நீரின்றி பாதிக்கப்பட்டுள்ள மூதூர் மக்களைச் சந்தித்தனர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர்
திருகோணமலை – மூதூர் பிரதேசத்தில் நெற்செய்கை நீரின்றி முற்றாக அழிவடையும் நிலையில் காணப்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியிடம் கிராம மக்கள் முறையிட்டதை அடுத்து, இன்றைய தினம் அக்கட்சியின் செயற்பாட்டாளர் இரா.ஞானேஸ்வரன் மற்றும் மாவட்ட அமைப்பாளர் இராஜகோண் ஹரிகரன் மற்றும் உறுப்பினர்கள் கிராம மக்களை சந்தித்து பிரச்சினை குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
திருகோணமலை – மூதூர் – மூதூர் பிரதேச பாலத்தடிசேனை, பட்டித்திடல், பச்சனூர், ஒட்டுப்புலவட்டை, சம்மாற்துரை கிராமங்களில் உள்ள சுமார் 2500 ஏக்கர் வயல்களுக்கு போதிய நீர் வயல் நிலங்கள் கடந்த 15 நாட்களான நீரின்றி பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மகாவலி கங்கையிலிருந்து வரும் நீரை சிஐடி மற்றும் ரணசிங்க என்ற தடைப்பாலத்தில் சிங்கள மக்கள் இடைமறித்து, வேறு இடங்களுக்கு அனுப்பவதாக விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனால் நெற்செய்கை நீரின்றி முற்றாக அழிவடையும் நிலையில் உள்ளதாகவும், தமக்கான தீர்வினைப் பெற்றுத்தர உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் ஐபிசி தமிழ் செய்திக்கு தெரிவித்தனர்.
மேலும், குறித்த வயல் நிலங்களுக்கு ஓரிரு நாட்களுக்குள் நீர் கிடைக்காவிடின், தமது செய்கை முற்றாக அழிவடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
வீணாக விரயமாகின்ற தண்ணீரை தங்களுக்கு வழங்கினால் தமது விளைச்சல் நிலங்கள் செழிப்படையும் எனவும் அம்மக்கள் அங்கலாய்கின்றனர்.
தமது காதிலிருக்கின்ற ஆபரணங்களை கூட அடகு வைத்து தான் விவசாயத்தை மேற்கொண்டு வருவதாகவும் உரிய அதிகாரிகளிடம் கதைத்த போதிலும் முகம் கழுவுகின்ற அளவில் தான் தண்ணீர் தங்களுக்கு கிடைக்கப்பெறுவதாக இக்கிராம விவசாயிகள் தெரிவித்தனர்.
கிழக்கு மாகாணத்திலுள்ள மாவிலாற்றிலிருந்து சிங்களப் பிரதேசத்திற்கு செல்லும் நீரை விடுதலைப்புலிகள் வழி மறித்ததை அடுத்து நாட்டில் மிகப்பெரிய யுத்தம் ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.