வெலிக்கடைச் சிறைச்சாலை கலவரம் குறித்த விசாரணை அறிக்கை ரணிலிடம் கையளிப்பு
வெலிக்கடைச் சிறைச்சாலையில் கடந்த 2012ஆம் ஆண்டு நடந்த கலவரம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் அறிக்கை நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்தவுடன், வெலிக்கடைச் சம்பவங்கள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்றை நீதி அமைச்சு நியமித்திருந்தது.
ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி விமல் நம்புவாசம் தலைமையிலான இந்தக் குழுவில் ஓய்வுபெற்ற பிரதி காவல்துறை மா அதிபர் அசோக விஜேதிலக, ஓய்வுபெற்ற நிர்வாக சேவை அதிகாரி சட்டவாளர் லியனகே ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
பல்வேறு தரப்பினரையும் சந்தித்து நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் இந்தக் குழு தமது இறுதி அறிக்கையை தயாரித்துள்ளது. இந்தக் குழு சில பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளது. 2012ஆம் ஆண்டு வெலிக்கடைச் சிறைச்சாலையில் கைதிகளுக்கும், சிறைக்காவலர்களுக்கும் ஏற்பட்ட மோதலையடுத்து, 27 கைதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதுடன், 40 பேர் படுகாயம் அடைந்தனர்.