Breaking News

ஜப்பானில் பொருளாதார உதவிகளை குறிவைக்கிறார் மங்கள

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஜப்பானுக்கான முதலாவது அதிகாரபூர்வ பயணத்தை நேற்று ஆரம்பித்துள்ளார். இந்தப் பயணத்தின் போது, அவர், ஜப்பானிய பிரதமர் சின்ஷோ அபே, ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் பியூமியோ கிஷிடா மற்றும் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சரின் அழைப்பின் பேரில், ரோக்கியோ சென்றுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர், அங்கு இருதரப்பு பேச்சுக்களை நடத்தவுள்ளதுடன், இலங்கைக்கான பொருளாதார உதவிகளை வழங்கும் இரண்டு உடன்பாடுகளிலும் கையெழுத்திடவுள்ளார்.

ஜப்பானின் அனைத்துலக ஒத்துழைப்பு முகவரகத்தின் தலைவர், அஹிகிகோ தனாகாவை சந்தித்து நடத்தவுள்ள பேச்சுக்களில், கட்டுநாயக்க விமான நிலையத்தை, விரிவாக்கும் இலங்கை அரசாங்கத்தின் திட்டம் குறித்தும் பேசவுள்ளார்.

இதற்கு, ஜப்பானின் அனைத்துலக ஒத்துழைப்பு முகவரகம், 48.9 பில்லியன் ரூபாவை வழங்கவுள்ளது.

மேலும், இலங்கை வெளிவிவகார அமைச்சரின் இந்தப் பயணத்தின் போது, இருதரப்பு வர்த்தகம், பொருளாதார உதவிகள், முதலீட்டு வாய்ப்புகள் உள்ளிட்ட பரந்துபட்ட விவகாரங்கள் குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளது. நாளை ஜப்பானிய பிரதமர் சின்ஷோ அபேயைச் சந்திக்கவுள்ள மங்கள சமரவீர இலங்கையில் அமைதியைக் கட்டியெழுப்புதல், தேசிய நல்லிணக்கம், மற்றும் ஆசியாவில் ஜனநாயகம் என்பது தொடர்பான கருத்தரங்கிலும் பங்கேற்கவுள்ளார்.