எவரும் பிரதமராகலாம்! ஐ.தே.க.வுடன் தனிப்பட்ட ரீதியிலான உடன்படிக்கை எதுவுமில்லை - ஜனாதிபதி
இலங்கையில் எந்தப் பிரதேசத்திலிருந்தும் பிரதமர் ஒருவர் உருவாகலாம். அதற்கு தடைகள் கிடையாது என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐ.தே.க.வுடன் எந்த விதமான தனிப்பட்ட ரீதியிலான உடன்படிக்கையையும் செய்து கொள்ளவில்லையென்றும் கூறினார்.
அன்று ஆட்சியிலிருந்து வெளியேறிய பின்னர் 49 அமைப்புக்களுடன் உடன்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
''ஒன்றுபடுவோம், வெற்றி பெறுவோம்,பாடுபடு வோம்'' என்ற தொனிப் பொருளில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாட்டாளர்களை தெளிவுபடுத்தும் கூட்டத்தொடரின் முதலாவது கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை தம்பதெனியவில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி இங்கு மேலும் தெரிவித்திருப்பதாவது
நாட்டிற்கு தேவைப்படும் அரசியல் மற்றும் சமூக மாற்றத்தை பெற்றுக் கொடுப்பதற்கு பண்டாரநாயக்க வழங்கிய அர்ப்பணிப்பை போன்று மீண்டும் அர்ப்பணிப்புக்கள் மேற்கொள்ள வேண்டிய கால கட்டம் இதுவாகும்.
அதற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன். அது விடயத்தில் நான் ஒரு போதும் பின்னிற்க மாட்டேன். உலகில் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொண்ட பலர் பல்வேறு சவால்களை எதிர்கொண்டதோடு மட்டுமல்லாமல் உயிர்த் தியாகம் செய்யும் நிலைமையும் ஏற்பட்டது. எந்தச் சவால் எந்த ரூபத்தில் வந்தாலும் அனைத்திற்கும் முகம் கொடுப்பதற்கு தயாராகவே உள்ளேன்.
சமூக மற்றும் அரசியல் சக்திகளை எந்தளவிற்கு ஒன்றிணைக்க முடியுமோ அந்தளவிற்கு ஒன்றிணைந்து நாட்டுக்கு தேவையான சமூக பொருளாதார மற்றும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்க அர்ப்பணிப்புடன் செயல்படுவேன்.
ஐ.தே.க.வுடன் தனிப்பட்ட ரீதியில் எந்த விதமான உடன்படிக்கையொன்றையும் கையெழுத்திடவில்லை. அன்றைய ஆட்சியிலிருந்து வெளியேறியபின்னர் 49 அமைப்புக்களுடன் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் மட்டுமே இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டேன். நாட்டின் எந்தவொரு பிரதேசத்திலிருந்தும் பிரதமர் ஒருவர் உருவாகலாம். அதற்கு தடையில்லை.
நல்ல திட்டங்களும் அதற்கான மனப்பக்குவமும் நாட்டினதும் மக்களினதும் எதிர்காலத்திற்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் மனப் பக்குவமே அதற்கு அவசியமானதாகும்.
மோதல்களை ஏற்படுத்திக் கொள்ளும் அரசியலுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். புதியதொரு அரசியல் கலாசாரத்திற்குள் அனைத்து கல்விமான்கள், நிபுணர்களை ஒன்றிணைத்துக் கொண்டு மக்களினதும் நாட்டினதும் நலனுக்காக உழைக்கும் அர்ப்பணிப்பே அவசியமாகும் அது எங்கள் அனைவரினதும் கடப்பாடாகும் என்றார்.
இக்கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி. நாவின்ன, வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிரி ஜயசேகர, பிரதியமைச்சர் சாந்த பண்டார ஆகியோரும் உரையாற்றினார்கள். இதில் பிரதியமைச்சர்களான ஜயரத்ன ஹேரத், எரிக் வீரவர்தன உட்பட்ட தம்பதெனிய தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாகாண சபைகள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் பலரும் கலந்துகெண்டனர்.