சர்வதேச புலிகள் அமைப்புக்களுடன் கைகோர்த்து அரசாங்கம் உடன்படிக்கை - நிமால் குற்றச்சாட்டு
லண்டன் பேச்சுவார்த்தையின் பின்னணியில் புலிகளை பாதுகாக்கும் நடவடிக்கையே உள்ளது. அரசாங்கத்தின் விளக்கத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
இடம்பெயர்ந்த தமிழர்களை மீளவும் குடியமர்த்துவதை சர்வதேசம் தீர்மானிக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட் டினார். புலம்பெயர் தமிழர்களை பயங்கரவாதிகளாக சித்திரிக்க முடியாது என்ற கருத்தினை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்த நிலையில் அது தொடர்பில் எதிர்கட்சியின் நிலைப்பாட்டை வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
லண்டலில் புலம்பெயர் அமைப்புகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை புலிகளை மீண்டும் நாட்டுக்குள் கொண்டுவருவதற்கான ஒரு கட்ட ஆயத்தமேயாகும்.
யுத்தத்தின் போது இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் என்ற பெயரில் வெளிநாடுகளில் இருக்கும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களை சந்தித்து நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தும் சந்திப்பாகவே இது நடைபெற்றுள்ளது. யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தமை மற்றும் புலிகளை கொன்றமை போன்ற விடயத்தில் சர்வதே புலிகள் அமைப்பினர் இலங்கை அரசாங்கத்தை பழிவாங்கும் நோக்கத்தில் உள்ளனர். அதன் காரணமாகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷ ஆகியோரை பழிவாங்கும் வகையில் இன்றும் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதேபோல் சர்வதேச விசாரணையை தூண்டும் செயற்பாடுகள் இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆகவே இவை அனைத்தையும் உறுதிப்படுத்தும் வகையிலேயே லண்டனில் புலம்பெயர் அமைப்புகளை சந்தித்து அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
அதேபோல் இந்தப் பேச்சுவார்த்தையில் என்ன விடயங்கள் கலந்துரையாடப்பட்டது என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்தவில்லை. வெறுமனே புலம்பெயர் அமைப்புகளுடன் பேசியதாகவும் அவர்களை நாட்டுக்குள் வரவழைக்கும் முயற்சிகள் எடுக்கப்படுவதாகவும் பேசியதாக தெரிவிக்கின்றனர்.
ஆனால் இது உண்மை இல்லை. ஐக்கிய தேசியக் கட்சி அன்றும் புலிகளை ஆதரித்து உடன்படிக்கை செய்துகொண்டது. அதேபோல் இன்றும் சர்வதேச புலிகள் அமைப்புகளுடன் கைகோர்த்து சர்வதேச உடன்படிக்கைகளை செய்துள்ளனர்.
இதனால் நாட்டுக்கே பதிப்புகள் ஏற்பட்டுள்ளது. எனவே ஜனாதிபதி இந்த விடயங்களை கவனத்தில் கொண்டு தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். மீண்டும் நாட்டில் பயங்கரவாத சூழல் உருவாவதை ஜனாதிபதி அனுமதித்துவிடக் கூடாது.
மேலும் யுத்தத்தில் இடம்பெயர்ந்த தமிழ் மக்களை அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்த வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். கடந்த அரசாங்கமும் வடக்கில் அதிகளவில் மீள்குடியேற்றங்களை மேற்கொண்டது. அதேபோல் வடக்கில் இருந்து வெளியேறிய சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களையும் மீளவும் குடியமர்த்த வேண்டியதும் அரசாங்கத்தின் கடமையாகும். இதை நாம் வலியுறுத்துவோம்.
ஆனால் வடக்கில் மக்களை குடியமர்த்துவது தொடர்பில் இந்த நாட்டு அரசாங்கம் தான் தீர்மானம் எடுக்க வேண்டும். இந்த விடயத்தை சர்வதேச அளவில் கொண்டு செல்வதனால் எந்தப்பயனும் கிடைக்கப்போவதில்லை. அதேபோல் இலங்கை விடயங்களை தீர்மானிக்க சர்வதேசத்துக்கு எந்த உரிமையும் இல்லை. ஆகவே இலங்கையில் தமிழ் மக்களை குடியமர்த்துவது தொடர்பில் அரசாங்கம் சர்வதேசத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதனால் எந்தப் பயனும் இல்லை.
இவர்களின் திட்டம் என்னவென்பது தெளிவாகத் தெரிகின்றது. இவர்கள் நாட்டை பிளவுபடுத்தி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தவே முயற்சிக்கின்றனர். அதற்கு ஜனாதிபதி இடம் கொடுக்கக் கூடாது. வடக்கின் அரசியல் சுயநலத்தை மட்டுமே கவனத்தில் கொண்டு செயற்படும் ஐக்கிய தேசியக் கட்சியை உடனடியாக ஆட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டார்.