மைத்திரி - மஹிந்தவை இணைக்க 6 பேரடங்கிய ஒருங்கிணைப்புக் குழு! - சு.க. கூட்டத்தில் இணக்கம்
நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெற்றிபெறவேண்டுமானால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவும் கட்சிக்கு அவசியம்' என்று சு.கவிலுள்ள மஹிந்த ஆதரவு அணி உறுப்பினர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன், தற்போதைய ஜனாதிபதிக்கும் முன்னாள் ஜனாதிபதிக்குமிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கு ஒருங்கிணைப்புக் குழுவொன்று அவசியம் எனவும், இருவருக்குமிடையிலான பேச்சுகள் மீளவும் ஆரம்பிக்கப்படவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் உட்கட்சிப்பூசல் வலுத்துவருவதால், கட்சி இரண்டாகப் பிளவுபடும் எனக் கூறப்பட்டுவரும் நிலையில், அதைத் தடுத்து கட்சியைப் பலப்படுத்தும் நோக்கில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை நேற்று கொழும்பில் சந்தித்து ஜனாதிபதி பேச்சு நடத்தினார்.
சு.கவின் அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள், தொகுதி அமைப்பாளர்கள் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர். இதன்போதே சு.கவிலுள்ள மஹிந்தவின் விசுவாசிகளால் மேற்படி வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதற்குப் பதிலளித்துள்ள ஜனாதிபதி, கட்சி பலமடைவதையே தானும் விரும்புவதாகவும் கட்சியில் இருப்பதற்கு எவருக்கும் தடையில்லை எனவும் இடித்துரைத்துள்ளார்.
பிரதமர் வேட்பாளர் பதவியை முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கமுடியாது என அவர் மீண்டும் உறுதியாகக் கூறியுள்ளார். இதனையடுத்து, இருவருக்குமிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சந்திப்புகளை நடத்துவதற்காக 6 பேரடங்கிய ஒருங்கிணைப்புக் குழு அமைப்பதென்ற யோசனைக்கு சுதந்திரக் கட்சிக் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது. -