விகாரைகள் வாயிலாக மஹிந்த இனவாதத்தை தூண்டுகிறார் - அகிலவிராஜ் குற்றச்சாட்டு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விகாரை வாயிலாக சென்று இனவாதத்தை போஷிக்கின்றார். மதத்தை காட்டி அரசியல் செய்வதனை அவர் முற்றாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப்பேச்சாளரும் கல்வி அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் குற்றம் சுமத்தினார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்சி பிளவுப்படாமல் பாதுகாத்ததை போன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவினால் சுதந்திரக் கட்சியை பாதுகாக்க முடியவில்லை. சு.க.வின் 60 ஆவது நினைவாண்டு தினத்திற்கு முன்பு கட்சியை ஒற்றுமைப்படுத்தி ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுமாறு அவர் கோரிக்கை விடுத்தார்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு கல்வி அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,
ஜனவரி 8 ஆம் திகதி ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தின் பின்பு 100 நாட்களில் எந்தவொரு அரசாங்கமும் செய்யாத சேவைகளை நாம் நிறைவேற்றினோம். எனினும் நல்லாட்சி அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு ஆதரவளிக்காது தொடர்ந்தும் சதித்திட்டங்களை எதிர்கட்சியினர் முன்னெடுத்து வருகின்றனர். இதன்காரணமாக நாட்டின் பொருளாதாரம் பெருமளவில் சீர்குலைந்துள்ளது.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ விகாரை வாயிலாக சென்று இனவாதத்தை போஷிக்கின்றார். மதத்தை காட்டி அரசியல் செய்வதனை ஏற்றுக்கொள்ள முடியாது . இதன்காரணமாக விகாரையை அரசியல் ரீதியாக இரண்டாக பிளவுப்படுத்த முனைகின்றார்.
இது தொடர்பில் பௌத்த மத தலைவர்கள் பலர் விமர்சனத்திற்கு உட்படுத்தி வருகின்றனர். ஆகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மதத்தை காட்டி அரசியல் செய்வதனை முற்றாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை பிரதமராக ஆட்சிப்பீடத்திற்கு ஏற்றி ஊழல் மோசடிகளில் சிக்குப்பட்டவர்கள் தப்பிக்க வைக்க முனைகின்றனர். இதன்காரணமாகவே மஹிந்த ராஜபக் ஷவை மீளவும் அதிகார பீடத்தில அமர்த்துவதற்கு ஒரு கும்பல் தயாராகி வருகிறது.
ஊழல் மோசடி செய்த எவரும் தப்பிக்க இயலாது. அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். நாம் எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்த வேளைகளில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ ஐக்கிய தேசியக் கட்சியை பிளவுப்படுத்துவதற்கு முனைந்தார். எனினும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் திறமையினாலும் ஆளுமையினாலும் கட்சியை பிளவுபடாமல் பாதுகாக்கப்பட்டது.
இருந்த போதிலும் தற்போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இரண்டாக பிளவுப்பட்டுள்ளது. இதற்கு மஹிந்த ராஜபக் ஷவே பிரதான காரணமாகும். இந்த தருணத்தில் கட்சியை பிளவுப்படுத்தாமல் பாதுகாப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் முடியவில்லை.
எனவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 60 ஆவது நிறைவாண்டு தின விழா இந்த வருடம் உதயமாக உள்ளது. ஆகவே 60 ஆவது நினைவாண்டிற்கு முன்பு சுதந்திரக் கட்சியை ஒற்றுமைப்படுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்று அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.