Breaking News

ஆளும், எதிர்க் கட்சிகள் ஜனாதிபதிக்கு யோசனை ஒன்றை முன்வைக்க தீர்மானம்

பாராளுமன்றத்தை உடன் கலைத்து தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தும் வகையில் ஆளும், எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு யோசனை ஒன்றை சமர்ப்பிக்க வுள்ளதாக அரசியல் வட்டாரங் களிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்பிரகாரம் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி இது குறித்தான முடிவினை கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற கட்சியின் செயற்குழுவின் போது ஏகமனதாக தீர்மானித்துள்ளது. இந்நிலையில் இது குறித்தான யோசனை இந்த வாரமளவில் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் இவ்வாரம் கூடுவுள்ள அமைச்சரவையின் போது இது குறித்து ஆராயப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியான பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்தார். 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் பாராளுமன்றத்தினுள் பெரும்பான்மை அற்றமையினால் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் உரிய முறையில் முன்னெடுப்பதற்கு பெருமளவில் தடையாக காணப்படுகிறது.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தினை நிறைவேற்ற முனைந்த போது எதிர்க்கட்சியினரால் பாரியளவில் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டன. அதேபோன்று அரசியலமைப்பு பேரவைக்கான சிவில் பிரதிநிதிகளின் நியமனத்தின் போதும் அதே எதிர்ப்புகள் வெளியிடப்பட்டன.

மேற்குறித்த காரணங்களை மையமாக கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றத்தை உடனடியாக கலைக்குமாறு கடந்த சனிக்கிழமை செயற்குழுவின் போது தீர்மானித்துள்ளது.

எனினும் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றிய பின்னரே பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூறிவருகிறது. இதன் காரணமாக உடனடி தேர்தலுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு விரும்பம் இல்லை என்பது தெரியவருகிறது. 

இருந்தபோதிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பாராளுமன்றத்தை உடனடியாக கலைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.

அதேபோன்று மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட சிறுப்பான்மைக் கட்சிகளும் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்பதில் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் உடன்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. 

இந்நிலையில் பாராளுமன்றத்தின் உறுப்பினர்களின் பெரும்பான்மை அங்கத்தவர்கள் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு உடன்பட்டுள்ளனர். இதன்பிரகாரம் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் பெரும்பான்மை அங்கத்தவர்கள் பாராளுமன்றத்தை உடன் கலைத்து நிரந்தர அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்துவற்கு தேர்தலை நடத்துமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு யோசனை ஒன்றை முன்வைக்கவுள்ளனர்.

இது தொடர்பில் பாராளுமன்றத்தை உடன்கலைக்க வேண்டும் என்று உடன்ப்பட்டுள்ள கட்சியின் அங்கத்தவர்கள் வீரகேசரிக்கு கருத்து தெரிவிக்கையில், 

ரவி கருணாநாயக்க 

பாராளுமன்றத்தை உடன் கலைக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த தீர்மானத்திற்கு அனைத்து கட்சிகளும் உடன்படும் என்று நம்புகிறோம் என்று நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார்.

மொஹமட் முஸம்மில்

இது தொடர்பில் மஹிந்த ஆதரவு அணியின் முன்னிலைக்கட்சியாக செயற்படும் தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளர் மொஹமட் முஸம்மில் கருத்து தெரிவிக்கையில் , பாராளுமன்றத்தின் சிறுப்பான்மை பிரதிநிதித்துவத்தை கொண்ட அரசாங்கத்;திற்கு இனிமேலும ஆட்சி அமைக்க இடமளிக்க முடியாது. ஆகவே நிரந்தர ஆட்சி உருவாக்கப்பட வேண்டும். அதன்போதே நாட்டை உரிய பாதைக்கு இட்டுச்செல்ல முடியும். இதன்படி உடனடியாக தேர்தல் நடத்தப்படவேண்டும் என்றார்.