Breaking News

உள்நாட்டு விசாரணை நம்பகம்மிக்க ஒன்றாக இருக்கும் – விஜேதாச ராஜபக்ச

இறுதிக்கட்டப் போரின் போது இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக விசாரிப்பதற்காக இலங்கை அரசாங்கம் உருவாக்கும் உள்நாட்டுப் பொறிமுறை, அனைத்துலக அளவிலும் உள்நாட்டிலும் நம்பகம்மிக்க ஒன்றாக இருக்கும் என்று  நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பொறுப்புக்கூறல் விவகாரத்தில் இலங்கை உருவாக்கும் உள்நாட்டுப் பொறிமுறையில் அனைத்துலக நீதிபதிகள் மற்றும் சட்டவாளர்களை பெரும்பான்மையாக உள்ளடக்க வேண்டும் என்று, ஜெனிவா கூட்டத்தொடரில் நியுயோர்க்கைத் தளமாக கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியிருந்தது.

இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்காவின் நீதி அமைச்சர், “ அனைத்துலக சமூகம் சிறிலங்கா மீது நம்பிக்கை வைத்திருக்க வேண்டும். எமது உள்நாட்டு விசாரணை நிச்சயமாக அனைத்துலக சமூகத்தினால் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் நம்பகத்தன்மை கொண்டதாக இருக்கும்.

இந்த நம்பகமான விசாரணையை ஆரம்பிப்பது தெதாடர்பாக நாம் அனைத்துலக அமைப்புகள், முகவரகங்களுடன் ஆலோசித்து வருகிறோம். அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்கள் தொடர்பான நிபுணரான பிரித்தானியாவைச் சேர்ந்த சேர் டெஸ்மன் டி சில்வாவின் ஆலோசனையையும் சிறிலங்கா கோரியுள்ளது.

வரும் செப்ரெம்பரில் ஐ.நா விசாரணை அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்னர், இந்த விசாரணைப் பொறிமுறையின் உருவாக்கம், உள்ளடக்கம், விசாரணை முறை தொடர்பான விபரங்கள் வெளியிடப்படும். உலக சமூகம், இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் நெகிழ்வுத்தன்மையுடன் ஒத்துழைக்கிறது.

நாம் உருவாக்கும் உள்நாட்டு விசாரணை அனைத்துலக சமூகத்தினாலும், உள்நாட்டு மக்களாலும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் நம்பகமானதாக இருக்கும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.