்டுமே இருக்க முடியும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடும் வார்த்தைகளால் தெரிவித்து விட்டார். 

அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றிக்காக நான் பாடுபடும் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் என்னையும் அழிக்கவே மஹிந்த செயற்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி சிறிசேன நான் கட்சியின் தலைமைத்துவத்தில் இருக்கும் வரையில் மஹிந்தவை பிரதமராக வரவிட மாட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மற்றும் முக்கிய உறுப்பினர்கள் எவரும் மஹிந்தவை பிரதமராக்கும் யோசனைக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை அதேபோல் அதன் பின்னரான செய்தியாளர் சந்திப்புகளின் போதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் மஹிந்தவை களமிறக்கும் எண்ணம் இல்லை என்பதை சாடையாக தெரிவித்துள்ளனர். 

ஆகவே மஹிந்தவை நம்பி களத்தில் குதித்துள்ள கூட்டணியினருக்கு ஜனாதிபதியுடனான சந்திப்பு பெரும் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது. மஹிந்தவின் தலைமைத்துவத்தை விரும்பும் இக் கூட்டணியினர் அவர் இல்லாது அரசியலில் செயற்பட முடியாததன் காரணத்தினாலேயே அவரை தலைவராக்க முயற்சிகளை மேற்கொண்டனர்.

ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் மஹிந்தவுக்கு இனிமேல் தனி இடம் கிடைக்கப் போவதில்லை என்பது தெரிந்தே மஹிந்த ஆதரவுக் கூட்டணி தமது தனித்த பயணத்தை ஆரம்பிக்க திட்டம் வகுத்துள்ளது. இந்த பயணம் எந்தளவு தூரம் பயணிக்கும் என்பதை அனைவரும் சந்தேகக் கண்ணோடு அவதானித்துக் கொண்டிருக்கின்றனர். . அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பிளவில் ரணிலில் பங்கும் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் விமர்சிக்கவும் செய்கின்றன.

ரணிலின் பிரித்தாளும் தந்திரமே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இரு அணிகள் உருவாக காரணமாகியுள்ளதாம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணிலுடன் கூட்டு சேர்ந்துள்ளதாகவும் ஜனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தை ஆதரிப்பதனா­லே­யே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு தரப்பு ஆளும் தரப்பாகவும் இன்னொரு குழு எதிர்க் கட்சியாகவும் செயற்படுகின்றது. இதன் காரணமாகவே மஹிந்தவுடன் ஒரு குழுவினரும் மைத்திரியுடன் இன்னொரு குழுவினரும் கைகோர்த்துள்ளனர்.

எவ்வாறாயினும் மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தில் மஹிந்த ராஜபக் ஷவுக்கு முக்கிய இடம் இல்லை என்பதை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளதால் மஹிந்த ஆதரவுக் கூட்டணி அடுத்த கட்டமாக புதிதாக ஏதேனும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

ஆயினும் தொடர்ந்தும் மஹிந்தவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் களமிறக்கும் முயற்சிகள் இன்றும் மஹிந்த கூட்டணியினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல சந்தர்ப்பங்களில் மஹிந்த ஆதரவுக் கூட்டணி ஜனாதிபதி மற்றும் கட்சியின் முக்கிய உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை கைவிடவில்லை .

எனினும் கட்சியின் முடிவுகளால் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக எவ்வித அடையாளங்களும் தெரியவில்லை என்றே கூற வேண்டும். ஒன்றில் மஹிந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் சாதாரண உறுப்பினராக செயற்பட தயாராக இருக்க வேண்டும். ஆனால் மஹிந்த அதற்கு ஒருபோதும் தயாராக இல்லை என்பது வெளிப்படையாகவே தெரிகின்றது. 

ஆகவே தனது பலத்தை வெளிப்படுத்தவும் தன்னை தன்னிகரில்லாத தலைவனாக வெளிப்படுத்தவும் அவர் மாற்று வழியை கடைப்பிடிக்கவேண்டியுள்ளது. ஆகவே மஹிந்தவும் அவரது சகாக்களும் மூன்றாவது கூட்டணியை உருவாக்க புதிய முயற்சிகளை எடுப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

-ஆர்.யசி