Breaking News

யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நஷ்ட ஈடு பெறவில்லையாயின் விண்ணப்பிக்கவும்

நஷ்டஈடு பெற்றுக்கொள்வதற்காக புனர்வாழ்வு அதிகாரசபைக்கு இதுவரையில் விண்ணப்பங்களை அனுப்பாத யுத்தப் பாதிப்புக்குள்ளான குடும்பங்கள் தங்களது விண்ணப்பங்களை அனுப்பமுடியு மென்பதுடன், புதிய விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ள நிறைவேற்றுச் சபை தயாராக வுள்ள தாகவும் புனர்வாழ்வு அதிகாரசபையின் நிறை வேற்றுப் பணிப்பாளர் என்.புவனேந்திரன் தெரிவித்தார். 

புனர்வாழ்வு அதிகாரசபையின் ஏற்பாட்டில் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் நேற்று சனிக்கிழமை நடமாடும் சேவை நடைபெற்றது. இதன்போதே அவர் இதனைக் கூறினார். 

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 

´பல வருடங்களாக புனர்வாழ்வு அதிகாரசபைக்கு அனுப்பப்பட்ட விண்ணப்பங்கள் தேங்கியுள்ளன. அந்த விண்ணப்பங்களில் பல குறைபாடுகள் உள்ளன. இவற்றை நிவர்த்திசெய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் எவரும் இதில் விடுபடக்கூடாது. 

எனவே, புனர்வாழ்வு அதிகாரசபைக்கு விண்ணப்பிக்காதவர்கள், தங்களது விண்ணப்பங்களை 49 டீ.எஸ்.சேனநாயக்க மாவத்தை பொறளை, கொழும்பு எனும் முகவரிக்கு அனுப்பிவைக்க முடியும்´ என்றார். 

´இறந்தவர்களுக்கு நஷ்டஈடு வழங்கும் நிறுவனமாக இயங்கிய புனர்வாழ்வு அதிகாரசபையானது, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காக பல கோணங்களில் உதவிகளை வழங்குவதற்கு தனது செயற்பாடுகளை தற்போது முன்னெடுத்துள்ளது. 

சுயதொழில் வாய்ப்பு, பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு விசேட உதவிகள், யுத்தப் பாதிப்புக்குள்ளான அநாதைச் சிறுவர்களுக்கு உதவிகள், யுத்தத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவிகள், தொழிற்சாலைகள் அழிக்கப்பட்டிருந்தால் அவற்றை புனரமைப்பதற்கு வங்கிக்கடன் வதியை ஏற்படுத்திக் கொடுத்தல், பாதிக்கப்பட்ட அரசாங்க உத்தியோகத்தருக்கு இரண்டரை இலட்சம் ரூபாய் வழங்குதல் உள்ளிட்டவை முன்னெடுக்கப்படவுள்ளன´ என அவர் தெரிவித்தார்.