‘வடக்கின் வசந்தம்’ திட்டத்தில் வழங்கப்பட்ட இலவச மின்சார விநியோகம் நிறுத்தம்! நெருக்கடியில் மக்கள்
கிளிநொச்சி உட்பட வன்னி பிரதேசத்தில் ‘வடக்கின் வசந்தம்’ திட்டத்தின் கீழ் இது வரை காலமும் மீள்குடியேறிய பிரதேசங்களில் வழங்கப்பட்டு வந்த இலவச மின்சார விநியோகம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
திடீரென வடக்கின் வசந்தம் இலவச மின்னிணைப்பு நிறுத்தப்பட்டமையினால் வன்னியில் மீள்குடியேறிய நிலையில் மிகவும் பொருளாதார நெருக்கடிக்குள் வாழ்ந்து வரும் மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களை கொண்ட பிரதேசங்களே தற்போது வரையில் மின்சாரம் கிடைக்கப்பெறாத பகுதிகளாக காணப்படுகின்றன.
எனவே இலவச மின்னிணைப்பு நிறுத்தப்பட்டுள்ளமையானது அவர்களைப் பெரிதும் பாதித்துள்ளது. வடக்கின் வசந்தம் திட்டத்தின் மின்னிணைப்புப் பணிகள் இடம்பெற்று வந்த காலகட்டங்களில் மின் உபகரணங்களின் தட்டுப்பாடு, திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டில் தாமதம் உள்ளிட்ட காரணங்களால் எல்லாப் பிரதேசங்களுக்கும் மின்சார இணைப்பு வழங்க முடியாது போய்விட்டது. இந்த நிலையில் தற்போது வடக்கின் வசந்தம் திட்டத்தின் திடீர் நிறுத்தம் பெருமளவுக்கு வறிய மக்களையே பாதித்துள்ளது.
இந்த நிலையில் பணம் செலுத்தி மின்சாரத்தைப் பெறவேண்டும் எனில் 50 மீற்றருக்குள்ளாகக் காணப்படும் பட்சத்தில் 20,650 ரூபாவும் அதற்கு மேல் அதிகரித்த தொகையும் செலுத்த வேண்டியுள்ளது.
யுத்தப் பாதிப்புக்குள்ளாகி மீள்குடியேறிய மக்களால் செலுத்தமுடி-யாத நிலையே காணப்படுகிறது. இது தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், முன்னாள் மீள்குடி-யேற்ற பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், மின்சக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகியோரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளமையும் குறிப் பிடத்தக்கது.