20 குறித்து இன்று இறுதித் தீர்மானம்! கூடுகின்றது அமைச்சரவை
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமாக வரவுள்ள தேர்தல் முறை மாற்ற யோசனை தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்பதற்கான விசேட அமைச்சரவை கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறும் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
இந்த விசேட அமைச்சரவைக் கூட்டத்தின்போது சிறுபான்மை கட்சிகளின் யோசனைகள் குறித்து பரிசீலிக்கப்படும். தேர்தல் முறை மாற்ற யோசனையை பிரதமர் முன்வைத்தாலும் அமைச்சரவையே இறுதி முடிவை எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஒரு நம்பிக்கையில்லா பிரேரணையும் எடுக்கப்படமாட்டாது. நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்க்கட்சி கொண்டுவரவில்லை மாறாக வேறு சில எம்.பி. க்களே கொண்டு வந்துள்ளனர். பாராளுமன்றத்தைக் கலைக்க ஏன் அவசரப்படவேண்டும்? எப்போது கலைக்கப்படவேண்டும் என்பதனை ஜனாதிபதி தீர்மானிப்பார் என்றும் அவர் கூறினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்
தேர்தல் முறை மாற்ற யோசனை தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்பதற்கான விசேட அமைச்சரவை கூட்டம் ஒன்று இன்று வௌ்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது. இதன்போது தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும். அத்துடன் இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டால் வௌ்ளிககிழமையே வர்த்தமானியில் வெளியிடவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அமைச்சரவைக் கூட்டத்தின்போது சிறுபான்மை கட்சிகளின் யோசனைகள் தொடர்பாகவும் பரிசீலிக்கப்படும். ஆனால் கடந்த திங்கட்கிழமை அமைச்சரவைக் கூட்டத்தின்போது தேர்தல் முறை மாற்ற யோசனை வந்தது. ஆனால் அப்போது சிறுபான்மை கட்சிகள் தமது எதிர்ப்பை உரிய முறையில் பதிவு செய்யவில்லை. அது ஏன் என்று தெரியவில்லை. எனினும் தற்போது குரல் எழுப்புகின்றனர்.
தேர்தல் முறை மாற்ற யோசனையை பிரதமர் முன்வைத்தாலும் அமைச்சரவையே இறுதி முடிவை எடுக்கும். அதாவது தேர்தல் தொகுதிகளை 125 ஆக வைத்துள்ளமையே பல கட்சிகள் எதிர்க்கின்றன. ஐக்கிய தேசிய கட்சி திடீரென பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 225 க்கு மேல்அதிகரிக்கக்கூடாது என்று கூறிவிட்டது.
இந்நிலையில் புதிய தேர்தல் முறையின் பிரகாரம் 125 தேர்தல் தொகுதிகளை உருவாக்குவது பொருத்தமாக இருப்பதாக தெரியவில்லை. எவ்வாறெனினும் இறுதி தேர்தல் முறை யோசனையில் தேசிய பட்டியல் தவிர்ந்த மக்களினால் தெரிவு செய்யப்படும் எம்.பி. க்களின் எண்ணிக்கை 200 ஆக இருக்கும். அதில் தொகுதி முறைமையில் எத்தனை உறுப்பினர்கள் என்றும் மாவட்ட விகிதாசார முறையில் எத்தனை உறுப்பினர்கள் என்று தீர்மானிக்கவேண்டியுள்ளது.
கேள்வி- 255 என்ற எம்.பி. க்களின் எண்ணிக்கையை ஏன் 225 ஆக குறைப்பதற்கு ஏன் பிரேரிக்கப்பட்டுள்ளது? "
பதில்- ஐக்கிய தேசிய கட்சி திடீரென எம்.பி. க்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக்கூடாது என்று கூறிவிட்டதே?
கேள்வி - பாராளுமன்றம் கலைக்கப்படுமுன்னர் தேர்தல் முறை மாற்றம் வருமா?
பதில் - நிச்சயமாக தேர்தல் முறை மாற்றத்தை நிறைவேற்றிவிட்டே பாராளுமன்றத்தை கலைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கேள்வி- தேர்தல் முறை மாற்றத்துக்கு அமைச்சரவையின் அனுமதி கடந்த திங்கட்கிழமை கிடைத்தமை ஐக்கிய தேசிய கட்சிக்கு வெற்றி என்று பிரதி வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளாரே?
பதில் -அன்று அவர் பதில் அமைச்சராகவே அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அவருக்கு நடைமுறை தெரியாமல் இருக்கலாம்.
கேள்வி- நான்கு பிரதியமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். அப்போது பாராளுமன்றம் உடனடியாக கலைக்கப்படாதா?
