Breaking News

மியான்மரில் இந்திய இராணுவத்தினர் தாக்குதல்! 100 மேற்பட்ட தீவிரவாதிகள் பலி

மியான்மரில் இந்திய ராணுவம் நடத்திய 45 நிமிட அதிரடி தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பலியாகி இருக்கலாம் என்று உள்துறை வட்டார தகவல்கள் வெளியாகி உள்ளது. 

வடகிழக்கு மாநிலங்களில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு மியான்மருக்கு ஓடிவிடுவதை தீவிரவாதிகள் வழக்கமாக கொண்டு உள்ளனர். மணிப்பூரில் கடந்த 4–ந் திகதி ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினர் மீது தீவிரவாதிகள் அதிபயங்கர தாக்குதல்கள் நடத்தினர். குண்டுகளை வீசியும், துப்பாக்கிகளால் சுட்டும் நடத்திய இந்த தாக்குதல்களில் 18 வீரர்கள் உயிரிழந்தனர். மணிப்பூர் தாக்குதல்களில் தொடர்புடைய தீவிரவாதிகள், மேலும் தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அவர்கள் மியான்மர் பகுதியில் பதுங்கி இருப்பதாகவும் உளவுத்தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து ராணுவம் உஷாரானது. அதிரடி நடவடிக்கைக்கு தயாரானது. 

நேற்று காலை மியான்மர் எல்லைக்கு அப்பால், தீவிரவாதிகளை குறிவைத்து இந்திய ராணுவம் தனது கமாண்டோக்களை கொண்டு அதிரடி தாக்குதல்களை நடத்தியது. சுமார் 45 நிமிடங்கள் மட்டுமே நடத்தப்பட்ட அதிரடி தாக்குதல்களில் 100-க்கும் அதிகமான தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று உள்துறை வட்டார தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இந்திய ராணுவ தரப்பில் எதுவும் இல்லை. தாக்குதலில் காயம் அடைந்த 6 தீவிரவாதிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்திய–மியான்மர் எல்லையில் 2 இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளது. இந்திய ராணுவம் தாக்குதல் தொடுத்த போது மியான்மர் ராணுவம் சுற்றிவளைத்து இருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

மணிப்பூர் எல்லை மற்றும் மியான்மர் உள்புறத்தில் இந்திய ராணுவம் தனது அதிரடி தாக்குதலை, நேற்று அதிகாலை மூன்று மணிக்கு தொடங்கியது என்றும், ஆனால் இதுதொடர்பான ஆவணங்களை இந்திய தூதர் நேற்று மியான்மர் வெளியுறவுத்துறை அலுவலகம் திறந்த பின்னரே ஒப்படைத்தார் என்றும் தகவல்கள் தெரிவித்து உள்ளன.