இறுதி போரில் புலிகளை சரணடைய வற்புறுத்திய தி.மு.க.வின் இன்றைய நிலைப்பாடு விசித்திரமாக உள்ளது
இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது விடுதலைப்புலிகளை சரணடையுமாறு வற்புறுத்திய தி.மு.க. தற்போது எழிலன் (சசிதரன்)தொடர்பில் அளித்துள்ள பதில் விசித்திரமாக இருக்கின்றது என்று உலக தமிழர் பேரவையின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இலங்கை வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தனது கணவரும், விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்தவருமான எழிலன் என்கிற சசிதரன் 2009ஆம்ஆண்டில் இலங்கையில் போர் நிகழ்ந்த காலத்தில் கனிமொழிக்குச் செயற்கைக்கோள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். கனிமொழியின் ஆலோசனையின் பேரில் எழிலனும் அவருடன் பலரும் சரணடைந்தனர். ஆனால் அவர்களைப் பற்றி எந்தத் தகவலும் எங்களுக்குத் தெரியவில்லை. இது தொடர்பாக கனிமொழியைத் தொடர்பு கொள்ள பலமுறை முயற்சித்தும் முடியவில்லை எனக் கூறியுள்ளார்.
இதற்கு கனிமொழி சார்பில் தி.மு.க.வின் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் அளித்துள்ள பதில் வேடிக்கையாக இருக்கிறது. அதாவது, விடுதலைப்புலிகளைச் சரணடையுமாறு யாரும் ஆலோசனை கூறவில்லை. போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என இந்திய அரசு வற்புறுத்தி வந்த நிலையில் அது நிறைவேறாமல் போனபோது, விடுதலைப்புலிகளை எப்படி சரணடையச் சொல்வோம் என விளக்கம் அளித்துள்ளார்.
ஆனால், இலங்கையில் போர் முடிந்த பின்னர் 2011 ஆம் ஆண்டில் எங்கள் மீது கனிமொழி பகிரங்கமான ஒரு குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் எங்களிடம் ஆலோசனை கேட்டபோது ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு சரணடையுமாறு கூறியபோது நெடுமாறனும், வைகோவும் சரணடைய வேண்டாம் என்றும், போரை தொடருங்கள் எனவும் அவர்களுக்குத் தவறான வழிகாட்டுதலை அளித்ததாகக் குற்றம் சாட்டினார். இந்தக் குற்றச்சாட்டை இப்போது இளங்கோவனே மறுத்திருப்பது விசித்திரமாக உள்ளது என நெடுமாறன் மேலும் தெரிவித்துள்ளார்.