பதில் -அமைச்சர்கள் நியமனத்தை பார்க்கும்போது விரைவில் பாராளுமன்றம் கலைக்கப்படாது என்றே தெரிகின்றது.
கேள்வி- அப்படியாயின் அடுத்தவருடம் ஏப்ரல் வரை பாராளுமன்றம் நீடிக்கப்படுமா?
பதில்- பாராளுமன்றத்தைக் கலைக்க ஏன் அவசரப்படவேண்டும்? எப்போது கலைக்கப்படவேண்டும் என்பதனை ஜனாதிபதி தீர்மானிப்பார். விரைவில் கலைப்பதாக ஜனாதிபதி கூறவில்லையே?
கேள்வி -அமைச்சர்கள் கூடுகின்றனரே?
பதில் -தேசிய அரசாங்கம் எனில் 55 அமைச்சர்களும் 45 பிரதியமைச்சர்களும் இடம்பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.
கேள்வி- பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை எப்போது எடுக்கப்படும்?
பதில்- ஒரு நம்பிக்கையில்லா பிரேரணையும் எடுக்கப்படமாட்டாது. நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்க்கட்சி கொண்டுவரவில்லை. மாறாக வேறு சில எம்.பி. க்களே கொண்டு வந்துள்ளனர்.
கேள்வி- நம்பிக்கையில்லா பிரேரணையை கைவிடுமாறு ஜனாதிபதி எம்.பி. க்களுக்கு கூறினாரா?
பதில்- அவ்வாறு ஜனாதிபதி எதுவும் கூறவில்லை. அவர் அப்படி கூறவுமாட்டார்.
கேள்வி- மஹிந்தவை இணைத்துக்கொண்டு ஜனாதிபதி சுதந்திரக் கட்சியை முன்னெடுப்பாரா?
பதில்- நி்ச்சயமாக மஹிந்தவை இணைத்து முன்னெடுப்பார். அவர் யாரையும் இணைத்துக்கொள்வார்.
கேள்வி- ஆனால் மஹிந்தவுக்கு வேட்பு மனு கொடுக்கமாட்டேன் என்று ஜனாதிபதி கூறியிருந்தாரே?
பதில்- பிரதமர் வேட்பாளர் பதவி வழங்கப்படாது என்றே கூறப்பட்டது. அவருக்கு பிரதமர் வேட்பாளர் பதவி கொடுத்தால் இளைஞர்கள் புத்திஜீவிகள் உள்ளிட்டவர்களின் வாக்குகளை நாங்கள் இழக்கலாம்.
கேள்வி- சுதந்திரக் கட்சியில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு விண்ணப்பங்கள் வருகின்றனவா?
பதில்- விண்ணப்பங்ள் வந்துகொண்டிருக்கின்றன.
கேள்வி -மஹிந்த ராஜபக்ஷ விண்ணப்பித்துள்ளாரா?
பதில் -அவர் விண்ணப்பிக்கவில்லை என்று நினைககின்றேன். ஆனால் நாமல் ராஜபக்ஷ விண்ணப்பித்துள்ளார். தனித்து போட்டியிடுவதாக கூறிய பலர் விண்ணப்பித்துள்ளனர்.
கேள்வி- நாமல் ராஜபக்ஷவுக்கு வேட்பு மனு வழங்கப்படுமா?
பதில் --அவருக்கு வழங்கப்படும்.
கேள்வி -புதிய அரசாங்கத்தை நிறுவிவிட்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதாக ஜனாதிபதி கூறியுள்ளார். ஆனால் தற்போதைய நிலைமைகளை பார்க்கம்போது பாராளுமன்றம் உடனடியாக கலைக்கப்படாதா?
பதில்- ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் கூட்டத்தில் செப்டெம்பரில் கலந்துகொள்வார். ஆனால் அரசாங்கத்தை அமைத்துவிட்டா அல்லது பழைய அரசாங்கத்தின் போதா ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்பது என்பதனையும் ஜனாதிபதி தீர்மானிப்பார்.
கேள்வி -அவன்ட் கார்ட் விசாரணை மற்றும் ஜனவரி 9 சதி முயற்சி விசாரணை எந்த மட்டத்தில் உள்ளது? "
பதில்- அவன்ட் கார்ட் விசாரணை நடக்கின்றது. சட்டமா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார். சதி முயற்சி குறித்தும் விசாரிக்கப்படுகின்றது. சதி முயற்சி அல்லவா? விசாரிக்க காலம் தேவைப்படலாம்.
கேள்வி- துறைமுக நகர் திட்டம் ஆரம்பிக்கபடாதா?
பதில்- அது தொடர்பில் ஆராயும் குழுவின் பரிந்துரைக்கு அமைய தீர்மானம் எடுக்கப்படும்.