மாற்றங்களை செய்ய முடியாது: எதிர்க்கட்சித் தலைவர் நிமல் கூறுகிறார்
சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளின் தேவைக்கமைய தேர்தல் திருத்த யோசனையில் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது. வர்த்தமானி அறிவித்தலில் முரண்பாடுகள் இருக்குமாயின் இரண்டு வார காலத்துக்குள் உயர் நீதிமன்றத்தை நாடமுடியும் என்று எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
தேர்தல் திருத்த யோசனைகளுக்கு எதிராக போராடுவது சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளின் தனிப்பட்ட விடயமாகும். அதில் நாம் தலையிட மாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
20ஆவது திருத்தச் சட்ட மூலம் குறித்த வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக வாபஸ் பெறவேண்டும் இல்லையேல் போராட்டம் நடத்தப்படும் என்று சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகள் தெரிவித்துள்ள நிலையில் இது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டை வினவிய போதே எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
தேர்தல் முறைமையில் மாற்றம் கொண்டுவருவது தொடர்பில் கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக கூடி ஆராய்ந்து இறுதியில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் தலைமையிலும் தனித்தனியாக ஆராயப்பட்டுள்ளது. இதில் பாராளுமன்ற ஆசன முறைமையில் பெரிய மாற்றம்
கொண்டுவருவதில்லை என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது. இந்த தீர்மானத்ததை ஐக்கிய தேசியக் கட்சியும் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆரம்பத்தில் பாராளுமன்ற ஆசன ஒதுக்கீட்டை 255 ஆக உயர்த்தவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட போதிலும் தற்போது பாராளுமன்ற ஆசன ஒதுக்கீடு 237என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய கட்சிகளின் தீர்மானங்களுக்கு அமைய வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.
அதேபோல் தற்போது கொண்டுவரப்பட்டிருக்கும் தேர்தல் முறைமை மாற்றமானது சிறுபான்மைக் கட்சிகளின் ஆலோசனைகளையும் கவனத்தில் கொண்டே எடுக்கப்பட்டுள்ளது. இந்த முறைமையில் சிறுபான்மைக் கட்சிகள் எந்த வகையிலும் பாதிக்கப்படப் போவதில்லை. அதிகரிகப்பட்டிருக்கும் ஆசன முறைமையானது சிறுபான்மைக் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சேர்த்தே ஒதுக்கப்படும். அதேபோல் பாராளுமன்றத்தில் இப்போது இருக்கும் சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளின் பிரதிநிதித்துவம் எந்த வகையிலும் குறைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. இது தொடர்பில் சிறுபான்மைக் கட்சிகள் ஜனாதிபதியுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதில் பல தீர்மானங்களும் எட்டப்பட்டுள்ளன. ஆகவே இது தொடர்பில் சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகள் அச்சமடையத் தேவையில்லை.
ஆனால் இந்த தேர்தல் முறைமை திருத்தம் தொடர்பான தீர்மானத்தில் இனி எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. இந்த தீர்மானத்தில் முரண்பாடுகள் இருக்குமானால் இரண்டு வாரங்களுக்குள் உயர் நீதிமன்றத்தில் தமது எதிர்ப்புகளை வெளிப்படுத்த முடியும். அதற்கான கால அவகாசம் உள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியும் இந்த முறைமையில் அதிருப்தி கொள்ளுமாயின் அவர்களும் தமது எதிர்ப்புகளை வெளிப்படுத்த முடியும். அவ்வாறு இல்லாமல் சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகள் தமது எதிர்ப்புகளை ஆர்ப்பாட்டங்கள் மூலமாகவோ அல்லது பேரணிகள் மூலமாகவோ வெளிப்படுத்த வேண்டும் என நினைத்தால் அதற்கும் நாம் தடையாக இருக்கப் போவதில்லை.
அது அவர்களது தனிப்பட்ட விடயமாகும். அவர்கள விரும்பியதை செய்யகூடிய உரிமை அவர்களுக்கு ை அவர்களுக்கு உள்ளது. ஆனால் இவர்களின் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளைக் கண்டு நாம் அஞ்சப் போவதில்லை. எமது முடிவில் எந்த மாற்றமும் இல்லை. சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகள் எமது யோசனையில் அதிருப்தி கொண்டிருந்தால் அல்லது எமது யோசனைகளில் தெளிவு இல்லை என்றால் எம்முடன் கலந்தாலோசிக்க முடியும் எனக் குறிப்பிட்டார்.